வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், ராணிப்பேட்டை, அரியலூர், ராமநாதபுரம், திருவாரூர், பெரம்பலூர் ஆகிய 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் (காலை 10 மணி வரை) மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். அதே சமயம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம். உள்ளூரில் பெய்து வரும் மழை நிலவரத்தை பொறுத்து தலைமை ஆசிரியர்களே விடுமுறை அறிவிக்கலாம். மாணவர்களின் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் கூடுதல் கவனம் செலுத்த தலைமை ஆசிரியர்களுக்கு என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அறிவித்துள்ளார். அதே போன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.