மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடிக்காமல் இருக்க, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணியை அமைக்கும் திட்டத்தில் இருக்கின்றன. அதற்கான சந்திப்புகளையும், பேச்சுவார்த்தைகளையும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்தவண்ணம் இருக்க, பா.ஜ.க.வைத் தோற்கடிக்க எந்த எல்லைக்கும் செல்ல காங்கிரஸ் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. அதன்படி, 50 சதவீதம் தொகுதிகளை எதிர்க்கட்சிகளுக்காக ஒதுக்கித் தருவதற்கு காங்கிரஸ் தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பா.ஜ.க. எதிர்ப்பு மனநிலையில் உள்ள கட்சிகளை ஒன்றிணைத்து, பீகாரில் அமைத்தது போல் மெகா கூட்டணி அல்லது ‘மகாகத் பந்தன்’என்ற கூட்டணியை அமைக்கும் திட்டத்தில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. அந்தக் கூட்டணியில் மாநிலக் கட்சிகளுக்கு அதிகப்படியான தொகுதிகளை ஒதுக்குவதன் மூலம் 250 தொகுதிகளில் மட்டும் களமிறங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக பல்வேறு கட்ட கூட்டங்களை காங்கிரஸ் நடத்திவருகிறது. மேலும், தேர்தலில் தொகுதிப்பிரிப்பிற்காக முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனி தலைமையில் குழு அமைத்து திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. 250க்கும் குறைவான தொகுதிகள் என்பது காங்கிரஸுக்கு மிக குறைவு. குறிப்பாக சொல்லப்போனால் இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து காங்கிரஸ் இவ்வளவு குறைவான தொகுதிகளில் போட்டியிட இருப்பது இதுவே முதன்முறை. மெகா கூட்டணியமைத்து பா.ஜ.க.வை எதிர்ப்பது என்பது அரசியல்வாதிகளையும் தாண்டி மக்களின் உணர்வாக அது இருக்கிறது என ராகுல்காந்தி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.