Skip to main content

தொடங்கியது தேர்தல் பரப்புரை; மத்திய அரசை வெளுத்து வாங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Chief Minister M.K. Stalin Election campaign started

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் அடிப்படையில் வெளியான பட்டியலில் தென்சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை - தயாநிதிமாறன், வடசென்னை - கலாநிதி வீராசாமி, ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர். பாலு, அரக்கோணம் - ஜெகத்ரட்சகன், தஞ்சை - முரசொலி, தருமபுரி - ஆ. மணி, ஆரணி - எம்.எஸ். தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி - மலையரசன், காஞ்சிபுரம் - செல்வம், சேலம் - டி.எம். செல்வகணபதி, ஈரோடு - பிரகாஷ், நீலகிரி - ஆ. ராசா, வேலூர் - கதிர் ஆனந்த், கோவை - கணபதி ராஜ்குமார், திருவண்ணாமலை - சி.என். அண்ணாதுரை, பெரம்பலூர் - அருண் நேரு, பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி, தேனி - தங்க தமிழ்ச்செல்வன், தூத்துக்குடி - கனிமொழி, தென்காசி - ராணி ஸ்ரீகுமார் என வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குச் சேகரிக்க உள்ளார். அந்த வகையில் இன்று (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற  பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

Chief Minister M.K. Stalin Election campaign started

இந்த பொதுக் கூட்டத்தில் முதலவ்ர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “திருச்சி என்றாலே தி.மு.க.தான். திருச்சியில் இருந்து தொடங்கும் பாதை எப்போதும் வெற்றிப்பாதைதான். தி.மு.க.வினருக்கு தூக்கம் வரவில்லை என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். தோல்வி பயத்தில் அவருக்குத்தான் தூக்கம் வரவில்லை. தேர்தல் என்பதாலே பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார். தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தாலே பிரதமர் தமிழகம் வருகிறார். கடந்த 10 ஆண்டுகாலமாக ஆட்சி செய்த பிரதமர் மோடியால் தமிழகத்திற்கு செய்த ஒரு திட்டத்தை கூட சொல்ல முடியவில்லை. தோல்வி பயம் பிரதமர் மோடியின் கண்களிலும் முகத்திலும் தெரிகிறது. பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தி இந்தியா கூட்டணியை ஆட்சியில் அமர வைக்க வேண்டும். 10 ஆண்டுகால பா.ஜ.க. அரசுக்கு தேர்தல் பத்திர ஊழல்தான் எடுத்துக்காட்டு. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் பா.ஜ.க. அரசின் ஊழல்கள் வெளியே வரும்.

கடும் நிதி நெருக்கடியில் கூட தி.மு.க. அரசு கடந்த 3 ஆண்டுகளில் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. ஆனால் மத்திய அரசு வெள்ள நிவாரண நிதியைக் கூட தர மறுக்கிறது. எவ்வளவு வாய்க்கொழுப்பு இருந்தா, மக்கள் வாங்கும் நிவாரணத் தொகையை பிச்சைனு சொல்வீங்க. மக்களுக்கு கொடுப்பது பிச்சை அல்ல. அவர்களது உரிமை. உங்களது அரசியலுக்காக மக்களை இழிவுபடுத்துவீர்களா?. மக்களுக்கு நிவாரணம் கொடுக்க முடியவில்லையென்றால் ஏன் நிதியமைச்சர் பதவி வகிக்க வேண்டும். தமிழக ஆளுநரை வைத்து மாநில அரசை மிரட்டி பார்க்கின்றனர். தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டங்களை தெரிவித்துள்ளது. பொன்முடியின் பதவியேற்பு மூலம் ஆளுநர் மாளிகையில் இருந்து தேர்தல் பயணம் தொடங்கியுள்ளது. ஆளுநரிடம் ஒரு மரியாதைக்கு பொக்கே கொடுத்துட்டு, ‘இங்கிருந்து பிரசாரம் தொடங்குகிறது’ என சொல்லிவிட்டு வந்தேன். அதற்கு அவரு, ‘பெஸ்ட் ஆப் தி லக்’னு சொல்லி அனுப்புனார். ராஜ் பவனில் தொடங்கிய இந்த பயணம் குடியரசுத் தலைவர் அலுவலகம் வரை போகும்.

பா.ஜ.க. செய்த அத்தனை துரோகங்களுக்கும் துணையாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. துரோகங்களை செய்து விட்டு தற்போது கூட்டணி முறிந்துவிட்டதாக நாடகமாடுகிறார். பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கள்ளக் கூட்டணி வைத்துள்ளார். பாஜகவை ஏன் இபிஎஸ் அழுத்தமாக எதிர்க்கவில்லை. எடப்பாடி பழனிசாமி வைத்துள்ள கள்ளக் கூட்டணி விரைவில் வெளியே வரும்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.