சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் ஜூன் 19- ஆம் தேதி முதல் மீண்டும் முழு பொதுமுடக்கம் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா பரவலை தடுக்க சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஜூன் 19- ஆம் தேதி இரவு 12.00 மணிமுதல் ஜூன் 30- ஆம் தேதி இரவு 12.00 மணிவரை மீண்டும் முதல் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் 12 நாட்கள் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது
காய்கறி கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்க்குகள் காலை 06.00 மணிமுதல் மதியம் 02.00 மணி வரை மட்டுமே செயல்படும். காய்கறி, பழங்களை விற்பனை செய்யும் நடமாடும் கடைகளுக்கும் மதியம் 02.00 மணிவரை மட்டுமே அனுமதி. சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி இல்லை. சரக்கு போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு எவ்வித தடையும் கிடையாது.
மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவை வழக்கம்போல் இயங்கும். உணவகங்களில் காலை 06.00 மணிமுதல் இரவு 08.00 மணிவரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி. அவசர மருத்துவ தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி போன்றவை அனுமதிக்கப்படும். முழு பொதுமுடக்க காலத்தில் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்பட மாட்டாது.
ஏடிஎம் மற்றும் அது சார்ந்த வங்கிப்பணிகள் மற்றும் போக்குவரத்து வழக்கம்போல் செயல்படும். முழு பொதுமுடக்க காலத்தில் மட்டும் வங்கிகள் 33% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். முழு பொதுமுடக்க காலத்தில் காலை 08.00 மணிமுதல் மதியம் 02.00 மணிவரை ரேஷன் கடைகள் செயல்படும்.
சென்னை காவல் எல்லைக்குட்ப்பட்ட பகுதிகளில் அனைத்து அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் தலா ரூபாய் 1,000 வழங்கப்படும். அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம், பிற நலவாரிய உறுப்பினர்களுக்கு தலா ரூபாய் 1,000 நிவாரணம் வழங்கப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர், பூவிருந்தவல்லி, ஈக்காடு, சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு, மறைமலைநகர் நகராட்சி, நந்திவரம், கூடுவாஞ்சேரி ஆகிய பேரூராட்சிகளில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது. அதேபோல் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ரேஷன் கடைகள் இயங்காது; நிவாரணப் பொருட்கள் வீடு தேடி வரும். மாநில அரசுத்துறைகள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படும்.
சென்னையில் இருந்து பிற மாவட்டங்கள் செல்ல தகுந்த ஆதாரங்களைச் சமர்ப்பித்தால் மட்டுமே இ -பாஸ் தரப்படும். திருமணம், மருத்துவம், இறப்பு போன்றவற்றுக்காக செல்ல தகுந்த ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
சென்னையில் பி.சி.ஆர். பரிசோதனை செய்துக்கொண்ட தொழிலாளர்கள் தொழிற்சாலையில் பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை வளாகம் அல்லது அதன் அருகிலேயே தங்க வைக்கப்பட்டு பணிபுரிய அனுமதி அளிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து மற்ற இடங்களுக்கு செல்லும் தொழிலாளர்களும் பி.சி.ஆர். சோதனை செய்ய வேண்டும். சென்னையில் பொது முடக்க காலத்தில் தினந்தோறும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல அனுமதி இல்லை. அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி செய்யும் ஆலைகள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செயல்பட வேண்டும். 12 நாட்களுக்கு பணியிடத்திலேயே தங்கிபணிபுரியும் தொழிலாளர்களைக் கொண்ட கட்டுமான பணிக்கு அனுமதி.
ஜூன் 21, ஜூன் 28 ஆம் தேதிகளில் எந்தவித தளர்வும் இன்றி முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும். ஜூன் 20- ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணிமுதல் ஜூன் 22- ஆம் தேதி காலை 06.00 மணிவரை முழு பொதுமுடக்கம். இரண்டு நாட்களிலும் பால் விநியோகம், மருத்துவம் சார்ந்த சேவைகளுக்கு மட்டுமே அனுமதி. இரண்டு நாட்களிலும் அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகனங்களுக்கு அனுமதி.
கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்படாது. 104 மற்றும் 108 சேவைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் 2 கி.மீ தொலைவிற்குள் பொருட்களை வாங்க வேண்டும்.
அம்மா உணவகங்கள், ஆதரவற்றோருக்காக உள்ளாட்சி, அரசால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் செயல்படும். நீதித்துறை மற்றும் நீதிமன்றங்கள், தொண்டு நிறுவனங்கள், ஊடகங்கள், பிற அமைப்புகள் இயங்க அனுமதி அளிக்கப்படும்.
பல கட்டுப்பாடுகளை விதித்தாலும் மக்கள் ஒத்துழைப்பு இல்லையெனில் நோய் பரவலைத் தடுக்க முடியாது. பொது மக்கள் வெளியில் செல்லும்போது, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம். அரசின் முயற்சிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.