கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 21 நாள் ஊரடங்கு நாளையுடன் நிறைவடையும் நிலையில், ஒடிஷா, பஞ்சாப், மகாராஷ்டிரா தெலங்கானா உள்ளிட்ட மாநில அரசுகளும் ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்து வருகின்றன. மேலும் பல்வேறு மாநில அரசியல் கட்சித் தலைவர்கள், முதல்வர்கள், வல்லுநர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை (14/04/2020) காலை 10.00 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இதில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நான்காவது முறையாக நாட்டு மக்களிடையே பிரதமர் உரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.