சென்னை மாதவரம் ரவுண்டான அருகில் உள்ள ஒரு ரசாயன கிடங்கில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பெரும் தீவிபத்து தொடர்பாக மாதவரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தற்போது தீயை அணைக்கும் முயற்சியில் 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளது.
மருந்து தயாரிக்க தேவையான மூலப்பொருள்கள் வைக்கப்படும் இந்த ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தால் அந்த கிடங்கின் அருகில் இருந்த சுமார் 10க்கும் மேற்பட்ட கடைகளில் தீ பரவியுள்ளது. அந்த பகுதிக்கு மக்கள் வரவேண்டாம் என பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் கண்ணெரிச்சல் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட இன்னும் மூன்று மணிநேரம் ஆனால் கூட தீயை கட்டுப்படுத்துவது கடினம் என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 8 தீயணைப்பு வாகனங்கள் தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு தொற்றியுள்ளது. மேலும் அந்த கிடங்கில் யாரேனும் ஆட்கள் உள்ளானாரா என்றுகூட அறியமுடியாதநிலை அங்கு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் ரசாயனம் என்ன என்று தெரியாததால் தண்ணீர் பயன்படுத்தி அணைக்க முடியாமலும், நுரைகொண்டு அணைக்க முடியாமலும் என்ன செய்வதென்று தெரியாமல் தீயணைப்பு துறையினர் தவித்து வருகின்றனர். தண்ணீர் ஊற்றி அணைத்தால் அந்த ரசாயனத்தில் வேதியியல் மாற்றம் நடைபெற்று மேலும் ஏதேனும் ஆபத்து ஏற்படும் என தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விண்ணைமுட்டும் அளவிற்கு தீப்பிழம்புடன் கரும்புகை எழுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.