pநாகை மாவட்டத்தையே பரபரக்க வைத்த அமைச்சர் ஒ.எஸ், மணியனின் உதவியாளரும், அதிமுக மிரமுகருமான மணல் பாபுவின் படுகொலையில் அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் கசியத் துவங்கியுள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ள எடமணல் வருஷபாத்து கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ரமேஷ் பாபு என்கிற மணல்பாபு. வேன் டிரைவராக காலத்தை சிலகாலம் கழித்தவர். பிறகு 2001ல், சீர்காழி தொகுதியில் அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.வாக இருந்த சந்திரமோகனுக்கு பர்சனல் உதவியாளராக இருந்து அதன்மூலம் பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, சிறு,சிறு ஒப்பந்தப் பணிகளை செய்துவந்தார்.
காலப்போக்கில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியோடு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு பெரிய அளவில் ஒப்பந்த பணிகளை செய்துவந்தார். சீர்காழி அகல ரயில்பாதை திட்டத்திற்கு சவுடுமணல் அடித்தது, வெளிவட்ட சாலைக்கு மணல் அடித்தது என பெரிய அளவில் பல கோடிகளை சம்பாதித்தார். அதோடு கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்துவது, விளைநிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி அதன் கீழே உள்ள மணலை அள்ளி விற்பது என பல தொழில்களில் ஈடுபட்டு பல கோடிக்கு அதிபதியானார். அதோடு நாகை மாவட்டத்தில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாகவும் வளர்ந்து வந்தார்.
பணம் குவிந்த அளவிற்கு, அரசியல் வட்டத்திலும், பொது வெளியிலும் எதிர்ப்புகள் அதிகமானது. இந்த சூழலில் பாதுகாப்பிற்காக துப்பாக்கியும் வைத்திருந்தார்.
இந்தநிலையில் கடந்த 23ம் தேதி சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் உள்ள ஒப்பந்தக்காரர் ஒருவரை சந்தித்து விட்டு, செல்போனில் பேசியபடியே காருக்கு வந்தவரை இரண்டு டூவிலரிலும் ஒரு காரிலும் வந்த 8 பேர் கொண்ட கும்பல் அவர்மீது குண்டுவீசி அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலைசெய்தனர்.
கொலையாளிகளை கண்டுபிடிக்க 4 தனிப்படை அமைத்து விசாரணை நடந்துவரும் நிலையில், ஆக்கூர் வேப்பஞ்சேரியில் கொலையாளிகள் பயன்படுத்திய கார் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்மூலம் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையில் பாபுகொலை வழக்கில் சேலம் ஜெ.எம். 2 கோர்ட்டில் புதுச்சேரி சாத்தமங்கலத்தைச் சேர்ந்த பிரேம்நாத், திருவாரூர் நீடாமங்கலம் ஆதனூரைச் சேர்ந்த கட்டபிரபு, சீர்காழி புதுத்துறையைச் சேர்ந்த பார்த்திபன் ஆகியோர் சரணடைந்துள்ளனர். அதோடு, வேலூர் சிறையிலிருந்த திருச்சி குணாவையும், தளபதியையும் கஸ்டடியில் எடுத்து தஞ்சையில் விசாரித்து வருகின்றனர்.
இந்த சூழலில் மணல் பாபு படுகொலை செய்யப்பட்ட, அன்றிரவே எடமணலில் உள்ள அவரது சொந்த வீட்டின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு பீரோ, கட்டில் மெத்தைகள் கலைந்து கிடந்தது. மறுநாள் வீட்டு வேலைக்காரர் பார்த்து விட்டு போலீசாரிடம் கூறினார். அங்கு சென்று ஆய்வு செய்த காக்கிகள் திருடு எதுவும் போகவில்லை, என கூறியுள்ளனர். அந்த வீட்டில் பாபு சில ஆவனங்கள் வைத்திருப்பதை எடுக்கவே இந்த கொள்ளைமுயற்சி நடந்திருப்பதாக அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து பாபுவிடம் நெருக்கமான காக்கி ஒருவர் நம்மிடம், "பாபுவின் கொலைக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் தலையீடு இருக்கு, கொலையாளிகளுக்கு 3 கோடி பேசி 1 கோடி கைமாறியிருக்கிறது. கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளும் டெண்டர் கல்லணை முதல் கடல் எல்லையான காட்டூர் வரை எடுக்க அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டார் மணல்பாபு. இது அதிமுகவினர் பலரையும் அதிர வைத்தது. "நம்மை மிஞ்சிடுவான் போலிருக்கே" என்கிற கோபம்தான் இந்த கொலைக்கு முக்கிய காரணம்.
ரமேஷ் பாபுவிற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியோடுதான் அதிக நெருக்கம், பிறகுதான் சிட்டிங் அமைச்சர் ஓ.எஸ்.மணியனோடு நெருக்கமாகியிருக்கிறார். ஆக அமைச்சர்கள் குறித்தான ஆவணங்களை அவரது சொந்த ஊரில் உள்ள எடமனல் வீட்டில்தான் வைத்திருந்திருக்கிறார். அதோடு அமைச்சர் பெருமக்களின் கசமுசா வீடியோக்களும் பாபுவிடம் இருந்திருக்கிறது. அதை தேடிதான் சென்றுள்ளனர். அந்த வீட்டில் இருந்த ஒரு லேப்டாப் மற்றும் மூன்று பென்டிரைவ் திருடு போயிருக்கு. ஆனால் எதுவுமே திருடு போகலன்னு காவல்துறை மழுப்புறாங்க." என்றார்.
காவல்துறை எதுக்கு மழுப்பனும் என்கிற புது குழப்பமும் சீர்காழி பகுதியில் புயலாக கிளம்பியுள்ளது.