உலகப்புகழ்பெற்ற பணக்கார கடவுள்களில் ஒருவர் திருப்பதி ஏழுமலையான். உலகத்தின் பல பகுதிகளில் இருந்து தினமும் லட்சத்துக்கு குறையாத பக்தர்கள் வருகிறார்கள். கோடிகளில் வரும் வருமானத்தை கொண்டு தனி நிதி நிலை அறிக்கையே தயாரிக்கிறது திருப்பதி திருமலை தேவஸ்தானம் போர்டு. ஆந்திராவில் பல இடங்களில் இலவச திருமண மண்டபங்கள், குடிநீர் திட்டங்கள், கோயில் புனரமைப்பு பணிகளில் ஈடுப்படுகின்றன.
தினந்தோறும் லட்சத்துக்கும் குறையாத பக்தர்கள் வருகை, ஆண்டு தோறும் இரண்டாயிரம் கோடிக்கு மேலான வருமானம் பார்க்கும் திருப்பதி - திருமலை தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவர் பதவி மற்றும் உறுப்பினர் பதவியை பிடிக்க ஆந்திரா அரசியல் மற்றும் தொழிலதிபர்களிடையே பெரும் போராட்டமே நடக்கும். அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர் பதவி வெளியில் இருப்பவர்களுக்கு அலங்கார பதவி. ஆனால் அது அலங்கார பதவியல்ல. பிரதமர் அலுவலகம், உச்சநீதிமன்றம், ஏன் ஜனாதிபதி அலுவலகம் வரையே அதிகார மட்டத்தில் உள்ளவர்களிடம் வெகு சுலபமாக நெருக்கத்தை ஏற்படுத்தி தரும் பதவி. அதனாலயே இந்த பதவியில் அமர துடிப்பார்கள். கோடிகளில் செலவு செய்வார்கள்.
தற்போது திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவில் ஒரு தலைவர், 14 உறுப்பினர்கள், மூன்று அறநிலையத்துறை அதிகாரிகள் என 18 பேர் நியமிக்கப்படுவார்கள். தலைவர் பதவியில் ஆந்திராவை சேர்ந்தவர் மட்டுமே நியமிக்கப்படுவர். 14 உறுப்பினர் பதவியில் தெலுங்கானா மற்றும் தமிழகத்தின் சார்பில் தலா 2 பேர், கர்நாடகாவின் சார்பில் 1 வர் என 5 பேர் போக மீதி இடங்களில் ஆந்திராவை சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
தெலுங்கானா, தமிழகம், கர்நாடகத்தின் சார்பில் நியமிக்கப்படும் உறுப்பினர்களை அந்தந்த மாநில அரசு சிபாரிசு செய்யும் ஆந்திரா அரசு ஏற்றுக்கொண்டு நியமனம் செய்யும். இது நடைமுறை. இந்த மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் தரக்காரணம், இங்கிருந்து தான் அதிகளவில் பக்தர்கள் திருப்பதி வருவதால் தான் இந்த பிரதிநிதித்துவம். தமிழகத்துக்கு மட்டும் கூடுதல் சலுகை தரக்காரணம்.
திருப்பதி வெங்கடேசபெருமாளை திருமலையில் சிருஷ்டித்தது ராமானுஜர் என்கிறது புராணம். கோயிலை கட்டியது தமிழர். சுதந்திரத்துக்கு பின் மொழிவாரி மாநிலமாக பிரியும் வரை சென்னை மாகாணத்தோடு, தமிழர்களின் ஆதிக்கத்தில் இருந்தது திருப்பதி கோயில். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபின் அந்த கோவில் ஆந்திராவுக்கு சென்றுவிட்டது. சுதந்திரத்துக்கு முன்பிருந்து திருப்பதி திருமலை தேவஸ்தானம் என்கிற போர்டு செயல்பட்டுவருகிறது. அதற்கான அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஆந்திரா அரசு நியமித்துவருகிறது.
2015 முதல் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக இருந்த கிருஷ்ணமூர்த்தியின் பதவிக்காலம் 2017 ஏப்ரல் மாதம் 27ந்தேதி முடிவுற்றது. புதிய அறங்காவலர் குழு நியமிக்கப்படாமல் கடந்த ஓராண்டாக 3 சிறப்பு அதிகாரிகளின் தலைமையின் கீழே நிர்வாகம் நடைபெற்று வந்தது. கடந்த ஓராண்டாக காலியாக இருந்த பதவிகளை பிடிக்க ஆந்திராவில் பெரும் போட்டியே நடைபெற்றுவந்தது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 20ந்தேதி புதிய அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். புட்ட சுதாகர் யாதவ் என்பவரை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராகவும், உறுப்பினர்களாக எம்.எல்.ஏக்கள் சிவாஜி, போண்டா உமாமகேஸ்வரராவ், வெங்கலபுடி அனிதா, பார்த்தசாரதி எம்.எல்.ஏ, எம்.பி ராயப்பட்டி சாம்பசிவராவ், ராமகிருஷ்ணரெட்டி, ரமேஷ்பாபு, பத்மராஜ்யூ, மேடா ராமகிருஷ்ணரெட்டி, ஜெகந்நாதன், தெலுங்கானா சார்பில் பெட்டிரெட்டி, வெங்கடவீரய்யா, கர்நாடகா சார்பில் சுதாமூர்த்தி, மகாராஷ்ட்டிரா சார்பில் ஷப்னா முங்கன்திவாரும், மூன்று நிர்வாக அலுவலர்களாக நியமனம் செய்து அரசாணை வெளியிட்டார் முதல்வர் சந்திரபாபுநாயுடு.
தமிழகத்துக்காக இந்த முறை இடம் வழங்காமல் ஏமாற்றியுள்ளது ஆந்திரா அரசு. அறங்காவலர் குழுவில் தமிழகத்துக்கு இடம் வழங்க வேண்டும் என்பது சட்டம்மில்லை என்றாலும் மரபுப்படி உரிமைகளை வழங்கவேண்டும். ஏன் எனில் திருப்பதிக்கு வரும் பக்தர்களில் பாதிப்பேர் தமிழர்கள். அந்த கோவில் ஆந்திராவில் இருந்தாலும் அதன் முழு உரிமை பெற்றவர்கள் தமிழர்கள்.
அதனால் தான் திருப்பதி ஏழுமலையானை வணங்க வருபவர்கள் பாதிக்கும் மேற்பட்டவர்களாக தமிழர்களாக இருக்கிறார்கள். தமிழர்களை கோவிலுக்கு அழைக்கும் ஆந்திரா, அவர்கள் தரும் உண்டியல் பணத்தை பெரும் ஆந்திரா தமிழகத்துக்கு என அவர்கள் எந்த நலத்திட்டமும் செய்வதில்லை. திருமலையில் தமிழக பக்தர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையில் தான் நடத்துகிறார்கள் என்பது நீண்ட கால குற்றச்சாட்டு.
இதுப்பற்றி தமிழக பிரதிநிதி உட்பட யாரும் ஆந்திரா அரசிடம் தங்களது உரிமை குறித்து வலியுறுத்தாததால் ஆந்திரா அரசும், அதிகாரிகளும் தமிழகத்துக்கு துரோகம் செய்வதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த வகையில் தற்போது அறங்காவலர் குழுவில் தமிழகத்துக்கான இடத்தை வழங்காமல் விட்டுள்ளது சந்திரபாபுநாயுடு அரசு.
பக்தர்களே அதிகம் வராத மகாராஷ்ட்டிராவுக்கு இடம் தரப்பட்டுள்ளது. அதிகளவு பக்தர்கள் மற்றும் வருமானம் தரும் தமிழகத்துக்கு இடம் தரப்படவில்லை. இந்த துரோகத்தை தமிழகத்தில் இருந்து இதுவரை யாரும் கேள்வி கேட்கவில்லை. தமிழகத்தை ஆளும் அதிமுக அரசின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் இருவரும் கண்டுக்கொள்ளவில்லை. இதை இப்படியே விட்டால் நாளை இது தொடர்கதையாகிவிடும் என வேதனையை வெளிப்படுத்தினார்கள் திருப்பதி வாழ் தமிழர்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச்சொல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்தியில் ஆளும் பாஜகவின் மோடி அரசாங்கம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. இதனை எதிர்த்து கேள்வி கேட்காமல் அடிமைப்போல் தமிழக அரசு உள்ளதால் தமிழகத்தின் உரிமை பறிப்போகிறது.
இந்நிலையில் திருப்பதி - திருமலை தேவஸ்தானம் அறங்காவலர் குழுவில் தமிழகத்துக்கான உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இதையும் கேள்வி கேட்காமல் அமைதி காக்கிறது தமிழகத்தை ஆளும் அதிமுகவின் எடப்பாடி அரசாங்கம். தமிழகத்தின் உரிமைகள் ஆண்மையற்ற அரசாங்கத்தால் பறிப்போய்க்கொண்டே இருக்கின்றன.