புலம்பெயர் தொழிலாளர்களை மீண்டும் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பும் திட்டத்திற்கு மேற்குவங்க அரசு ஒத்துழைக்காததைக் கடுமையாக விமர்சித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்களை அவரது சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லும் ஷ்ராமிக் ரயில்களைத் தங்கள் மாநிலத்திலிருந்து இயக்க மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்து வருவதாக மத்திய அரசு குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து மம்தா பானர்ஜிக்கு அமித்ஷா எழுதியுள்ள கடிதத்தில், "கரோனா ஊரடங்கால் பல்வேறு மாநிலங்களில் சிக்கியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களைச் சொந்தமாநிலம் அனுப்பி வைக்க மத்திய அரசு உதவி செய்து வருகிறது. ஆனால், மேற்கு வங்க அரசு மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்புத் தர மறுக்கிறது, இது புலம்பெயர் தொழிலாளர்களைப் பெரிதும் துன்பப்படுத்தும்.
ஷ்ராமிக் ரயில்களை இயக்க மேற்குவங்க அரசிடம் இருந்து போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ரயில்களை மேற்குவங்க எல்லைக்குள் அனுமதிக்க மறுக்கிறது அம்மாநில அரசு. மேற்கு வங்கத்தில் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நீங்கள் அநீதி இழைக்கிறீர்கள். உங்களின் இந்தச் செயல் அவர்களை வேதனைப்படுத்தும்.
மேற்கு வங்கத்தில் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் செல்ல ஆர்வத்துடன் இருக்கிறார்கள், அதற்காக மத்திய அரசும் ரயில்களை இயக்கத் தயாராக இருக்கிறது. ஆனால் மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.