"கிரிக்கெட்டுக்காக மகத்தான பங்களிப்பை அளித்ததற்கு வாழ்த்துகள். நீங்கள் விரும்பிய கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் தருணத்தில், நீங்கள் கட்டுப்படுத்திய கண்ணீரின் அளவை நானறிவேன்!' எனப் பதிவிட்டிருக்கிறார் சாக்ஷி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியின் மனைவி. அந்த உருக்கமான பதிவில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன.
மும்பை, டெல்லி, சென்னை மட்டுமே கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துகிறபோது, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தோனியின் வருகை, இந்திய கிரிக்கெட் அணி தொடாத உச்சங்களை சாத்தியமாக்கியது. 2007ல் டி20 உலகக்கோப்பை, 2011ல் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் ட்ராஃபி என ஐ.சி.சி.யின் கோப்பைகளை இந்தியா வசமாக்கினார் தோனி. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை நம்பர் ஒன் இடத்திற்கு கூட்டிச் சென்று இந்திய கிரிக்கெட்டின் பொற்காலத்தை கண்ணில் காட்டியவர் ‘கேப்டன் கூல்’ தோனி. அதனால்தான், 2014ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி, 2017ல் ஒருநாள், டி20 அணிகளின் கேப்டன் பொறுப்பை விட்டுக்கொடுத்தும் 2019 உலகக்கோப்பை வரை தோனியின் வழிகாட்டுதல் இந்திய அணிக்கு தேவைப்பட்டது.
இத்தனைக்கும், 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா வெளியேறிய சமயமே, தோனியின் ஓய்வுகுறித்த குரல்கள் ஒலிக்க தொடங்கின. 2016ல் நடந்த டி20 உலகக்கோப்பை போட்டியின்போது, ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் ஒருவர், தோனியின் ஓய்வு அறிவிப்பு குறித்து கேட்டபோதுகூட, "இப்படியொரு கேள்வியை இந்திய பத்திரிகையாளர் ஒருவரிடம்தான் நான் எதிர்பார்த்தேன்'' என்றவர், தான் ஃபிட்டாக இருப்பதையும் வெளிப்படுத்தினார். தனது ஓய்வு குறித்த விவாதம் கிளம்பும் ஒவ்வொரு முறையும் அதிரடி ஆட்டத்தால் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் தோனிக்கு ஏற்பட்டது.
2019ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு செல்லும் இந்திய அணியில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. அவரை பி.சி.சி.ஐ. ஒதுக்குவதாக ரசிகர்கள் கொந்தளித்தனர். ஆனால், பாராரெஜிமெண்ட் பயிற்சிக்காக இரண்டுமாத ஓய்வில் செல்வதாக அறிவித்து, மீண்டும் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் தோனி. அடுத்தடுத்து இந்திய அணி விளையாடிய எந்த போட்டியிலும் தோனி களமிறங்கவில்லை. பி.சி.சி.ஐ.-யின் வீரர்கள் உடனான ஒப்பந்த பட்டியலில் இருந்து தோனி விடுவிக்கப்பட்டிருந்ததால், இந்திய கிரிக்கெட் அணியில் இனி தோனி இடம்பெறவே போவதில்லை என்பது உறுதியானது. 2020 டி20 உலகக்கோப்பை போட்டியில் தோனி இடம்பெறுவது சந்தேகம்தான் என ஒரு பேட்டியில், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் கூறியிருந்தது வெளிப்படையான அரசியலாகவே பார்க்கப்பட்டது.
காரணம், கவுதம் காம்பீர் தற்போது பா.ஜ.க.வின் எம்.பியாக இருக்கிறார். கிரிக்கெட் வாரியத்தில் செயலாளராக இருப்பவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா. எல்லா துறையிலும் ஆதிக்கம் செலுத்தும் பா.ஜ.க., கிரிக்கெட்டையும் விட்டு வைக்கவில்லை. தோனியின் சொந்த மாநிலமான ஜார்கண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது அவரை பிரச்சார களமிறக்க பா.ஜ.க. தரப்பில் பெரும் முயற்சி எடுக்கப்பட்டது. அரசியல் வலையில் தோனி சிக்கவில்லை. ஜார்கண்ட் தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்து, காங்கிரஸ் கூட்டணி வென்று, ஜே.எம்.எம். தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வரானார். இவை எல்லாமே கிரிக்கெட்டில் தோனியின் இருப்பு குறித்த சந்தேக கேள்விகளை எழுப்பியபடியே இருந்தது.
இந்தியாவின் உலகக்கோப்பை கனவை, கபில்தேவுக்கு பிறகு நனவாக்கியவர் தோனி. "என்றாவது ஒருநாள் தோனி விடைபெறத்தான் வேண்டும். ஆனால், அப்படி நடப்பது இந்திய அணிக்கு பேரிழப்பு'' என்று கருத்து தெரிவித்தார் கபில்தேவ். இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், அணித்தேர்வில் பலமுறை தோனியை ஓரங்கட்டுவதாக செய்திகள் பரவின. அவரே ஒரு பேட்டியில், "அணியின் கட்டமைப்பு என்பது மிகவும் முக்கியம் என்பதால் தோனியை கடந்து வரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்திய அணியில் தோனிக்கு பதிலாக வலுவான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை உருவாக்க முயற்சிக்கிறோம்'' என்று வெளிப்படையாக பேசினார். ஸ்டம்புக்கு முன்பாக பேட்ஸ்மேனாக ஹெலிகாப்டர் ஷாட்டில் அசத்துவதும், ஸ்டம்புக்கு பின்னால் மின்னலாக செயல்படும் விக்கெட் கீப்பராகவும் அசத்தியவர் தோனி.
இளம் வீரர்களை அடுத்த கட்டத்திற்கு தயார்படுத்துவதற்காக சச்சின், சேவாக், யுவ்ராஜ் போன்ற சீனியர்களை ஓரங்கட்டியதாக தோனி மீது விமர்சனங்கள் உண்டு. இப்போது அதே காரணத்தை காட்டி, அரசியல் பின்னணியில் அவரே ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். 39 வயதான தோனி, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது ஆச்சரியமில்லை. ஆனால், அதில் உள்ள அரசியலும் நெருக்கடியும், தோனியின் சாதனைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பிரியாவிடை அளிக்காமல் செய்துவிட்டதாக விமர்சனங்கள் எழுகின்றன.
ஐ.பி.எல் போட்டிகளில் சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடவிருக்கும் மேட்ச்கள் மட்டுமே தல தோனி தன் ரசிகர்களுக்கு மிச்சம் வைத்திருக்கும் விருந்து. தனது கிரிக்கெட் ஓய்வு அறிவிப்பின்போது தோனி கட்டுப்படுத்தியதாக அவரது மனைவி சாக்ஷி சொல்லும் கண்ணீர், தோனியின் ரசிகர்கள் கண்களில் இப்போதும் ததும்பி நிற்கிறது.