அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அவர் நியமித்த மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் படு ஆக்ரோஷமாகப் பேசினார். குறிப்பாக எடப்பாடி வேண்டுமானால் தனிக்கட்சி ஆரம்பித்துப் போகட்டும் என்று பேசியிருந்தார். இந்நிலையில் அதிமுக கொடி மற்றும் சின்னத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்று பன்னீர்செல்வத்திடம் விளக்கம் கேட்டு எடப்பாடி தரப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் கோலப்பனிடம் பேசியபோது, " எப்போதும் அமைதியாக இருந்த அண்ணன் பன்னீர்செல்வம் நேற்று சிறிய அளவில் தான் குரலை உயர்த்திப் பேசினார். அதுவே அமைதியாக இருந்த கடலில் சுனாமி வந்ததை போல் எதிர்த்தரப்புக்கு இருக்கிறது. அதனால் தான் அடித்து பிடித்து விளக்கம் கேட்கிறேன் என்ற போர்வையில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள்.
எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதா? இல்லை கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை ஏற்றுக்கொண்டுள்ளதா? கட்சி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தனி நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார். அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நாங்கள் வழக்குத் தொடுத்துள்ளோம். இவர் அங்கே வந்து வாயிதா வாங்கிக் கொண்டு இருக்கிறார். வழக்கு வரும் 4ம் தேதி வரும் போதும் எடப்பாடி வாய்தா கேட்கப் போகிறார். அவருக்கு அதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. வழக்கைக் கூட எதிர்கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி பயந்து நடுங்குகிறார். நேற்று பன்னீர் அண்ணன் காட்டியது ஒரு சின்ன சீற்றம் தான். அதற்கே எடப்பாடி பயந்து நடுங்குகிறார்.
பன்னீர்செல்வம் அணி என்பது பிரைவேட் கம்பெனி என்று ஜெயக்குமார் கூறியதை பற்றி கேட்கிறீர்கள், அவரெல்லாம் ஒரு அரசியல் தலைவரா? அரசியல் கோமாளியாகத்தான் அவரை நாங்கள் பார்க்கிறோம். கடந்த தேர்தலின் போது முதலமைச்சருக்கு எதிராகச் சவால் விட்டார். என்னுடைய தொகுதியில் நின்று ஜெபித்துக் காட்டுங்கள், மோதி பார்க்கலாம் என்றெல்லாம் சவால் விட்டார். அவரை அறிமுகமே இல்லாத ஒருவரை நிறுத்தித் தோற்கடித்துக் காட்டியுள்ளார்கள். இவரெல்லாம் அரசியல் பேசலாமா? சொந்தத் தொகுதியில் நின்று வெற்றிபெறத் திறமையில்லாத இவர், வீட்டில் சேலை கட்டிக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். சர்க்கஸ் கோமாளி போல் அரசியல் பேசக்கூடாது" என்றார்.