Skip to main content

ஒ.பி.எஸ்-க்கு பக்கபலமாக இருந்த விஜயலட்சுமி பன்னீர்செல்வம்!

Published on 01/09/2021 | Edited on 08/09/2021

 

OPS Wife passes away

 

முன்னாள் துணை முதல்வரும்; அஇஅதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பி.எஸ்-ன் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அதைக் கேட்டு அதிமுகவினர் மட்டுமல்ல எதிர்க்கட்சியினரும்கூட அதிர்ச்சியடைந்து விட்டனர். இந்த விஷயம் கேட்டவுடனேயே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நேரில் சென்று அவருடைய மனைவி விஜயலட்சுமிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு ஓ.பி.எஸ்-க்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். 

 

அதைப்போல்  எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் என ஓ.பி.எஸ். மனைவிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். சசிகலாவும், ஓ.பி.எஸ்.-ஐ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதுபோல் வைகோ உள்ளிட்ட மற்ற கட்சியினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினர். அதைத்தொடர்ந்து ஓ.பி.எஸ்.-இன் சொந்த ஊரான பெரியகுளத்துக்கு விஜயலட்சுமியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. 

 

இந்த விஷயம் ஓ.பி.எஸ்.-இன் சொந்த ஊரான பெரியகுளத்தில் உள்ள உறவினர்களுக்குத் தெரியவே பதறிப் போய்விட்டனர். அதோடு மாவட்டத்திலுள்ள கட்சி பொறுப்பாளர்களும் அதிர்ச்சியடைந்து விட்டனர். இப்படி திடீரென ஓபிஎஸ் மனைவி மாரடைப்பால் இறந்தது ஓபிஎஸ்-க்கும் அவரது குடும்பத்திற்கும் பெரும் இழப்பு. இந்த இழப்பு குறித்து ஓ.பி.எஸ்.-க்கு நெருக்கமாக இருக்கக்கூடிய கட்சிப் பொறுப்பாளர்கள் சிலரிடம் கேட்ட போது, “அண்ணன் ஓ.பி.எஸ்.-இன் மனைவி விஜயலட்சுமியின் சொந்த ஊர் உத்தமபாளையம். அந்தக் குடும்பம் ஆரம்ப காலத்தில் இருந்து வசதியான குடும்பம். தி.மு.க.வில் இன்னாள் நிதி அமைச்சரான பழனிவேல் தியாகராஜனின் தந்தையான பி.டி.பழனிவேல்ராஜனின் பெரும்பாலான நிலங்களை எல்லாம் விஜயலட்சுமியின் தந்தையான அழகு பாண்டி தேவர் தான் விவசாயம் செய்து வந்தார். அதோடு தியாகராஜன் பெயரிலேயே ரைஸ்மில் இன்றுவரை செயல்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு பி.டி.ஆர். குடும்பத்திற்கு நெருக்கமாகவும் வசதியாகவும் இருந்து வந்தவர்தான் விஜயலட்சுமியின் தந்தை. அந்த அளவுக்கு வசதிகள் இருந்தாலும் கூட தனது மகளுக்கு வசதியை விட நல்ல கணவன் வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பெரியகுளத்தில் பால் பண்ணை நடத்தி வந்த ஓட்டகாரத்தேவரின் மகனான ஓ.பி.எஸ்.க்கு திருமணம் செய்து கொடுத்தார். 

 

இவர்களுக்கு, ரவீந்திர நாத் மற்றும் ஜெயபிரதீப் என இரண்டு மகன்களும் கவிதா என்ற ஒரு பெண்ணும் இருக்கின்றனர். அதுபோல் ஓ.பி.எஸ்., அப்பொழுதிலிருந்தே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடத்திலும் மரியாதை கொடுத்துப் பழகுவார். அதோடு தனது மாமனார் முன் உட்காரக்கூட மாட்டார். அந்த அளவிற்கு மாமனாருக்கு மரியாதை கொடுப்பார். அதுபோல் அக்கா விஜயலட்சுமியும் வசதியான குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும்கூட, அண்ணன் ஓ.பி.எஸ். மந்திரி, அடுத்து முதல்வர், அதன்பின் துணைமுதல்வர் போன்ற பதவிகளில் இருந்தபோதும், அதற்கப்புறம் பெரும் வசதி வாய்ப்பு வந்தும் கூட அதை எல்லாம் அக்கா விஜயலட்சுமி பெரிதாக நினைக்கமாட்டார். எப்பொழுதும் ஒரே மாதிரி எளிமையாகத் தான் இருப்பார். 

 

அண்ணன் ஒ.பி.எஸ்.-ஐ பார்க்க வீட்டுக்குப் போனால், “வாங்க அண்ணே எப்படி இருக்கீங்க; சாப்பிடுங்க” என்று பாசத்தோடு கேட்பார். அதிலும் கொஞ்சம் முகம் சோர்வாக இருந்தால் போதும், “என்ன பிரச்சனை அண்ணா முகம் ஒரு மாதிரியாக இருக்கிறது” என்பதையும் கண்டு பிடித்து விடுவாங்க அந்த அளவிற்கு அன்பையும் அனைவரையும் அறிந்து வைத்திருப்பார். அண்ணன் ஓ.பி.எஸ்.வீட்டை விட்டு வெளியே போய்டாருன்னா, அந்தந்த நேரத்திற்கு அக்கா தவறாமல் அண்ணனுக்கு போன் போட்டு “சாப்பிட்டிங்களா” என்று கேட்பார். “இல்லை” என்றால், “உடனே சாப்பிட்டுவிட்டு வேலையைப் பாருங்க சாப்பிடாமல் இருந்தால் உடல் நலம் பாதிக்கும்” என்று  அன்பாகப் பேசுவார். அதன் பின் என்ன சாப்பிட்டார் என்பதையும் கேட்டுக் கொள்வார். அதுபோல், “எந்த பிரச்சினையானாலும் பார்த்துக்கொள்ளலாம் அதற்காக மனசை விட்டுவிடக் கூடாது”  என்பார். 

 

அண்ணன் எங்கு இருக்கிறாரோ அங்குதான் இருப்பார். அந்த அளவிற்கு அண்ணனும் அக்காவை விட்டு இருக்க மாட்டார். அக்காவும் அண்ணனைவிட்டு  இருக்க மாட்டாங்க. கடந்த 2011தேர்தலில் அண்ணனுக்காக போடி தொகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தார். டிடிவி மற்றும் சசிகலாவிடமும் அக்காவுக்கு தனிப்பட்ட முறையில் பழக்கம் இருப்பதால் அண்ணனுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் அக்கா பேசி அந்த பிரச்சினைக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார். அந்த அளவிற்கு குடும்ப ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அண்ணன் ஓபிஎஸ்க்கு அக்கா பக்கபலமாக இருந்து வந்தார். இன்று அக்கா விஜயலட்சுமி திடீரென இறந்தது அண்ணன் ஓபிஎஸ்க்கு தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

அதுபோல் எம்.பி. ரவீந்திரநாத் மற்றும் ஜெயபிரதீப் ஆகிய இரண்டு மகன்கள் மேல் அக்கா அளவிற்கு  அதிகமாகப் பாசம் வைத்துவந்தார். அவர்களும் அக்கா மேல் பாசமாக இருப்பார்கள். இதில் தம்பி ஜெயபிரதீப், அக்கா பெயர் இன்ஷியலைத் தான் போட்டு வருகிறார். அதுபோல் உறுப்பினர்களும் அக்கா மேல் பாசமாகதான் இருப்பார்கள். அந்த அளவிற்கு சம்பந்திகள் முதல் உறவினர்கள் வரை அனைவரையும் அரவணைத்துப் போவார். அக்கா விஜயலட்சுமி மறைவு அண்ணன் ஒ.பி.எஸ். குடும்பத்திற்கு மிகப் பெரும் இழப்பாகிவிட்டது” என்று கூறினார்கள்.