Skip to main content

“என்னுடைய கட்சியை நீங்கள் நிராகரிக்கலாம்; ஆனால் என்னுடைய அரசியலை எவனாலும் நிராகரிக்க முடியாது!” - சீமான்

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

ty

 

சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடப்பு அரசியல் குறித்துப் பேசினார். அவரின் பேச்சு பின்வருமாறு, " என் வீட்டில் குடில் வைத்து முருகப் பெருமான் விழாவை சிறப்பாக கொண்டாடி வருகிறோம். இதையும் கூட பாஜகவினர் பார்த்துவிட்டு ‘இது முருகப் பெருமானே இல்லை’ என்று கூறுகிறார்கள். இவர்கள் என்னவோ முருகனோடு கூடி விளையாடியவர்கள் போல பேசுகிறார்கள். நான் என் முப்பாட்டன் எப்படி இருப்பான் என்ற கற்பனையின் அடிப்படையில் அவனை உருவாக்கி சிக்ஸ் பேக் வைத்தேன். அதைக் கூட அவர்களால் பொருத்துக்கொள்ள முடியவில்லை. இவர்கள் பூராவும் தற்போது கத்துகிறார்கள். உலகம் முழுவதும் முருகனை நிருவி விட்டேன். எல்லாருடைய காலண்டரிலும் என்னுடைய முருகன்தான் இருக்கிறான். என்னையும், என்னுடைய கட்சியையும் நீங்கள் நிராகரிக்கலாம். ஆனால் என்னுடைய அரசியலை எவனாலும் நிராகரிக்க முடியாது. நான் பேசுகிறேன், காயிதே மில்லத் அவர்களைப் பற்றி மூன்று மணி நேரம் நான் பேசுகிறேன். அண்ணன் பழனிபாபா பற்றி 30 மணி நேரம் வேண்டுமானாலும் நான் பேசுகிறேன். ஆனால் ஸ்டாலினை மூன்று நிமிடங்கள் பேச சொல்லுங்கள் பார்ப்போம். குறைந்த பட்சம் எழுதி வைத்தாவது பேச சொல்லுங்கள்.  அவரால் முடியாது. ஆனால் இந்த மக்கள் அவரை தலைவர் என்று அவருக்கு வாக்களிக்கிறார்கள். இவர்களை எப்படி நீங்கள் நம்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. 

 

என் அண்ணன் கூட சொல்கிறார், அன்பாக யாராவது பேசினால் அவர்கள் பின்னால் இவர்கள் சென்றுவிடுகிறார்கள் என்று வருத்தப்படுகிறார். ஒருநாள் தொப்பி போட்டு, நோன்பு கஞ்சி குடித்தால் அவர் இஸ்ஸாமியர் ஆகிவிடுவாரா? ஜெயலலிதா முதல் ஸ்டாலின் வரை அனைவரும் நோன்பு கஞ்சி குடித்துள்ளார்கள். குடிக்காத ஒரே ஆள் உன்னுடைய சொந்த மகன் நான்தான். என் சொந்த தம்பியே இஸ்ஸாத்தை ஏற்றிருக்கிறான். பல தம்பிகள் அந்த மதத்தை ஏற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் ஏன் இந்த விழாக்களுக்கு வருவதில்லை. ஏனென்றால் நான் வேஷம் போட தயாரில்லை. தம்பிகள் ‘அண்ணே’ என்று அழைப்பார்கள், ‘கஞ்சியை வீட்டுக்கு அனுப்பிவிடு, நான் அங்கே வரவில்லை’ என்று கூறிவிடுவேன். ஏனென்றால் நான் உங்களின் உணவுக்கானவன் அல்ல. என்னுடைய உயிரானவர்களே, உங்களின் உணர்வுக்கானவன், உங்களின் உரிமைக்குப் பாடுபடுபவன். நான் இருக்கும்வரை என்னை தாண்டிதான் என் இன மக்களை எவனும் தொட முடியும். வரலாற்றில் இப்போதுதான் ஒரு பகைவனை அவர்கள் சந்தித்திருக்கிறார்கள். சிறுபான்மை, சிறுபான்மை என்று எங்கள் பிள்ளைகளை அச்சுறுத்துகிறார்கள். அப்போதுதான் சலுகை கிடைக்கிறது என்று நம்புகிறார்கள். நமக்கு வேண்டியது சலுகையல்ல, உரிமை. அதைத்தான் நாம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

 

இந்த நாடு என் நாடு. இந்த நாட்டில் ஆகப்பெரும் சிறும்பான்மை கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதாதான். இதுபுரியாமல் நீங்கள் இருக்கிறீர்கள். உலகத்தில் எந்த மனிதனையும் மதம், சாதி அடிப்படையில் கணக்கிடுவதே இல்லை. மொழியின் அடிப்படையில்தான் கணக்கிடுகிறார்கள். ஐரோப்பிய ஒன்றியம் முழுவதற்கும் கிருஸ்துவம் இருக்கிறது. அதில் பல நாடுகள் இருக்கிறது. இருந்தும் ஏன் அனைத்தும் ஒரே நாடாக இருக்கவில்லை. மதம் வேறு, மொழி வேறு என்ற அடிப்படையில் அவைகள் பல நாடுகளாகப் பிரிந்து கிடக்கிறது. 46ல் விடுதலை அடைய வேண்டிய இந்தியா, 47ல் விடுதலை அடைந்ததற்கு மிக முக்கியக் காரணம் முகமது அலி ஜின்னா. அதற்கு காரணம், காந்தி இரண்டு கூட்டங்களில் சிறுபான்மை மக்களின் தலைவர் ஜின்னா நம்முடன் இருக்கிறார் என்று குறிப்பிட்டுச் சொல்லிவிடுகிறார். ‘நாம் பொதுவாகத்தானே போராடுகிறோம், இவர்கள் ஏன் நம்மை சிறுபான்மையினர் என்று கூறுகிறார்கள்’ என்று யோசித்துப் பார்த்தார். கூடவே மதக்கலவரத்தைத் தூண்டுகிறார்கள். அவர் சிந்தித்தார், ‘அந்நிய நாடு நம்மை ஆண்டுகொண்டிருக்கும்போதே நம்மை அவர்கள் சிறும்பான்மையினர் என்று கூறுகிறார்கள் என்றால், இவர்கள் கையில் ஆட்சி வந்துவிட்டால் இவர்கள் நம்மை என்ன செய்வார்கள்’ என்று யோசித்துப் பார்த்து அவர் தனிநாடு கேட்டார். எனவே நான் இப்போதும் சொல்கிறேன். நான் இருக்கும் வரையில் அவர்கள் மீது யாரும் கை வைத்துவிட முடியாது" என்றார்.