எலெக்ட்ரானிக் வடிவில் எமன்
முன்பெல்லாம் எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதானால் அதை சரி செய்து பயன்படுத்தும் வழக்கம் நம்மிடம் இருந்தது, இப்போதெல்லாம் அது ஐபோனாக இருந்தாலும் சரி அல்லது எத்துனை விலை உயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்களாக இருந்தாலும் 'யூஸ் அண்ட் த்ரோ' வழக்கம்தான். இந்த உலகில் எங்கு பார்த்தாலும் எலக்ட்ரானிக் பொருட்கள்தான் கண்ணில் தென்படுகிறது அவை எல்லாம் பழுது அடைந்த பின்னர் என்ன ஆகும் என்று யோசித்தது உண்டா? ஐ.நா வின் புள்ளியியல் படி ,கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 44.7 மில்லியன் டன் எலக்ட்ரானிக் கழிவுகள் இருந்துள்ளது. அதை வைத்து 9 'கைஸா பிரமிடுகள்' கட்டலாம்.இந்த உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் 6.1 கிலோ என்று பிரித்து தரலாம். உலகமே எலக்ட்ரானிக் மயமாக இருக்கும் நிலையில், இந்தியா நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிக்கும் வகையில் கடந்த ஆண்டு மட்டும் 2 மில்லியன் டன் கழிவு கொண்டிருந்தது. இதை ஆளுக்கு தலா 1.5 கிலோ என்று பிரித்து தரலாம்.

இந்தியாவில் எலக்ட்ரானிக் பொருட்கள் என்பது பள்ளி குழந்தைகளின் கையில் இருக்கும் ஸ்மார்ட் போனில் இருந்து ஆரம்பிக்கிறது. ஸ்மார்ட் போன் விற்பனை வளர்ச்சியில் உலக அளவில் பெரிய மார்கெட்டை கொண்டுள்ளது இந்தியா. இந்தியாவின் உள்ள மொத்த எலக்ட்ரானிக் கழிவுகளில் மொபைல் மற்றும் தொலைத்தொடர்பு கழிவுகளே 12 சதவீதம் உள்ளதாம். மொத்தமாக 70 சதவீத தொழிற்சாலை எலக்ட்ரானிக் கழிவுகளும், 15 சதவீத வீட்டு உபயோக கழிவுகளும் அடங்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இத்தனையையும் பயன்படுத்தியிருக்கும் மக்கள், அதை எடைக்கு போட்ட பின்னர் இல்லையெனில் குப்பை கூடங்களில் போட்ட பின்னர் அது எங்கு போகும், என்ன ஆகும், அதனால் என்ன பாதிப்பு ஏற்படும் என்று யோசித்தது உண்டா?

கழிவு என்றாலே அதனை சுத்திகரிக்க வேண்டும், இல்லையெனில் இல்லாத, பொல்லாத நோயிற்கு நாம் ஆளாக நேரிடும். ஏற்கனவே சமாளிக்க முடியாத அளவிற்கு நோய்கள் வந்தாகிவிட்டது (மனிதர்களுக்கு மட்டுமல்ல இயற்கைக்கும் தான்) , இனியும் சுற்றுச்சூழலை காப்பாற்றாமல் விட்டால் அவ்வளவுதான். இதுவரை உபயோகத்தில் இருக்கும் எலக்ட்ரானிக் பொருட்களும் இவைகளுடன் வந்து சேரும். இந்த எலக்டரானிக் பொருட்கள் எல்லாமே மறுசுழற்சி செய்யப்பட வேண்டும், ஆனால் 8.9 மில்லியன் டன்கள் மட்டுமே உலகம் முழுவதிலும் மறுசுழற்சி செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் கழிவாக இருப்பதில் மறுசுழற்சி செய்யப்படுபவை வெறும் 20 சதவீதம்தான் என்பதே ஆச்சரியமானது. எலக்ட்ரானிக் கழிவுகளில் இருந்து கிடைக்கும் விலை உயர்ந்த பொருட்களான தங்கம், வெள்ளி, செம்பு, பிளாட்டினம், பலாடியம் போன்றவையின் மதிப்பு மட்டும் சுமார் 55 பில்லியன் டாலர்கள். அதாவது சிம் கார்டுகளில் மைக்ரோ கிராமிற்கு தங்கம் இருக்கும், அதுபோன்று நிறைய எலக்ட்ரானிக் பொருட்களில் விலை உயர்ந்த பொருட்கள் சேர்க்கப்படும். இப்படி கிடைக்கும் இந்த பொருட்களும் கூட கழிவுகளில் குப்பையாகவே போய்விடுகிறது என்பது நம் ஊர் தங்க விரும்பிகளுக்கு ஒரு சோகமான செய்தி தான்.

இந்த எலக்ட்ரானிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய இந்தியாவில் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட மனிதர்களை உபயோகப்படுத்துகின்றனர். இதனால் அவர்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகளும், நோய்கள் பரவும் அபாயமும் இருப்பதாக ஐ.நா. எச்சரித்துள்ளது. மனிதக் கழிவுகளை அள்ளவே மனிதர்களை பயன்படுத்தும் இந்தியா (நம்மிடம் தூய்மை இந்தியா எனும் திட்டம் உள்ளது, திட்டம் மட்டும் தான் உள்ளது), எலக்ட்ரானிக் பொருட்களை அள்ள என்ன செய்ய போகிறது. 2020ல் இந்தியா வல்லரசு ஆகுமா என்பது கேள்விக்குறிதான், ஆனால் இந்த கழிவுகள் 500 சதவீதம் உயரும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
-சந்தோஷ் குமார்