கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட பல படங்களின் கதையாசிரியரும் எழுத்தாளருமான ரத்னகுமார், இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாறு குறித்து பல்வேறு விஷயங்களை நக்கீரனிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், இந்தியாவில் அமலில் இருந்த குற்றப்பரம்பரை சட்டத்தின் பிண்ணனி குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
பிரிட்டனில் பிரபுக்கள் பரம்பரையாக ஆண்டுவந்த ராஜாக்களிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்றி விடுகின்றனர். இருந்தாலும், பரம்பரையாக ஆண்டுவந்த ராஜா குடும்பத்தினருக்கு கவுரவ பதவி வழங்கப்பட்டது. பின்னர், ஐரிஷை இணைக்க முயற்சித்தபோது பிரிட்டிஷாருக்கு இணையாக ஐரிஷ்காரர்கள் சண்டையிட்டதால் அங்குதான் முதன்முதலாக குற்றப்பரம்பரை சட்டம் கொண்டுவரப்பட்டது. ஐரிஷ் மக்களை மிருகத்தனமாக பிரபுக்கள் வேட்டையாட ஆரம்பிக்கின்றனர். உலகமே அவர்களை காட்டுமிராண்டிபோல பார்க்கிறது. அப்போது எதைச் செய்தாலும் சட்டப்படி செய்யுங்கள் என்று பிரபுக்களை ராணி கேட்டுக்கொள்கிறார். அப்போதுதான் 'கிரிமினல் ட்ரைப்ஸ் ஆக்ட்' என்ற ஒரு சட்டத்தை கொண்டுவர முடிவெடுக்கின்றனர். யார் கிரிமினல் என்று ராணி கேட்டதற்கு, யாரெல்லாம் பிரிட்டிஷின் விருப்பத்திற்கு எதிராக இருக்கிறார்களா அவர்களெல்லாம் கிரிமினல் என்கின்றனர். பின், ட்ரைப்ஸ் என்றால் யார் என்று ராணி கேட்டதற்கு மனிதர்களுக்கும் மிருகத்திற்கும் இடைப்பட்டவர்கள் என்கிறார்கள். மனித சட்டமெல்லாம் அவர்களுக்கு எடுபடாது, காட்டுமிராண்டிகளான அவர்களுக்கு தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்கிறார்கள். விலங்குகள்போல அவர்களை வேட்டையாட வேண்டும் என்பதுதான் அந்தச் சட்டத்தின் மையம். அங்கு அமல்படுத்தப்பட்ட அந்தச் சட்டம்தான் பின்னாட்களில் இந்தியாவில் குற்றப்பரம்பரை சட்டமாக கொண்டுவரப்பட்டது.