மார்ச் -21 உலக டவுன் சிண்ட்ரோம் தினம்
உலக தொழில்நுட்ப வளர்ச்சியில் நாடுகள் எந்தளவுக்கு முன்னேற்றம் அடைகிறதோ, அதே அளவுக்கு மக்கள் நோய்கள் வாங்குவதிலும் முன்னேற்றம் அடைகிறார்கள். புதிய, புதிய நோய்கள் மாதந்தோறும் உருவாகிக்கொண்டே உள்ளது. இதில் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் தவிர, மற்ற மாநிலங்கள் கண்டுக்கொள்ளாத ஒரு நோய் டவுன் சிண்ட்ரோம்.
மனித உடலில் இரண்டு விதமான குரோமோசோம்கள் இருக்கும். பிறக்கும் குழந்தைகள் இந்த இரண்டு குரோமோசோம்களை தாண்டி மூன்றாவதாக ஒரு குரோமோசோம் கொண்டு பிறந்தால் அந்த குழந்தை டவுன் சிண்ட்ரோம் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.
காரணம், மூன்றாவதாக ஒரு குரோம்மோசோம் மனித உடலில் இருந்தால் சில புற்றுநோய்கள், தோல்நோய், இதயநோய், கண் சிறுத்துயிருத்தல், சிறுநீரக பிரச்சனை, தைராய்டு, வலிப்பு, காது கேளாமை போன்ற பிரச்சனைகள் சிறுவயதிலேயே ஏற்பட்டுவிடும். இதற்கு காலம் முழுவதும் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிவரும். அவர்களின் உடல் தன்மைதான் காட்டித்தரும்மே தவிர மற்ற குழந்தைகளைப்போல கற்றுக்கொள்வதில் பிரச்சனையில்லை. ஆனாலும் இவர்களுக்கு சிறப்பு பள்ளிகள் இந்தியாவில் சிலயிடங்களில் மட்டுமே உள்ளன.
வயது அதிகமான பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள நேரிடும்போது, இந்நோய் உருவாகிறது. கர்ப்ப காலத்திலேயே இந்த நோய் உள்ளதா என அறிய முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் அதற்கான விழிப்புணர்வு குறைவாக இருப்பதால் பெரும்பாலும் இதில் மருத்துவர்களும் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. இதனால் ஆயிரம் குழந்தைகள் பிறந்தால் அதில் ஒரு குழந்தை டவுன் சிண்ட்ரோம் நோய் தன்மையோடு பிறக்கிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
இந்த நோயை முதன் முதலில் கண்டறிந்தவர் இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவர் ஜான் லாங்டன் டவுன் என்பவர் தான். இந்நோயை 1862ல் தனது ஆராய்ச்சிகள் மூலம் எப்படி ஏற்படுகிறது கண்டறிந்தார். அதனாலே அவர் பெயரின் பின்பாதி இந்த நோய்க்கு வைக்கப்பட்டது.
உலகளவில் இந்நோயால் இதுவரை சுமார் 30 ஆயிரம் குழந்தைகள் இறந்துள்ளனர். இந்தியாவில் சுமார் 40 ஆயிரம் குழந்தைகள் இந்நோய் தன்மையுடன் இருப்பதாக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. இந்நோய் பற்றிய விழிப்புணர்வு கேரளாவில் ஓரளவு உள்ளது என்பதாலும், இந்நோய்க்கு நீண்ட சிகிச்சையளிக்க வேண்டும் என்பதால் இந்த நோய்க்கான சிகிச்சை இலவசமாக வழங்க கேரளா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் உட்பட மற்ற மாநிலங்கள் இதில் அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்திய உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி, ஐக்கிய நாடுகள் சபை மார்ச் 21ந்தேதியை உலக டவுன் சிண்ட்ரோம் தினமாக அறிவித்துள்ளது. மனித உடலில் குரோமோசோம் 21 என்பது 3வது குரோமோசமாக உருவாவதால் 21/3 என்கிற மருத்துவ அடையாளத்தை குறிக்கும் வகையில் 21ந்தேதி மார்ச் மாதத்தை தேர்வு செய்தனர். 2012 முதல் இதற்கான விழிப்புணர்வு பணியை செய்யும்படி உலக நாடுகளை உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்திவருகிறது.
இது தொற்று நோயல்ல அதனால் மக்கள் அச்சப்படத்தேவையில்லை, இந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும், சாதாரண பள்ளிகளில் இந்த பிள்ளைகளை சேர்க்க வேண்டும், பாசத்தை காட்ட வேண்டும் என்கிறது மருத்துவ உலகம். ஆனால் இதனை செய்ய வைக்க வேண்டிய அரசாங்கம் அசட்டையாக இருக்கிறது.