கண்முன்னே இறந்த குழந்தைகள்: கடைசி வரை போராடிய மருத்துவர்!
உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையில் கடந்த ஆக்ஸ்ட் 10, 11 தினங்களில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் பற்றாக்குறையால், 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர்.
இந்தக் குழந்தைகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதை அறிந்த அந்த மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர் கஃபீல் அகமது, கடைசி வரை போராடி பல குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளார். இருந்தபோதிலும் தன் கண்முன்னேயே அடுத்தடுத்து குழந்தைகள் இறப்பதைக் கண்டு அவர் கதறி அழுதுள்ளார்.
அன்றைய தினம் நள்ளிரவு 2.00 மணிக்கு மருத்துவமனையின் மூளைவீக்க நோயாளிகள் பிரிவில் இருந்து ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் கஃபீலுக்கு அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து, அவர் தன் நண்பர் ஒருவரின் தனியார் மருத்துவமனைக்குச் சென்று மூன்று சிலிண்டர்களை கடனாகப் பெற்று மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இருந்தபோதிலும், அந்த மூன்று சிலிண்டர்களும் 30 நிமிடங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்கவில்லை. இதையடுத்து மீண்டும் தன் காரில் கிளம்பிய கஃபீல், அந்த வார்டில் உள்ள மருத்துவர்களிடம் குழந்தைகளுக்கு ஆக்ஸிஜன் பலூன்களின் வழியாக செயற்கை சுவாசம் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். இது தற்காலிக நடவடிக்கை என்பதால் தனது வேகத்தை அதிகப்படுத்தி இரவு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காக தேடி அலைந்திருக்கிறார்.
இதற்கிடையே மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சப்ளை செய்யும் தனியார் ஒப்பந்ததாரரிடமும் தொடர்ந்து ஆக்சிஜன் சிலிண்டர்களைக் கேட்டுள்ளார். ஆனால், நிலுவைத் தொகை கிடைக்காமல் சிலிண்டர்கள் தரமுடியாது என்று மறுத்துவிட்டனர். அதேசமயம், கஃபீல் மற்ற சில ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளையர்களிடமும் பேசியிருக்கிறார்.
தனக்கு தெரிந்த சில மருத்துவமனைகளில் பேசி 12 சிலிண்டர்களுக்கு மேல் வாங்கி, அதை மருத்துவமனையில் கொடுத்த வேளையில், பல குழந்தைகள் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகியிருந்தன.
ஒருவழியாக கையில் பணம் தந்தால் சிலிண்டர்கள் தரத் தயார் என சப்ளையர்கள் சொன்ன பின், தன் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.10,000 எடுத்துத் தந்து சிலிண்டர்களை வாங்கியிருக்கிறார். இன்னமும் குழந்தைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களின் பற்றாக்குறையால் பலூன்கள் வழியே செயற்கை சுவாசம் தான் கொடுக்கப்பட்டிருந்தது.
இத்தனை போராட்டங்களுக்குப் பின்னும் குழந்தைகள் இறந்ததை எண்ணி கதறி அழுத கஃபீல், ‘உயிர்களைக் காப்பாற்ற முடியாதபோது பணமும், கல்வியும் இருந்து என்ன பயன்? உயிர்களைக் காப்பாற்ற முடியாத பணத்திற்கு என்ன மதிப்பு இருக்கிறது? என் கண்முன்னேயே இத்தனை குழந்தைகள் செத்துப்போகும் போதும், என்னால் எதுவுமே செய்யமுடியவில்லையே’ என்கிறார் உருக்கமாக.
உபி மாநில முதல்வர் யோகி முதல் மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜீவ் மிஸ்ரா வரை ஆளுக்கொரு காரணங்களைச் சொல்லிவிட்டனர். செத்துக் கிடக்கும் புதிய இந்தியாக்கள் இந்த காரணங்களையெல்லாம் ஏற்றுக்கொள்ளுமா?
- ச.ப.மதிவாணன்