மறைந்த வன்னியர் சங்க தலைவர் 'காடுவெட்டி' குரு அவ்வாறு அழைக்கப்பட்டதன் காரணம் குறித்து பலருக்கும் ஒரு ஐயம் உண்டு.
1980களின் ஆரம்பத்தில் டாக்டர் ராமதாஸ், வடமாவட்டங்களெங்கும் இருந்த பல்வேறு சங்கங்களை ஒருங்கிணைத்து வன்னியர் சங்கத்தைத் தொடங்கினார். அவர்களின் கோரிக்கையாக மக்கள் தொகை அடிப்படையில் சாதி வாரி இடஒதுக்கீடு வேண்டுமென்று கேட்டார்கள். முதல்வர் எம்.ஜி.ஆரிடம் கோரிக்கை வைத்தனர். பல்வேறு வழிகளில் கோரிக்கை வைத்தும் கவனிக்கப்படாததால், 1987ஆம் ஆண்டு ஒரு பெரிய போராட்டம் நடத்த முடிவு செய்தார்கள்.வடமாவட்டங்கள் முழுவதும் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு சாலை மறியல் நடத்தப்பட்டது. அப்பொழுது சாலைகளை மறிக்க, வானங்களை தடுக்க சாலையோரம் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு சாலையில் போடப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டன. இந்தப் போராட்டம் தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைத்தது.
போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸ் தாக்கியதில் பலர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் இருந்த முதல்வர் எம்ஜிஆர் திரும்பி வந்து வன்னியர் சங்கம் உட்பட பல்வேறு சாதி சங்கங்களை அழைத்துப் பேசினார். பின்னர் பல கட்டங்களுக்குப் பிறகு 'மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு' தமிழகத்தில் உருவாக்கப்பட்டு பின்னர் கலைஞர் ஆட்சியில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் மரங்கள் வெட்டப்பட்டதால் அந்தப் பெயர், அந்த இமேஜ், பாமகவுடன் ஒட்டியது. இதைப் போக்க, பசுமை தாயகம் இயக்கம் ஆரம்பித்து செயல்பட்டார்கள்.
இப்படி மரத்தை வெட்டிப் போராடியதாலேயே வன்னியர் சங்க தலைவர் குருநாதன், காடுவெட்டி குரு என்று அழைக்கப்படுகிறார் என்று இன்று வரை பலரும் நம்புகின்றனர். ஆனால், அவரது சொந்த ஊர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள காடுவெட்டி என்னும் ஊர். அந்த ஊர் பெயராலேயே அவர் காடுவெட்டி குரு என்று அழைக்கப்பட்டார். ஆனால் அவரது பேச்சுகள் அவரை ஒரு அதிரடி நபராக வெளிக்காட்டியதால் இந்த சந்தேகம் பலருக்கும் இருந்தது. அவரது பெயர்க் காரணம் குறித்த கேள்வியை ஒரு முறை நிருபர்கள் கேட்ட பொழுது, சிரித்துக்கொண்டே சொன்னார், "நான் ஒன்னும் அவ்வளவு மோசமானவன் இல்லைங்க. என் ஊர் காடுவெட்டி என்பதால்தான் இந்தப் பெயர். நெறய பேர் என்னை அப்படிதான் நெனைச்சுக்குறாங்க" என்று.