ஆசிய நாடுகளிலேயே உச்சநீதிமன்றத்தின் தலைமை பொறுப்பு வகித்த முதல் பெண், இந்திய உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி, தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர், அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தான பார் கவுன்சிலில் முதல் மதிப்பெண் பெற்று தங்கப் பதக்கம் வென்ற முதல் பெண். இத்தனை பெருமைகளையும் கொண்ட உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பாத்திமா பீவி உடல் நலக் குறைவின் காரணமாக இன்று (23.11.23) காலமானார்.
அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானம், இன்றைய கேரளாவின் பத்தனம்திட்டா பகுதியில் ராவுத்தர் சமூகத்தைச் சேர்ந்த அன்னவீட்டில் மீரா சாஹிப், கதீஜா பீவி எனும் தம்பதியருக்கு 1927ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் தேதி பிறந்தவர் பாத்திமா பீவி. இவரது தந்தை அன்னவீட்டில் மீரா சாஹிப் அரசுப் பணியில் இருந்தவர். சிறு வயது முதலே படிப்பில் ஆர்வமாக இருந்த பாத்திமா பீவி, தனது சொந்த ஊரான பத்தனம்திட்டா பகுதியில் இருக்கும் கத்தோலிகேட் உயர்நிலைப் பள்ளியில் அவரது பள்ளிப் படிப்பை முடித்தார். பிறகு பத்தனம்திட்டாவில் இருந்து 100 கிலோ மீட்டர் தாண்டியுள்ள திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் அறிவியல் இளங்கலை படிப்பை மேற்கொண்டார்.
இந்தச் சமயத்தில் இந்தியாவின் முதல் பெண் நீதிபதியான அன்னா சாண்டி திருவனந்தபுரத்தில் நீதிபதியாக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரைக் குறித்து கேள்வியுற்ற மீரா சாஹிப், இதனை பாத்திமா பீவியிடம் சொல்ல, அதில் ஆவல்கொண்டு பாத்திமா பீவி அன்னா சாண்டியைச் சந்தித்தார். பிறகு அவரது வாழ்க்கை அறிவியல் துறையில் இருந்து நீதித் துறைக்கு மாறியது. அன்னா சாண்டி எனும் இந்தியாவின் முதல் பெண் நீதிபதியும், மகளின் கல்வியை ஊக்குவித்த மீரா சாஹிப்பும் இல்லை என்றால் இன்று நாம் ஆசிய நாடுகளின் உச்சநீதிமன்றத்தில் தலைமை பொறுப்பு வகித்த முதல் பெண் இந்தியாவைச் சேர்ந்தவர் எனும் பெருமையைப் பெற்றிருக்க முடியாது. அதுமட்டுமின்றி உயர் கல்வியை நோக்கியும், கல்வியை நோக்கியும் பெண்கள் பலர் நகர்ந்திருக்க வாய்ப்பில்லாமலும் இருந்திருக்கலாம்.
அன்னா சாண்டியால் அறிவியலைவிட்டு நீதித்துறைக்கு தடம் மாறிய பாத்திமா பீவி, திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சேர்ந்து 1950ம் ஆண்டு சட்டக் கல்வியை முடித்தார். பிறகு திருவிதாங்கூர் சமஸ்தான பார் கவுன்சில் தேர்வை எழுதிய பாத்திமா பீவி, அந்த சமஸ்தானத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று, திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முதல் மதிப்பெண் பெற்ற பெண் என்ற வரலாற்றைப் படைத்தார்.
பார் கவுன்சிலில் முதல் மதிப்பெண் பெற்ற பாத்திமா பீவி, தொடர்ந்து வழக்கறிஞராக செயல்பட்டு பிறகு துணை நீதிபதியாக தனது பணியைத் துவங்கி பதவி உயர்வுகளைப் பெற்று 1983ம் ஆண்டு கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றார். அதன்பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து 1989ம் ஆண்டு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் பாத்திமா பீவி. இதன் மூலம், இந்தியாவிலும், ஆசிய நாடுகளிலும் உச்சநீதிமன்றத்தின் தலைமை பொறுப்புக்கு வந்த முதல் பெண் என்ற வரலாற்றில் இடம் பிடித்தார் பாத்திமா பீவி. 1989 முதல் 1992 வரை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பாத்திமா பீவி, 1997ம் ஆண்டு தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
1997 முதல் 2001ம் ஆண்டு வரை தமிழ்நாடு ஆளுநராகச் செயல்பட்ட பாத்திமா பீவி, 2001ம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, போட்டியிடாத ஜெயலலிதாவை தமிழ்நாட்டின் முதலமைச்சராக நியமித்தார். இதற்குப் பல்வேறு எதிர்ப்புகள் வந்தன. குறிப்பாக, வழக்கால் தேர்தலிலேயே ஆறு வருடங்கள் போட்டியிட முடியாத ஜெயலலிதாவை எப்படி முதலமைச்சராக்கலாம் எனும் கேள்வி எழுந்தது. பிறகு இந்த வழக்கு உச்சநீதிமன்றம் சென்று அங்கு ஜெயலலிதா நியமனம் செய்தது செல்லாது என தீர்ப்பு வந்தது. இடைக்கால முதல்வராக ஓ.பி.எஸ். செயல்பட்டார். பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதா, 2002ம் ஆண்டு ஆண்டிபட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ராஜினாமா செய்து அங்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் அன்றைய முதலமைச்சரானார்.
1998ம் ஆண்டு நாட்டையே உலுக்கிய கோவை குண்டு வெடிப்பின்போது ஆளுநராக இருந்த பாத்திமா பீவி, மாநிலத்தில் அமைதி நிலவிட அரசுடன் இணைந்து தீவிரமாக உதவினார்.
இந்த விவகாரத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கிய பாத்திமா பீவி, தனது பதவியை ராஜினாமா செய்தார். பிறகு திருவனந்தபுரத்தில் வசித்து வந்த பாத்திமா பீவி இன்று (23.11.23) உடல் நலக் குறைவின் காரணமாக இயற்கை எய்தினார்.
ஆளுநர் பதவிக் காலத்தில் சர்ச்சைகள் எழுந்தாலும், பாத்திமா பீவி எனும் இஸ்லாமிய பெண் இல்லையென்றால் ஆசிய நாடுகளின் உச்சநீதிமன்றத்தில் தலைமை பொறுப்பு வகித்த முதல் பெண் இந்தியாவைச் சேர்ந்தவர் எனும் பெருமையை நாம் பெற்றிருக்க முடியாது. அதுமட்டுமின்றி உயர் கல்வியை நோக்கியும், கல்வியை நோக்கியும் பெண்கள் பலர் நகர்ந்திருக்க வாய்ப்பில்லாமலும் இருந்திருக்கும்.