மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான என். சங்கரய்யா(102) உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இடதுசாரி இயக்கத்தின் மூத்தத் தலைவரான தகைசால் தமிழர், விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யா, உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டதால் அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள் அவருக்குத் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் 1921 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி பிறந்தார் சங்கரய்யா. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே சுதந்திரப் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாகக் கல்லூரி படிப்பை முடிப்பதற்கு முன்பே சங்கரய்யா 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு சிறையிலிருந்தது வெளியே வந்த சங்கரய்யா, கல்லூரி மாணவர்களைத் திரட்டி பாளையங்கோட்டையில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு நான்காண்டுக் காலம் சிறையில் இருந்தார். அதேபோல் 1939 மீனாட்சி அம்மன் கோவில் நுழைவுப் போராட்டத்தில் பங்கேற்று சிறைக்குச் சென்றுள்ளார்.
1964ல் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கிய தலைவர்களில் குறிப்பிடத்தகுந்த தலைவராகவும் சங்கரய்யா இருந்தார். மேலும் ஜனசக்தி நாளிதழில் முதல் பொறுப்பாசிரியராகவும் இருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார்வப்பூர்வ இதழான தீக்கதிரின் முதல் ஆசிரியர் சங்கரய்யா என்பதும் குறிப்பிடத்தகுந்தது. மதுரை கிழக்கு தொகுதியில் இரண்டு முறையும், மதுரை மேற்கு தொகுதியில் ஒரு முறையும் என மூன்று முறை தமிழக சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இறுதிக் காலங்களில் தனது 93 வயதிலும் ஆணவக் கொலைக்கு எதிராகப் போராடியவர். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு முன்னும் பின்னும் எனச் சிறை வாழ்க்கை அனுபவித்தவர். பொதுவாழ்க்கையில் போராட்டத்திற்கும் சிறைக்கும் அஞ்சாமல் சேவையாற்றிய அவரின் தொண்டைப் போற்றும் வகையில் திமுக தலைமையிலான தமிழக அரசு அவருக்கு தகைசால் தமிழர் விருது கொடுத்து கவுரவித்திருந்தது. தமிழக அரசு கொடுத்திருந்த தகைசால் தமிழர் விருதுடன் அரசு வழங்கியிருந்த ரூபாய் 10 லட்சத்தை கொரோனா நிவாரணத்திற்கே வழங்கினார்.
கல்லூரி பருவத்திலிருந்து தன் இறுதிக் காலம் வரை போராட்டம், சிறை என உரிமைகளுக்குப் போராடி நின்ற சங்கரய்யா, அன்றைய இன்றைய என என்றைக்குமான இளைஞர்களுக்கும் ரோல் மாடல் தான் என். சங்கரய்யா.