Skip to main content

"பஸ்சுக்குப் போகாதீங்க, நாங்க ஃப்ரீயா கூட்டிப் போறோம்..." - கூவி அழைத்த மெட்ரோ நிர்வாகம்

Published on 28/05/2018 | Edited on 28/05/2018

அண்மையில் சென்னை நேரு பூங்காவிலிருந்து சென்ட்ரல், சின்னமலையிலிருந்து டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்தை தமிழக அரசு திறந்து வைத்தது. சென்னைவாசிகளுக்கு பயண உற்சாகத்தைப் பரிசளிக்க மூன்று நாள் இலவச பயணத்திற்கும் ஏற்பாடு செய்தது. மூன்று நாட்களாகவே எக்கச்சக்க கூட்டம் குவிந்தாலும், நேற்று கூட்டம் அதிகமாகக் குவிந்தது. அதாவது ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 518 பேர் நேற்று மட்டும் பயணித்துள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

 

metro

 

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலோ என்னவோ தெரியவில்லை நேற்று இவ்வளவு கூட்டம் குவிந்துள்ளது. பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை காலம் வேறு என்பதால் எல்லாத்தரப்பு மக்களும் உற்சாகமாகப் பயணித்தனர். முதல் நாள் இலவச பயணத்திற்கு மெட்ரோ நிர்வாகமே மக்களை கூவிக் கூவி அழைத்தது கிண்டல் செய்யப்பட்டது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சென்ட்ரல், ப்ராட்வே செல்ல பேருந்துக்குக் காத்திருந்த மக்களை ஒலிபெருக்கியில் அழைத்தார்கள் மெட்ரோ பணியாளர்கள்.  அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை குவிந்த கூட்டம் மெட்ரோவுக்கு மக்கள் கொடுத்த ஆதரவு என மெட்ரோ நிர்வாகம் மெச்சியது. மகிழ்ச்சியில் இன்றும் பயணம் இலவசம் என அறிவித்துள்ளது.

 

metro



மெட்ரோ ரயில் பயணம் பற்றிய மக்களின் கருத்துக்களைக் கேட்டோம். இரண்டு சிறுவர்களை அழைத்து வந்த ஒருவர், "அருமையா இருக்கு, போறதே தெரில, சொய்ங்னு போகுது" என்றார். அடுத்து வந்த நடுத்தர வயதுக்காரரிடம் கேட்டோம். "உள்ளே ஆங்காங்கே திருக்குறள் வாசகங்கள் ஒட்டப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. எளிதில் செல்லவேண்டிய இடத்தை அடைந்து விடுகிறது. இடம் வந்ததும் அறிவிப்பும் தருகிறார்கள்" என்றார். பின்னே வந்த வாலிபரிடம் பயணம் எப்படியென்று கேட்டோம். "ட்ரெயின்ல போகும்போது சிக்னலே கிடைக்கல பாஸ்" என்றார். அண்டர்க்ரௌண்டில் செல்லும்போது கிடைத்திருக்காது போல. 'என்னதான் இருந்தாலும் அடித்தட்டு மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்குக் கட்டணம். இன்று பயணம் செய்துவிட்டோம், நாளை முடியுமா?' என்பது பயணம் செய்த பலரால் சொல்லப்பட்ட கருத்து. அதுவும் உண்மைதான். 

 

metro

 

நாளை உரிய கட்டணத்துடன்தான் பயணம் என மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் வரை செல்ல 70 ரூபாய், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சென்ட்ரல் செல்ல 50 ரூபாய், எக்மோரிலிருந்து விமான நிலையம் வரை 60 ரூபாய் என கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. இலவச பயணத்தினால் அடித்துத்தட்டு மக்களை நான்கு நாட்களாக பயணம் செய்தவைத்த மெட்ரோ, அதை தக்க வைத்துக்கொள்ள கட்டணத்தை குறைக்க முற்படுமா அல்லது தொடர்ந்து அதிக கட்டணம், குறைந்த பயணிகள், சினிமா ஷூட்டிங் என செயல்படுமா என்பது போகப் போகத் தெரியும்.