அண்மையில் வெளியான ‘பாவக்கதைகள்’ திரைப்படம் பலதரப்பட்ட மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில், இடம்பெற்ற சுதா கொங்கராவின் ‘தங்கம்’ படமும் திருநங்கை சத்தார் கதாபாத்திரமும் கூடுதல் கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளன. அதேவேளை இப்படம் குறித்த விமர்சனமும் எதிர்ப்பும் இல்லாமலில்லை. அடிப்படைப் புரிதலின்றி எடுத்திருக்கிறார்கள், யதார்த்தம் என்ற பெயரில் அச்சத்தை விதைத்திருக்கிறார்கள் என சமூக செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள் போன்றோர் விமர்சித்துள்ளனர்.
“ ‘தங்கம்’ திரைப்படம் எங்கள் வாழ்க்கையை இயல்பாகப் பதிவு செய்திருக்கிறது. திரையில் என்னையே பார்ப்பது போலிருக்கிறத” என்கிறார் ‘காஞ்சனா’ புகழ் பிரியா. மறுபுறம் “இயல்பாகக் காட்சிப்படுத்துவதால் எங்களுக்கு எந்த நலனும் இல்லை. எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடாது” என்கிறார் லிவிங் ஸ்மைல் வித்யா. கடந்தகால சினிமாவைக் காட்டிலும் தற்போது எங்களைப் பற்றிய நியாயமான பதிவுகள் தமிழ் சினிமாவில் இடம்பெற்றிருக்கிறது என்றாலும், நாங்கள் இதைத் தாண்டி வளர்ந்துவிட்டோம் என்றும் குறிப்பிடுகிறார் வித்யா.
“திருநங்கைகளை எந்த இடத்திலும் தவறாகச் சித்தரித்துவிடக் கூடாது என்று இயக்குநர் கவனமாக இருந்தார். ‘தர்மதுரை’ படத்தில் நடித்த ஜீவாவின் துணையோடுதான் சத்தார் கதாபாத்திரத்தை வடிவமைத்தார். ஆதலால், எந்த இடத்திலும் காளிதாஸின் நடிப்பு உறுத்தவில்லை,” என்று பிரியா பாராட்டும் அதேவேளை “காளிதாஸை ஒப்பிடும்போது ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் விஜய் சேதுபதி சிறப்பாக நடித்தாரென்றே நான் சொல்வேன். யாருடைய உதவியும் இல்லாமல் ‘நான் பெண்ணாக இருந்தால் எப்படி நடந்துகொள்வேன்’ என்ற அடிப்படையில் அவர் நடித்திருப்பார். அதனால், அதில் ஒரு ஸ்டைல் இருக்கும்” என்ற மாற்றுப்பார்வையை முன்வைக்கிறார் வித்யா. “அண்மையில் வெளிவந்த ‘இரண்டாம் குத்து’ படத்தில் எங்களை மிக மோசமாகச் சித்தரித்திருந்தார்கள். இதற்கு பதில் எங்களைச் செருப்பால் அடித்திருக்கலாம்.
அந்த அளவு கீழ்த்தரமான காட்சியமைப்பு. அந்தவகையில் பார்த்தால் ‘காஞ்சனா’ படத்திற்குப் பிறகு எங்கள் வாழ்க்கையை அழகாக, இயல்பாகக் காட்சிப்படுத்திய படம் ‘தங்கம்’ தான். ஒவ்வொரு காட்சியும் வசனமும் அழகாக இருந்தது” என்று பிரியா புகழ்மாலை சூட்ட, “காட்சிப்படுத்திய விதத்திலோ நடிப்பிலோ பிற தொழில்நுட்ப அம்சங்களிலோ ‘தங்கம்’ படத்தை நான் குறைகூறவில்லை. ஆனால், இன்னும் எங்களைப் பாவப்பட்டவர்களாக ஒடுக்கப்படுபவர்களாகச் சித்தரிப்பதை நான் விரும்பவில்லை. ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். அப்படத்தில் எனக்கு விமர்சனம் இருந்தாலும், திருநங்கை கதாபாத்திரத்தை மிகச்சரியாக உருவாக்கியிருந்தனர். அவள் குற்றம் செய்திருந்தாலும், துணிந்து சில முடிவுகளை எடுக்கிறாள். அப்படியான சித்தரிப்பைத்தான் எதிர்பார்க்கிறேன்" என்று வித்யா தெரிவித்தார். இவ்வாறாக ‘தங்கம்’ குறித்து இருவரும் முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்தாலும் சில விஷயங்களில் இருவரும் ஒத்த கருத்தைக் கொண்டிருந்தனர்.
திருநங்கை கதாபாத்திரத்தில் ஒரு திருநங்கையையே நடிக்க வைத்திருக்கலாம் என்பதில் இருவரும் தெளிவான பார்வைகளை முன்வைத்தனர். “ ‘96 சதவீத திருநங்கைகள் நன்றாகப் படித்திருக்கின்றனர். இருப்பினும் சமூகத்தில் அவர்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுகின்றனர்’ என்றெல்லாம் தெளிவாகப் பேசும் சுதா கொங்கரா அதே ஒடுக்குமுறையைச் செய்திருப்பது முரணாக இருக்கிறது. அதேபோல் தங்கள் காதலுக்குத் திருநங்கைகளைப் பயன்படுத்திக்கொள்வது போன்ற காட்சிகளும் தவிர்க்கப்பட்டிருக்கலாம். சிறுபான்மைச் சமூகத்தைப் பொருத்தவரை, திரைப்படங்களில் அவர்கள் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்களோ, அப்படித்தான் பொதுமக்களாலும் புரிந்துகொள்ளப்படுவர். எனவே எங்கள் வாழ்க்கையை அழகாக உருவாக்கிய சுதா கொங்கரா, பிற்காலத்தில் திருநங்கைகளை வைத்து ஒரு படம் இயக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கோரிக்கை வைத்தார் பிரியா.
“சத்தார் கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு திருநங்கை கூடவா கிடைக்கவில்லை. நான், ஏஞ்சல் கிளாடி, ஜீவா, சௌமியா உள்ளிட்ட பல திருநங்கைகள் திரைத்துறையில் இயங்குகின்றனர். ‘நாங்கள் தேடினோம், கிடைக்கவில்லை’ என்கிறார் சுதா கொங்கரா. ஆனால் எப்படிப்பட்ட தேடுதல்கள் நடந்தன என்பது தெரியவில்லை. ஆனால் துல்கர் சல்மான், நிவின் பாலி உட்பட பல நடிகர்களிடம் கேட்டோம் என்பதை இயக்குநர் வெளிப்படையாகச் சொல்கிறார். இந்த மெனக்கெடல் திருநங்கைகள் தேர்விலும் நடந்திருக்கலாம். குறைந்தபட்சம், ‘திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பமுள்ள திருநங்கைகள் எங்களை அணுகவும்’ போன்ற அறிவிப்புகளை வெளியிட்டிருக்கலாம். ‘பொல்லாதவன்’ படத்தில் இடம்பெற்ற திருநங்கைகள் குறித்த காட்சிக்கு வெற்றிமாறன் ஒருமுறை மன்னிப்பு கேட்டார். அவரது பிற படங்களில் அத்தகைய காட்சிகள் இடம்பெறவில்லை. அதைப் போன்று சுதாவும் உறுதியளித்திருக்கலாம். ஆனால், ‘தேடினேன், கிடைக்கவில்லை’ என்பது அபத்தமான பதில். கடுமையான விமர்சனத்தை இப்போது சொல்லாவிட்டால், வேறெப்போதும் சொல்ல முடியாது,” என்றார் வித்யா.
“மலையாள, இந்தி சினிமாக்களில் திருநங்கைகளுக்கு முறையான அங்கீகாரம் கிடைக்கின்றது. கதாநாயகிகளுக்கு உதவியாளராக இருக்கிறார்கள், குணச்சித்திர வேடத்தில் நடிக்கிறார்கள், குத்துப் பாடல்களுக்கு நடனமாடுகிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் எங்களை நல்லவிதமாகக் காட்சிப்படுத்துவது கலாச்சாரமல்ல என்கிறார்கள். இப்படி கலாச்சாரம் பேசுபவர்கள் குறைந்த ஆடையில் பெண்கள் ஆடுவதைச் சீர்கேடாகக் கருதுவதில்லை” எனத் தெளிவான அரசியல் புரிதலோடு சாடினார் பிரியா.
“நெட்ஃபிளிக்ஸ் தயாரித்துள்ள ‘பாவக்கதைகள்’ படமே ஆதிக்கத் தரப்பினருக்கு ஆதரவாக எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பிற நாடுகளில் படங்களைத் தயாரிக்கும்போது தீர்க்கமான அரசியல் பார்வையோடுதான் நெட்ஃபிளிக்ஸ் செயல்படுகிறது. இந்திய மக்களுக்கு இந்த அளவிலான அரசியல் போதும் என்று நெட்ஃபிளிக்ஸ் நினைப்பதாகத் தோன்றுகிறது. நெட்ஃபிளிக்ஸ் இந்தியா, நெட்ஃபிளிக்ஸ் பாரத் ஆக இயங்குகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது” என்கிறார் வித்யா.
திருநங்கைகளைப் பலவீனமானவர்களாக, ஆதரவற்றவராகக் காட்சிப்படுத்துதல் அவர்களது உரிமை கோரலை மறுப்பதன் மற்றொரு வடிவமே என்ற விமர்சனத்தைச் சந்தித்திருக்கிறது ‘தங்கம்’.