மணப்பாறையில் அரசு கலை அறிவியல் கல்லூரி வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மறுமலர்ச்சி தி.மு.க தோழர்களால் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், மறுமலர்ச்சி தி.மு.க தேர்தல் பணிச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தமிழக முதல்வருக்கு செப்டம்பர் 13- ஆம் நாள் மின்னஞ்சலில் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். மேலும், மணப்பாறையில் அரசு கல்லூரி வேண்டும் என்று முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் வலியுறுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து முகநூல், வாட்ஸ் அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மணப்பாறை தொகுதியைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், பெண்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலதரப்பினரும் மணப்பாறைக்கு அரசு கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கை அட்டையுடன் பதிவிட்டு வருகின்றனர்.சமூக வலைத்தளங்களில் கடந்த ஐந்து நாட்களாக இந்தக் கோரிக்கை வலுத்து வருகிறது.
இது குறித்து மறுமலர்ச்சி தி.மு.க தேர்தல் பணிச்செயலாளர் மணவை தமிழ்மாணிக்கத்திடம் பேசினோம், அவர் நம்மிடம், "திருச்சி மாவட்டத்தில் முறுக்குக்கும், மாட்டுக்கும் பெயர் போன ஊர் மணப்பாறை. 'மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏறு பூட்டி வயல் காட்டை உழுது போடு செல்லக் கண்ணு' என்ற மருதகாசியின் பழம் பெருமை பாடலுக்கு உயிரூட்டும் ஊர் மணப்பாறை.
மணப்பாறை மாட்டுச் சந்தை செவ்வாய்க் கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை பகல் வரை நடைபெறும். தமிழகம் முழுவதிலும் இருந்து இந்தச் சந்தைக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் வருவார்கள். தமிழ்நாடு முழுவதும் முறுக்கு கிடைக்கும் என்றாலும், மணப்பாறை முறுக்கு உலகத் தரம் வாய்ந்தது. அதற்குக் காரணம் இந்த மண்ணில் கிடைக்கும் உப்பு நீரும், கை பக்குவமும் தான். இத்தகைய சிறப்பு மிக்க மணப்பாறையில் பெரிய தொழில் சாலைகளோ, வணிக நிறுவனங்களோ இல்லை. ஆற்று வளம், ஊற்று வளம் இல்லாத வானம் பார்த்த பூமியாகும். பெருமழை காலங்களில்தான் இங்கு விவசாயம் சாத்தியம்.
பெரும்பாலும் கிராமங்களின் வாழ்வாதாரம் கால்நடை வளர்ப்பதில் இருக்கிறது. பள்ளிப் படிப்புடன் நிறுத்திய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கட்டட வேலை பார்ப்பதற்காக திருச்சி, கோவை ஆகிய பெருநகரங்களுக்குச் செல்கின்றனர். இந்நிலையில், கிராமப்புற ஏழை மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்காக திருச்சிக்குத் தான் போகவேண்டும். மணப்பாறை சட்டமன்றத் தொகுதியின் விளிம்பு ஒரு கிராமத்திலிருந்து திருச்சிக்குச் செல்ல 90 கி.மீ பயணிக்க வேண்டும். இதனால், இப்பகுதி மாணவர்களின் கல்லூரிக் கனவு கானல் நீராய்ப் போய் முடிகிறது.
மணப்பாறை நகரத்தைச் சுற்றி உள்ள ஓரளவு வசதியான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களே திருச்சிக்குச் சென்று படிக்கின்றனர். எனவேதான், இப்பகுதி மக்கள் மணப்பாறையில் அரசு கலை அறிவியல் கல்லூரி வேண்டும் என்று பல வருடங்களாக அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மணப்பாறை சட்டமன்றத் தொகுதியாக உள்ள இந்தப் பகுதிக்கு உள்பட்ட முந்தைய மருங்காபுரி தொகுதியிலிருந்து 1991 - 96 களில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பேராசிரியர் க.பொன்னுசாமி கல்வி அமைச்சராகவும், அதன்பின்பு 1996 - 2001 கால கட்டத்தில் வெற்றி பெற்ற புலவர் செங்குட்டுவன் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளனர்.
இருமுறை அமைச்சர் தொகுதி என்ற தகுதியைப் பெற்றிருந்தும் கூட, மணப்பாறையில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படாதது இப்பகுதி மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தந்தது. இப்போது ஆளும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.சந்திரசேகர் மணப்பாறை தொகுதியிலிருந்து இருமுறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.
ஆனபோதும், மணப்பாறையில் கல்லூரி கோரிக்கை கிடப்பில் தான் போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கடந்த வாரம் பல்வேறு மாவட்டங்களில் 7 புதிய கல்லூரிகள் அமைக்கப்படும் என்று உத்தரவிட்டது. இதில், மணப்பாறையில் கல்லூரி இல்லை என்ற வருத்தம் மக்களைப் பெரிதும் வாட்டியது. இந்நிலையில் முகநூல், வாட்ச் ஆப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் "வேண்டும்.. வேண்டும்.. மணப்பாறைக்கு அரசு கல்லூரி.. வேண்டும்.. வேண்டும்" என்ற கோரிக்கை வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் இளைஞர்கள், மாணவர்கள், பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்த முழக்கத்தை எழுப்பி அந்தக் காணொளிகளையும் பதிவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து அவசர, அவசரமாக மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சந்திரசேகர் உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அவர்களைச் சந்தித்து மணப்பாறையில் கல்லூரி அமைக்க கோரிக்கை மனு தந்துள்ளார். மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அவர்களும் மணப்பாறையில் அரசு கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீண்ட அறிக்கை தந்து வலியுறுத்தியுள்ளார்.
மணப்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேண்டும் என்று 20 வருடங்களாக கோரிக்கை எழுப்பி வருகிறோம். ஒவ்வொரு தேர்தலின்போதும் பொதுமக்களின் இந்தக் கோரிக்கை கட்டாயம் தேர்தல் வாக்குறுதியாக இருக்கும். ஆனால், கல்லூரி மட்டும் வந்தபாடில்லை. தற்சமயம், தமிழக அரசு வெளியிட்டுள்ள 7 கல்லூரி அறிவிப்பில் மணப்பாறை இல்லாதது கண்டு நாங்கள் பெரிதும் கவலையடைந்தோம். ஏற்கனவே, எங்கள் கட்சி சார்பில் பலமுறை கோரிக்கை மனு அனுப்பியிருக்கிறோம். அவசரம் கருதி 13 -ஆம் தேதி தமிழக முதல்வருக்கு மின்னஞ்சலில் மீண்டும் ஒரு கடிதத்தை நான் அனுப்பினேன்.
இதனைத் தொடர்ந்து "வேண்டும்..வேண்டும் கல்லூரி வேண்டும்" என்ற முழக்கத்தை சமூக வலைத்தளங்களில் அனைவரும் டிரெண்டிங் ஆக்குங்கள் என்று பொதுமக்களின் பாதம் பணிந்து கேட்டுக் கொண்டேன். என்னுடைய வேண்டுகோளுக்கு கட்சி கடந்து பல்லாயிரக் கணக்கானவர்கள் ஆதரவு தெரிவித்து முகநூலில் பதிவிட்டிருந்தனர். குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் கோரிக்கை அட்டையுடன் முழக்கம் எழுப்பி காணொளி வெளியிட்டனர். மணப்பாறை பகுதி மக்களின் இந்தப் பேரெழுச்சி எங்களுக்குப் புதிய தெம்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக அரசு மணப்பாறை தொகுதி மக்களின் கோரிக்கையை அலட்சியம் செய்யாமல் உடனடியாகக் கல்லூரி அமைப்பதற்கான அறிவிக்கையை வெளியிட வேண்டும். நடப்பு கல்வியாண்டிலேயே மாணவர் சேர்க்கையையும் தொடங்க வேண்டும்" என்றார்.
எது எப்படியோ கரோனா ஊரடங்கு காலத்தில் சமூக வலைத்தளங்களின் மூலம் மணப்பாறை மக்கள் தமது கோரிக்கையை அமைதியான முறையில் வெளிப்படுத்தி வருகின்றனர். அம்மக்கள் வீதியில் இறங்கி போராடுவதற்குள் தமிழக அரசு கல்லூரி அமைப்பது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்வது நல்லது.