கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநரை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். அப்போது ஆளுங்கட்சியான திமுக மீது பல்வேறு ஊழல் புகார்களைக் கொடுத்ததாகச் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுதொடர்பாக பன்னீர்செல்வம் அணியின் ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தியிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் பின்வருமாறு,
இன்றைக்கு உங்கள் பழைய சகாக்கள் ஆளுநரைச் சந்தித்துப் பேசியுள்ளார்கள். தமிழக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்துள்ளார்கள். உள்ளாட்சித் துறையில் எண்ணற்ற ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறியுள்ளார்கள். போஸ்டர் அடித்ததில் ஊழல் குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? எதிர்க்கட்சி என்ற பாதையில் எடப்பாடி தரப்பிலான அணி சரியான திசையில் பயணிப்பதாகக் கருதுகிறீர்களா?
எடப்பாடி குரூப் எதற்காக ஆளுநரைச் சந்தித்தார்கள். என்ன தவறு நடைபெறுவதைக் கண்டுபிடித்ததாகச் செய்தியாளர்களிடம் கூறினார்கள். அங்கே எடப்பாடியின் அடிப்பொடிகள் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தீர்களா? அவர்கள் எல்லாம் ஆளுநரை சந்தித்துவிட்டு தெம்போடு நின்று கொண்டிருந்தவர்களைப் போல் அவர்கள் இருந்தார்களா? ரஜினி ஒரு படத்தில் ஐயோ பாத்துட்டேன், ஐயோ பாத்துட்டேன்னு அதகளம் செய்து படம் முழுவதும் சிரிக்க வைத்திருப்பார். அதைப்போல தற்போது எதையோ பார்க்கக்கூடாததைப் பார்த்ததைப் போல் எடப்பாடி தரப்பினர் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளனர். ஆனால் யாருடைய முகத்திலாவது சந்தோஷம் துளி அளவாவது இருந்ததா என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அனைவரும் பேய் அறைந்ததைப் போல் இருந்ததை நாம் எல்லாம் பார்த்தோம்.
இவர்கள் ஆளுநரிடம் என்ன புகாரை அளித்துள்ளார்கள். எடப்பாடியுடன் அங்கே சென்ற அவரது நண்பர்கள் பேசிக்கொண்டதை அருகிலிருந்தவர்கள் என்னிடம் கூறினார்கள். நாம் அவர்கள் கூட்டத்திலேயே ஸ்பை வைத்துள்ளோம். அதில் ஒருவர் அருகிலிருந்தவரிடம் அண்ணன் சொன்ன ஊழல் நடைபெற்றபோது யார் பதவியிலிருந்தார்கள் என்று கூடவா அவருக்குத் தெரியாது என்று கேட்டுள்ளார். அருகிலிருந்தவர் ஏதோ அண்ணன் ஞாபக மறதியில் எடுத்து வந்திருப்பார் என்று தங்களுக்குள்ளாகவே கிண்டலாகப் பேசிக் கொண்டுள்ளார்கள். அந்த அளவுக்குத்தான் அவர்களின் தரம் இருக்கிறது. இவர்களால் குற்றத்தைக் கண்டுபிடித்துச் சொல்லும் ஆற்றல் இருந்திருந்தால் இவர்களை ஏன் மக்கள் துரத்தப் போகிறார்கள். இவர்கள் திறமையற்றவர்கள், அதுதான் மக்கள் இவர்களைக் கண் காணாத இடத்தில் தூக்கி எறிந்துள்ளார்கள்.
இவர்கள் முதலில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அவர்கள் ஆட்சியிலிருந்த வரைக்கும் முறையாகத் தேர்தல் நடத்தினார்களா? ஆட்சி முடியப்போகின்ற நிலையில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தினார்கள். அதிலும் 50 சதவீத இடங்களை திமுக பெற்றது. இதுதொடர்பாக எடப்பாடி வீட்டில் நடைபெற்ற சந்திப்பில் அண்ணே என்ன இப்படி ஆயிடுச்சு அண்ணே... என்று நான் அவரிடம் நேரடியாகக் கேட்டேன். நானும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் முடிந்த கையோடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தி விடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது தேர்தல் நடத்தினால் சரியாக இருக்காது; அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றார். நானும் வெற்றி பெறுவதற்காக அவ்வாறு அவர் கூறுகிறார் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதிலும் இவர்களுக்குப் பெரிய நோக்கம் இருந்தது.
அவர்கள் ஆட்சியில் நான்கு ஆண்டுகளுக்கு மேல் உள்ளாட்சி அமைப்புக்களுக்குத் தேர்தல் நடத்தவில்லை. அப்போது அதனை நிர்வகித்தது யார்? உள்ளாட்சித் துறை அமைச்சர், அவர் யார் கண்ட்ரோலில் இருப்பார். இந்த எடப்பாடியின் பின்புலத்திலிருந்துதான் செயல்படுவார். தேர்தலை நடத்தாமல் அதில் எவ்வளவு கோல்மால்களைச் செய்ய முடியும் என்ற நோக்கில் தேர்தலைக் கூட இவர்கள் தள்ளி வைத்திருந்தார்கள் என்பது இவர்களின் செயல்பாடுகளுக்குப் பின்பே புரிய வந்துள்ளது. ஆகவே இவர்கள் கொடுத்த புகார்களை விசாரித்தால் இவர்கள் மீதுதான் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.