தைப்புத்தாண்டின் போது வீட்டின் முன்னே தெருக்களில் மாக்கோலமிட்டு செங்கரும்பு, மஞ்சள் குலை, பூக்களால் அலங்காரமிட்டு புத்தம் புதுப்பானையில் அறுவடை செய்யப்பட்ட புத்தரிசியையிட்டு புதுப்பானை பொங்கப் பொங்கக் குலவையிட்டு பொங்கலை சூரியனுக்குப் படையலிட்டு சிறப்பாக வழிபடுவது ஆதித்தமிழர்கள் காலம் தொட்டு இன்றளவும் வேளாண்மக்களும் பிற அனைத்து மக்களும் கொண்டாடுவது தமிழர்களின் ரத்தநாளங்களில் ஊறிப்போன வாழ்வியல் பண்பாடு. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற திண்ணமான நம்பிக்கை.
தெருக்களில் பொங்கல் வைத்து புதுப் பொங்கல் பானை பொங்காமல் போனதால், வேதனையடைந்த கிராம மக்கள் 120 ஆண்டுகளாக; மூன்று தலைமுறைகளாக தைப்பொங்கலே கொண்டாடாமலிருக்கும் விநோத தகவலறிந்த நாம், வியந்து போய் அந்தக் கிராமத்திற்கு விரைந்தோம்.
தென்காசி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி பக்கமுள்ள பொட்டல் புதூர் நகரம் தாண்டிய ரிமோட் ஏரியாவிலிருக்கிறது கேளையாப்பிள்ளையூர் என்கிற அந்தக் கிரமம். சுமார் 350க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட 1300க்கும் கூடுதலான பல சமூக மக்களை உள்ளடக்கியது. அந்தக் கிரமத்தின் வாழ்வாதாரமே விவசாயம், பீடி சுற்றுதல் மற்றும் விவசாய கூலித் தொழில்களேயாகும். மூன்று தலைமுறைகளுக்கு முன்பு தமிழர்களின் முக்கிய திருநாளான தைத் திருநாளில் கேளையாப்பிள்ளையூர் கிராமத்தினர் வழக்கம்போல் தெருக்களில் மஞ்சள் குலை, கரும்புகளால் அலங்கரித்து புத்தரிசி புதுப்பானையில் பொங்கலிட்டிருக்கிறார்கள்.
ஆனால் புதுப்பானை கொதித்ததே தவிர வழக்கம்போல் பொங்கல் பானையில் பால் பொங்கி வழியவே இல்லையாம். வெகுநேரம் பானை கொதித்ததே தவிர பொங்காமல் போயிருக்கிறது. இதனால் அரண்டு மிரண்டு போன மக்கள் மன சஞ்சலமடைந்திருக்கிறார்கள்.
அதே வேளையில் கிராமத்தின் அவர்களின் குலக்கோவில்களான முப்புடாதியம்மன் கோவில், உச்சினிமாகாளியம்மன் கோவில், பிள்ளையார் கோவில் ஆகிய கோவில்களின் கொடை விழாவின் போது கிராமமே திரண்டு வழிபடும் பொருட்டு ஆலய வீதிகளில் பொங்கலிட்ட போது அனைத்து பொங்கல் பானைகளும் பொங்கி வழிந்திருக்கிறது. பின்னர் குலசாமிகளுக்குப் படையலிட்டு வழிபட்டுள்ளனர்.
மாறாக அதே பொங்கலை தைத் திருநாளில் பொங்கலிட்ட போது பொங்கல் பானை பொங்கவில்லை. ஏன் இந்த முரண்பாடு சம்பவங்கள் என்பது அவர்களின் மனதை அரித்திருக்கிறதாம். அதே வேளையில் தைத்திரு நாளில் பொங்கலிட்டு பொங்காமல் போனதால் கிராமத்தில் சில எதிர்பாராத துர்மரணச்சம்பவங்களும் நடந்திருக்கிறதாம். தெய்வ குத்தமா, கர்மவினையா, சாபமா என்கிற மனஉளைச்சலில்; மனவேதனையில் கிராமத்துப் பெரியவர்கள் ஒன்று கூடி இனிமேல் தைத்திருநாளில் கிராமத்தில் பொங்கலிட வேண்டாம். கொண்டாட வேண்டாம் என்று முடிவெடுத்த மறுவருடம் முதல் தைப்பொங்கல் வைக்காமல் தவிர்த்ததையடுத்து முன்னர் நடந்த திடீர் சம்பவங்கள் நடக்காமல் போனதால் தொடர்ந்து 120 வருடங்களாக தைத்திருநாளில் பொங்கல் வைக்கவேயில்லையாம். அன்றைய தினம் மட்டும் அந்தக் கிராமம் வெறிச்சோடி இருக்கிறது என்கிறார்கள்.
நாம் கேளையாப்பிள்ளையூர் சென்ற போது அந்தக் கிராமம் ஆழ்ந்த அமைதியிலிருந்தது. தெருவீதிகளும் வெறிச்சோடின. 3ம் தலைமுறையான 120 வருடங்களுக்கு முந்தைய சம்பவமென்பதால் 90 வயது கடந்த பெரியவர்களான முத்துக்கிருஷ்ணன், சுப்பையா, செல்லம்மாள், கனி உள்ளிட்டவர்களை கிராமத்தினர் முன்னிலையில் சந்தித்து பேசினோம்.
ஆதிகாலத் தொடர் சம்பவம் என்பதால் ஆழமான அமைதிக்குப் பின் பேசினார்கள். “மூணு தலைமுறைக்கு முன்ன சாதி சனம், மக்க, கொஞ்சப்பேரு தான் இருந்தாங்க. எங்க முப்பாட்டனுக காலத்தில அறுவடையான புளியதரட்டி சம்பா அரிசிய தைப்பொங்கலன்னைக்கு மாடுகளைல்லாம் குளிப்பாட்டி பூப்போட்டு சூரியன் உதிக்கும் போது வழக்கமா தெருக்கள்ல பொங்க வச்சாக. ஆனா, ஏனோ ஊர்ல பொங்க வைச்ச அத்தனை பொங்கப்பானையும் பொங்காமப் போனதால, அப்ப பயந்து போன பெரியவங்கல்லாம் ஒன்னு கூடி தெய்வகுத்தமாத் தெரியுது. அதனால தைப்பொறப்பன்னைக்கு பொங்க வைக்க வேணாம்னு முடிவு எடுத்திட்டாக. ஆனா பாருங்கய்யா அப்ப எங்க குலசாமிக கோயில்ல கொடையன்னைக்கி ஊர் மக்க கோயில் தெருக்கள்ல வைக்கிற பொங்கல்ல பொங்கப்பானைக பொங்கியிருக்குய்யா. தைப்பொறப்புல நடந்தது தெய்வ குத்தமா, ஊருக்குச் சாபமான்னு தெரியலியேன்னு எங்க முப்பாட்டங்க மக்க மனசொடிஞ்சி போயிட்டாங்களாம்.
அப்பத்தேன், வழக்கமா தைப் பொறந்த மூணாம் செவ்வாக்கெழமன்னைக்கி எங்க முன்னோர்க எங்க குலதெய்வம் இந்த உச்சினி மாகாளியம்மன் கோயில் கொடை விழா நடத்திருக்காக. அப்ப ஊர் சனங்க தெரண்டு வந்து வழக்கமா வீதியில பொங்கல் வைச்சு குலவையிட்டதில பொங்கப்பானை வழக்கமாப் பொங்கியிருக்குய்யா. அந்தக் கொடை விழாவுல வழக்கம் போல 14 சாமியாடிக சாமியாடுவாக. அப்ப ஊர்க்காரர் ஒருத்தர் வந்து சாமியாடியக கால்ல விழுந்து கும்பிட்டு, கோயில்ல பொங்க வைச்சா பொங்கப்பானை பொங்குது ஆத்தா. ஆனா தைப் பொறப்பன்னைக்கி விசேஷம்னு வழக்கமா தெருவுல பொங்க வைச்சா பொங்கப்பானை பொங்கல ஆத்தா. கொதிச்சுக்கிட்டேயிருக்கே., தெய்வகுத்தமான்னு கும்பிட்டுக் கேட்டுருக்காராம்.
அப்ப 14 சாமியாடிகளும் ஒன்னா சேர்ந்து, ‘நீ எனக்கு தைச் செவ்வாயன்னைக்கு கொடை குடுத்து பொங்க வைக்கறல்லோ. அதோட முடிச்சுக்கோ, போன்’னு ஒங்காரமா சாமியாடிக அருள்வாக்கு சொல்லிருச்சாம். அப்பயிருந்தே தைப் பொறப்பன்னைக்கு மத்தவங்கள மாதிரி எங்க கிராமத்தில தெருக்கள்ல பொங்கலிடுறத நிறுத்தியிருக்காக. சாமி குத்தமாயிருமேன்னு தான்யா. ஆனா, ஆடி மாசம் மூணாம் செவ்வாயன்னைக்கி எங்க ஊரு முப்புடாதி அம்மன் கோவில்லயும், தை மூணாம் செவ்வாய்ல உச்சினிமாகாளியம்மன் கோவில்லயும் வருடந்தோறும் தொடர்ச்சியா கொடை நடத்தி பொங்க வச்சிட்டுத்தான் வர்றோம்.
இடையில என்னாச்சுன்னா, கோயில் கொடைக்கி ஒரு வாரத்துக்கு முன்ன கோயில்ல உருவம் விட்டு கண் தொறப்போம். வழக்கமா செவ்வாயன்னைக்கித் தான் நடத்துவோம். அப்ப ஊர்ல செவ்வாய்ன்னும் ஞாயிறு கிழமை வைங்கன்னும் ரெண்டு தரப்பு பேச்சாயிருச்சி. அவங்க சொன்னத போல வழக்கத்த மாத்தி ஞாயித்துக்கிழம உருவம் விட்டு கண் தொறந்த அந்த வருஷம் ஊர்ல தடங்கலாயிருச்சி. வேண்டாம் இந்த வம்பு தெய்வக்குத்தம்னு உருவம் விடுறதையும் மறுபடியும் செவ்வக்கிழமைக்கு மாத்திட்டோம்யா. ஊர்ல இப்புடி நடந்ததால 120 வருஷமா மூணு தலைமுறையா கிராமத்தில நாங்க தை மாசப் பொறப்பன்னைக்கு ஊர்ல பொங்க வைக்கிறத நிறுத்திட்டோம்யா. தீபாவளி கொண்டாடுதோம். பொங்கல் கொண்டாடுறதில்ல. அதனால மூணு தலைமுறையா தைப் பொங்கல்னா என்னான்னு தெரியாததா ஆயிருச்சி. அப்ப ஊரே வெறிச்சோடிக் கெடக்கும்யா. அந்த நாளன்னைக்கி ஊர்க்காரவுக திருச்செந்தூருக்குப் பாதயாத்திரை போயிடுவாகய்யா.” என்றார்கள் வறண்ட குரலில்.
கேளையாப்பிள்ளையூரில் தைப் பொங்கல் பானைகள் பொங்காதது சாபமா? வாங்கி வந்த வரமா? என்ற புதிர்கள் மூன்று தலைமுறையாக சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.