Published on 22/06/2018 | Edited on 22/06/2018
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படத்திற்கு தலைப்பு வைக்காமல், விஜய் 62 என்று தொடங்கப்பட்டது. படக்குழு, படத்தின் பெயரை ஜூன் 21 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் வெளியிடுவதாக தெரிவித்தது. அந்த போஸ்டர் வெளியாவதற்கு முன்பே பல போஸ்டர்கள் பல பெயர்களில் வெளியாகி ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. படக்குழு சொன்னதைப் போலவே மாலை ஆறு மணிக்கு முருகதாஸின் சின்ன பேட்டியுடன் போஸ்டர் வெளியிடப்பட்டது. படத்தின் பெயர் 'சர்கார்'. துப்பாக்கி படத்தின் முதல் போஸ்டரை போலவே சிகார் பிடித்துக்கொண்டு, லாஸ் வேகாஸ் என்னும் அமெரிக்க நகர பேக்கிரவுண்டில், டெர்பி கோட் சூட்டுடன் இருந்த விஜய்யின் புகைப்படம் அந்த போஸ்டரில் இருந்தது.
இதுவரை விஜய் மற்றும் முருகதாஸ் இருவரும் இணைந்து இரண்டு படங்களில் வேலை பார்த்துள்ளனர். முதல் படத்தின் பெயர் துப்பாக்கி, இரண்டாவது படத்தின் பெயர் கத்தி என்று ஆயுதங்கள் பெயராகவே இருந்தது. இந்த படமும் அதுபோன்றே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சர்கார் என்ற வடமொழி சொல்லை வைத்துள்ளனர். முதல் இரண்டு படங்களில் என்னதான் ஆயுதங்கள் பெயராக இருந்தாலும் சமூக கருத்துக்கள் பல பேசப்பட்டிருக்கும். இந்த படத்தில் சர்கார் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது கண்டிப்பாக அரசியல், சமூக பிரச்சனைகளை கண்டிப்பாக பேசப்படும் என்று சொல்ல வைத்துள்ளார்கள்.
ஆமாம், சர்கார் என்றால் என்ன? எல்லோரும் அது ஹிந்தி சொல் என்று சொல்கின்றனர். உண்மையில் அது ஹிந்தி சொல்லே அல்ல, அது உருது சொல். பெர்சிய மொழிகளில் 'சர்' என்றால் தலைமை, 'கார்' என்றால் வேலை, தொழில் என்று பொருள்படுகிறது. என்னதான் இது உருது சொல்லாக இருந்தாலும் ஹிந்தி, தமிழ், என்று இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழியாளர்களும் அரசாங்கம் என்ற வார்த்தைக்காக பயன்படுத்துகின்றனர். ஹிந்திதான் உயிர்மூச்சு என்று பேசும் பிரதமர் மோடியும் கிட்டதட்ட எல்லா மேடையிலும் மோடி சர்கார் என்றே சொல்லுவார். இதற்கு மோடி அரசாங்கம் என்று பொருள்படும். சர்கார் வார்த்தை முகலாயர்கள் காலத்திலிருந்து இந்தியாவில் வளம் வருகிறது, ஆங்கிலேய காலனியின் போது இந்தியா முழுவதும் பரவியது. அரசாங்க உயர் அதிகாரத்தில் இருப்பவர்களை சர்கார் என்றே தமிழர்களும் அழைத்து வந்துள்ளனர். விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து நடத்துபவரையும் சர்கார் என்று அழைப்பர். படம் வந்தபின்புதான் தெரியும், இந்த படம் எதைப்பற்றி பேச போகிறது என்று...