குழப்பங்களுக்கு முடிவு கட்டிய வீடியோ
-தமிமுன் அன்சாரி கருத்து

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ வெளியானது பல குழப்பங்களுக்கு முடிவு கட்டியிருப்பதாக நாகை சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி கூறினார்.
நக்கீரன் இணையதளத்திடம் அவர் கூறியது...
கடந்த ஒரு வருடமாக நிலவி வந்த பல்வேறு யூகங்களுக்கும், வதந்திகளுக்கும் இந்த வீடியோ முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. போயஸ் தோட்டத்தில் இருந்து அப்பல்லோவுக்கு கொண்டுவரும்பொழுதே அவர் நினைவிழந்த நிலையில்தான் அழைத்துவரப்பட்டார் என்றும், மரணம் அடைந்த அவரது உடலை வைத்துக்கொண்டு 75 நாட்கள் அப்பல்லோவில் நாடகம் ஆடியிருக்கிறார்கள் என்றும், பரப்பப்பட்ட பல்வேறு வதந்திகள் இப்போது ஒரு முடிவை எட்டியிருக்கிறது.
இந்த வீடியோவை இப்போது ஏன் வெளியிட வேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள். இது அறிவுக்கு பொருத்தமில்லாத கேள்வி. எப்போது வெளியிடுகிறார்கள் என்பது முக்கியமில்லை. அந்த வீடியோ காட்சிகளின் முக்கியத்துவம்தான் இங்கு கவனிக்கப்பட வேண்டும்.
முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா, தமிழ் சமூகத்திலும் அரசியலிலும் மிக சிறந்த ஆளுமைகளாக இருந்தவர்களில் ஒருவராக கொண்டாடப்பட்டவர். குடும்பத் தொடர்புகள் அற்ற நிலையில் அவருடைய மரணம் என்பது மிகுந்த அனுதாபத்தோடும், கவலையோடும், ஐயங்களோடும் உற்று பார்க்கப்பட்டது. அதற்கு ஒரு முடிவு காட்டப்பட்டிருப்பதன் மூலம், பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கும் தீர்வு காணப்பட்டிருக்கிறது.
எனவே இதுகுறித்து காழ்ப்புணர்ச்சியோடு கருத்து கூறாமல், மிகப்பெரிய குழப்பங்கள் முடிவுக்கு வந்திருக்கிறது என்று எல்லோரும் இதனை வரவேற்க வேண்டும். இதற்கு அரசியல் காரணங்களை கூறி, திசை திருப்புவதை பொதுமக்கள் ஏற்கவில்லை என்பதையும் உணரவேண்டும். இது அனைத்து தரப்பு மக்களாலும் வரவேற்கப்படுகிறது என்பதை உணர முடிகிறது. இந்த விசயத்தில் மேலும் அவதூறுகளுக்கு வழிவகுத்து வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற வகையில் புதிய அவதூறுகளுக்கு வழிவகுத்து யாரும் தங்களுடைய பெயரை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிப்பட்ட வீடியோ ஒன்று பாதுகாக்கப்படுகிறது என்ற செய்தி உயர்மட்ட அளவில் வலம் வந்தது. இதனை முன்பே வெளியிட்டிருந்தால் அதிமுகவிலும் பிளவு ஏற்பட்டிருந்திருக்காது. பல அரசியல் குழப்பங்களும் ஏற்பட்டிருந்திருக்காது. தாமதமாக வெளியிடப்பட்டிருந்தாலும் இது வரவேற்கப்பட வேண்டியதுதான் என்றார்.
-வே.ராஜவேல்