வயிற்றில் புளியைக் கரைத்த வாட்சப்!
பதற்றமடைந்த உலகம்
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை ஒருவரையொருவர் நேரில் பார்த்து பேசிக்கொள்கிறார்களோ, இல்லையோ வாட்சப் மூலம் கருத்துக்களை பரிமாறிக்கொள்கின்றனர், புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர், வதந்திகளைப் பரப்பியும் வருகின்றனர். நாம் இப்போது அனைத்து வகையான தொடர்புகளுக்கும் தொழில்நுட்பத்தை சார்ந்தே உள்ளோம். அந்தத் தொழில்நுட்பம் சிறிது நேரம் தடைபட்டாலும் பலரும் படபடப்பாகிவிடுகிறோம். இதை உறுதி செய்யும் ஒரு நிகழ்ச்சிதான் தற்போது நடந்துள்ளது.

செய்திகளைப் பரிமாறிக்கொள்ளப் பயன்படும் செயலிகளில் முதன்மையானதான வாட்சப் செயலி, இன்று மதியம் சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேல் முழுமையாக செயலிழந்தது. முதன்முதலில் அமெரிக்காவில் செயலிழந்து, அதைத்தொடர்ந்து ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பல நாடுகளில் செயலிழந்தது. பாதி உலகம் வாட்சப் தொடர்பின்றி தவித்துக்கொண்டிருந்த வேளையில் ட்விட்டரில் 'whatsapp down' என்ற ஹாஷ் டேக் ட்ரெண்ட் ஆனது.

'டவுன் டிடெக்டர்' (Down Detector) என்ற இணையதள அறிக்கையின்படி, காலை 10 மணி முதலே இந்தப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. ஆனால் அப்போது அதிகமான புகார்கள் எழவில்லை என்றும், இரண்டு மணி அளவில்தான் இந்த விஷயம் அதிகமாக வைரல் ஆனது என்றும் கூறியுள்ளது. இத்துடன் இந்த பாதிப்பின் அளவீட்டு விளக்கப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
ஒரு காலத்தில் கடிதத்தை அனுப்பிவிட்டு பதில் வரும் என்ற நம்பிக்கையில் நாட்கணக்கில், மாசக்கணக்கில், ஏன் வருடக்கணக்கில் காத்திருந்த நாம், இன்று இந்த ஒன்றிரண்டு மணிநேரத்திற்குள் உலகம் முழுதும் பதட்டமடைந்துவிட்டோம் என்பது யோசிக்க வேண்டிய செய்திதான்.
கமல் குமார்