கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் ஏப்ரல் 14- ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மாஸ்க் அணிந்தபடி காணொளி காட்சி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார். மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரும் மாஸ்க் அணிந்தபடி ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
மாநில முதல்வர்களின் கருத்தைக் கேட்டறிந்த பின்னர் ஊரடங்கு நீட்டிப்பு பற்றி பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்க வாய்ப்பிருப்பதாகத் தகவல் கூறுகின்றன. கரோனா தடுப்பு தொடர்பாக ஏற்கனவே மூன்று முறை நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நேற்று (10/04/2020) மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், கரோனாவைக் கட்டுப்படுத்த மேலும் மூன்று வாரம் தேவை என மாநில அரசுகள் சொன்னதாகக் கூறினார்.
ஒடிஷா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் ஏப்ரல் 30- ஆம் தேதி வரையும், பஞ்சாப் அரசு மே 1- ஆம் தேதி வரையும் ஊரடங்கை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.