1971 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 183 இடங்களில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றார் கலைஞர். தமிழக சட்டமன்ற வரலாற்றில் இந்தச் சாதனையை யாரும் முறியடிக்கவில்லை.
அசைக்கமுடியாத பலம்பெற்ற கலைஞர், தமிழர்களின் தனித்தன்மையை நிலைநாட்டும் பல நினைவுச் சின்னங்களை நிறுவினார். அன்றைக்கு நுங்கம்பாக்கத்தில் குப்பைமேடாக காட்சியளித்த இடத்தில் வள்ளுவருக்கு கோட்டம் அமைக்க திட்டமிட்டார். 1973 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார்.
புகழ்பெற்ற சிற்பியான கணபதி ஸ்தபதியைக் கொண்டு, நுணுக்கமாக திட்டமிட்ட கலைஞர், அணு அணுவாக ரசித்து வள்ளுவர் கோட்டத்தை வடிவமைத்தார். கலைஞரின் கற்பனைக்கு உயிர் கொடுத்தார் கணபதி ஸ்தபதி.
தூண்களே இல்லாத, 4 ஆயிரம் பேர் அமரக்கூடிய மண்டபத்துடன் கூடிய இந்த கோட்டத்தின் மிகப்பெரிய சிறப்பு திருவாரூர் தேரை நினைவூட்டும் வகையிலான கற்களால் செதுக்கப்பட்ட தேர். இந்தத் தேரின் கருவரையில் ஏழு அடி உயரத்தி அமர்ந்த நிலையில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. குறள் மாடத்தில் 1330 குறள்களும் செதுக்கப்பட்டுள்ளன.
1976 ஆம் ஆண்டு வள்ளுவர் கோட்டத்தை திறக்க திட்டமிட்டார். ஆனால், கலைஞர் ஆட்சியை கலைத்த இந்திரா, தமிழகத்திலும் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். அதைத்தொடர்ந்து, வள்ளுவர் கோட்டத்தை குடியரசுத்தலைவர் பக்ருதீன் அலி அகமது திறந்துவைத்தார். கலைஞர் கட்டிய கோட்டத்தை அவர் இல்லாமலே திறந்து வைத்தார்கள்.
வள்ளுவர் கோட்டத்தில் கலைஞரின் பெயரே இல்லாமல் செய்தனர். இதை ஈடுகட்டும் வகையில் அன்றைக்கு தினமணிக் கதிர் ஆசிரியராக இருந்த எழுத்தாளர் சாவி, ஜப்பானில் வள்ளுவர் கோட்டம் என்ற தொடரை எழுதி, அந்த வள்ளுவர் கோட்டத்தை கலைஞர் திறந்து வைப்பதாக முடித்தார். இதற்காக, அவர் ஆசிரியர் பொறுப்பை இழக்க நேரிட்டது. அவருக்காகவே கலைஞர் குங்குமம் வார இதழைத் தொடங்கினார் என்பதெல்லாம் பழைய வரலாறு.
பின்னர் அதிமுக ஆட்சியில் வள்ளுவர் கோட்டத்துக்கு முன்னே, அண்ணாவுக்கு சிலை அமைக்க அனுமதி பெற்ற கலைஞர், அந்த சிலையின் பீடத்தில், வள்ளுவர் கோட்டம் அமைத்த வரலாறை ஒரு வரியில் பதிவு செய்தார். 1989 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தபோது தனது பதவியேற்பை வள்ளுவர் கோட்டத்திலேயே நடத்தினார் கலைஞர்.