உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 55 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 4000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் இந்த கரோனா விவகாரத்தில் எப்படி நடந்து கொண்டுள்ளன, அதன் போக்கு சரிதானா என பல்வேறு கேள்விகளை முன்னாள் தமிழக அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணாவிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
முதல்வர் இந்த கரோனா பரவலுக்கு காரணம் வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறுகின்றாரே?
அவர்தான் மூன்று நாட்களில் கரோனா போய் விடும் என்று சொன்னவர் ஆயிற்றே. அவர் வாய்க்கு வந்ததை எல்லாமல் சொல்லுவார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை இந்தத் தமிழக அரசு என்ன செய்துள்ளது. இந்த 50 நாட்களுக்கு 1,000 ரூபாய் பணம் கொடுத்துள்ளது. இதை வைத்து அவர்கள் பிழைத்துக்கொள்வார்களா? அதையும் தாண்டி நாங்கள் அரிசி, பருப்பை எல்லாம் இலவசமாகத் தருகிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மை நிலமை வேறாக இருக்கின்றது. நான் கடந்த வாரம் என்னுடைய தொகுதிக்கு நேரில் செல்கின்ற போது இந்த அரசாங்கம் கொடுத்த அரிசியினை நேரில் பார்த்தேன். சாப்பிட முடியாத அளவுக்கு அதன் தரம் இருக்கின்றது. இதெற்கெல்லாம் அவர்கள் என்ன சொல்ல போகிறார்கள். வல்லுநர்கள் எல்லாம் அந்தப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான அளவு பணம் கொடுக்கச் சொல்கிறார்கள். எங்களின் தலைவரும் குறைந்த பட்சம் அவர்களுக்கு 5,000 ரூபாய் தர வேண்டும் என்றுதான் கூறிவருகிறார்.
இந்த கரோனா நோய்த் தொற்றில் சரியாக அரசு செயல்படவில்லை என்று கூறுகிறீர்களா?
சரியாகச் செயல்பட வேண்டும் என்று சொல்கிறோம். தற்போது சில மாவட்டங்களில் கரோனா தொற்று குறைந்து வருவதாகச் சொல்கிறார்கள். ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த பல நாட்களாக யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று தொடர்ந்து கூறிவருகிறார்கள். அது உண்மையாக இருந்தால் நமக்கு மகிழ்ச்சி. ஆனால் அவ்வாறு நிலமை இருக்கும் பட்சத்தில் ரேண்டம் டெஸ்ட் அந்தெந்த மாவட்டங்களில் எடுக்க வேண்டும் அல்லவா? அதை ஏன் செய்யவில்லை என்றுதான் நாம் கேட்கிறோம். நோய்த் தொற்று இல்லை என்று கூறும் அவர்கள் டெஸ்ட் எடுக்க ஏன் பயப்பட வேண்டும். அப்படி எடுத்தால்தானே கரோனா தொற்று அந்த மாநிலத்தில் இருக்கின்றதா அல்லது இல்லையா என்று தெரியவரும்.
இந்த ஊரடங்கு தோல்வி என்றால் அதற்கு யார் காரணம், மக்கள் காரணமா அல்லது அரசாங்கம் காரணமாக இருக்கின்றதா? யாரை நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள்?
நான் மக்களை ஒருபோதும் குறையே சொல்ல மாட்டேன். அதுவும் முதல் லாக் டவுனில் மக்கள் நன்றாக ஒத்துழைத்தார்கள். நானே என்னுடைய தொகுதியில் அதனை நேரில் பார்த்தேன். அனைவருமே அந்த முதல் ஒரு மாதம் நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்கினார்கள். ஆனால் அரசாங்கம் அதனைச் சரியான முறையில் செயல்படுத்தவில்லை. அதன் ஒரு பகுதியாகத்தான் கோயம்பேடு சம்பவம் நடைபெற்று முடிந்துள்ளது. அரசாங்கம் வியபாரிகள் சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை. இவர்கள்தான் அதனை முறையாக வழிநடத்தியிருக்க வேண்டும். ஆனால் அரசு இந்த அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளது, இவ்வாறு பேசியுள்ளார்.