சோவியத்தை சிதைக்கலாம்...
புரட்சி வரலாற்றை சிதைக்க முடியாது!

சோவியத் யூனியன் நிறுவப்பட்ட முதலாண்டு நிறைவு தினத்தில் லெனின் பேசுகிறார்
முதல் உலகப்போர் முடிவுக்கு வந்த சமயம். ஜார் மன்னரின் தலைமையிலான ரஷ்ய பேரரசு நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. உள்நாட்டில் மாமேதை லெனின் தலைமையிலான புரட்சி ஆயத்தங்களுக்கு இடையே உலகப்போரில் ரஷ்யாவை பாதுகாக்கும் வேலையில் ராணுவத்துடன் மக்களும் எதிரிகளை எதிர்த்து போரிட்டார்கள்.
போர் முடிந்தது. மக்கள் உணவுக்காக அலைமோதும் பரிதாப நிலை தொடங்கியது. பரந்து விரிந்த ரஷ்ய பேரரசில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது. பேரரசர் ஜாருக்கு எதிராக போராட்டங்களும் கலகங்களும் அதிகரித்தன. போராட்டங்களை ஒடுக்க வேண்டிய ராணுவம் மக்களோடும், லெனின் தலைமையிலான செம்படையுடனும் இணைந்துவிட்டது.

புரட்சியாளர்கள் மத்தியில் லெனின் ஆவேச உரை நிகழ்த்துகிறார்
போல்ஷ்விக் என்று அழைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் செம்படை பல்வேறு பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. தனது பேரரசு துண்டுதுண்டாக கிழிபடுவதை பார்த்த ஜார் பேரரசர் தனது பதவியிலிருந்து விலகுவதாகவும் தனது பிரதமரான அலெக்ஸாண்டர் கெரென்ஸ்கியிடம் அரசாங்கத்தை ஒப்படைப்பதாக அறிவித்தார்.
ஆனாலும், செம்படை வீரர்கள் ஜார் மன்னரின் குளிர்கால அரண்மனையையும், மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மாளிகையையும் முற்றுகையிட்டது. செம்படையின் முன்னேற்றத்தையும் ராணுவத்தின் அரசு எதிர்ப்பு ஆகியவற்றைக் கண்ட லெனின், மேற்கு ஐரோப்பாவிலிருந்து ஏப்ரல் 3, 1917ல் ரஷ்யாவக்கு திரும்பி செம்படையை வழிநடத்தத் தொடங்கினார்.

ஜார் மன்னரின் குளிர்கால அரண்மனையை செம்படை கைப்பற்றியது
லெனின் தனது ஆதரவாளர்களோடு பெட்ரோகிராட் நகருக்கு செல்வதை ஜெர்மன் ராணுவம் அனுமதித்தது. லெனின் ரஷ்யா செல்வது ரஷ்யாவின் போர் நடவடிக்கையை மட்டுப்படுத்தும் என்று ஜெர்மன் ராணுவ அதிகாரிகள் நினைத்தனர்.
ஜார் மன்னர் பதவி விலகி, கெரென்ஸ்கி தலைமையில் தற்காலிக அரசாங்கம் அமைக்க ஒப்புக்கொண்டதை செம்படை ஏற்கக்கூடாது என்று லெனின் அறிவித்தார். இதையடுத்து செம்படையையும், போல்ஸ்விக் கட்சியையும் தற்காலிக அரசு தடை செய்வதாக அறிவித்தது.

மாறு வேடத்தில் லெனின்
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து லெனின் பின்லாந்துக்கு தப்பிச் சென்றார். ரஷ்யாவில் லெனினின் தளபதி ட்ராட்ஸ்கி கிட்டத்தட்ட ராணுவத் தளபதியைப் போலவே செயல்படத் தொடங்கிவிட்டார்.
அவர், அரசுக்குப் பதிலாக, தானே ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா - ஹங்கேரி ராணுவத்துடன் உடனடி அமைதிப் பேச்சுக்கு தயாரானார். ரஷ்யாவின் ராணுவமும் கடற்படையும் அரசுக்கு எதிராக திரும்பியது.
1917 ஆம் ஆண்டு அக்டோபர் 25 மற்றும் 27 ஆம் தேதிகளில் அதிரடி நடவடிக்கைகள் தொடங்கின. அவ்ரோரா என்ற கடற்படை கப்பலில் இருந்து குண்டு வெடித்தது. அதுதான் புரட்சியாளர்களுக்கு அடையாள சிக்னல். உடனே பெட்ரோகிராட் நகரின் அரசு அலுவலகங்கள் அனைத்தையும் போல்ஷ்விக்குகள் கைப்பற்றினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குளிர்கால அரண்மனையை தாக்கி உள்ளே புகுந்தனர். எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவர்கள் அரண்மனையை கைப்பற்றினார்கள்.
தற்காலிக அரசின் பிரதமரான அலெக்ஸாண்டர் கெரென்ஸ்கி அரண்மனையிலிருந்து தப்பினார். அதிகாரத்தை செம்படை கைப்பற்றியது. இதையடுத்து பேரரசர் ஜாரை கைது செய்யும் நடவடிக்கை தொடங்கியது.

சிறைப்பிடிக்கப்பட்ட பேரரசர் ஜார்
அக்டோபர் 27 ஆம் தேதி ஆட்சிக் குழுவை லெனின் அறிவித்தார். ஸ்டாலின், ட்ராட்ஸ்கி ஆகியோர் குழு உறுப்பினர்களாக இருந்தார்கள். பதவியைத் துறந்து யெகடேரின்பர்க் என்ற நகரில் வசித்த பேரரசர் ஜார் அவருடைய குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார்.
1918 ஆம் ஆண்டு ஜார் நிக்கோலஸ், அவருடைய மனைவி, ஐந்து குழந்தைகள் கொல்லப்பட்டனர். அவர்கள் புதைக்கப்பட்ட இடம் ரகசியமாக வைக்கப்பட்டது.
புரட்சி வெற்றி பெற்றாலும் நாடு முழுவதும் செம்படைக்கு எதிராக முதலாளிகளின் வெள்ளையுடை படைகள் மோதலைத் தொடர்ந்தன. உள்நாட்டுக் கலகம் நீடிக்கவே செய்தது. கலகக்காரர்கள் அனைவரும் ஒழிக்கப்பட்ட பிறகு, 1922 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் நிறுவப்பட்டது.

பேரரசர் ஜாரும் அவருடைய குடும்பத்தினரும்
ரஷ்யாவில் புரட்சி வெற்றிபெற்றது 1917 அக்டோபர் 27 என்றாலும், சோவியத் யூனியன் நிறுவப்பட்டபிறகு தற்போதைய கிரிகோரியன் காலண்டர் பின்பற்றப்பட்டது. அதன்படி புரட்சி நடைபெற்ற நாள் 1917 நவம்பர் 7 ஆகியது.
ஆம் இன்றுடன், ரஷ்யப் புரட்சி நடைபெற்று 100 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இன்று சோவியத் யூனியன் சிதறியிருக்கலாம். ஆனால், உழைப்பாளர்களும் ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியும் என்பதை உலகிற்கு நிரூபித்த அந்த புரட்சிகர வரலாறு என்றுமே சிதையாது.
- ஆதனூர் சோழன்