விலைவாசி உயர்வைக் கண்டித்து தண்ணீரில் வடைசுட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் செவ்வாய்க் கிழமையன்று நூதனப் போராட்டம் நடந்தது.
விலைவாசி உயர்வைக் கண்டித்தும்,ரேசன் கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை போதுமான அளவு இருப்பு வைத்து வழங்கக் கோரியும் மாதர் சங்கம் சார்பில் வறுமை ஒழிப்பு நூதன பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில் புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.சலோமி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் தலைவர் பி.சுசீலா, பொருளாளர் எஸ்.பாண்டிச்செல்வி, துணைச் செயலாளர் கே.நாடியம்மை மற்றும் ஏ.சாந்தா, பண்டிச்செல்வி, கவிதா உள்ளிட்டோர் பேசினர்.
போராட்டத்தின் போது கடுமையான உயந்துள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை வெளிப்படுத்தும் விதமாக சாலையில் பொய்யான அடுப்பு வைத்து அதில் தட்டு வைத்து தண்ணீரில் வடைசுட்டு சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களின் எதிர்ப்புணர்வை பெண்கள் வெளிப்படுத்தினர்.