ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்த பிறகு அநத் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு அறிவித்தது. அதன்பிறகு அந்த மாநிலத்தின் எல்லையை வரையறை செய்து புதிய வரைபடத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
![UNION HOME MINISTRY RELEASED NEW INDIA MAP](http://image.nakkheeran.in/cdn/farfuture/TYxK4_mIFD93-c1a7kNHoTffqEhPW5IHfUOmjdcaoxU/1572765383/sites/default/files/inline-images/MAPSEEE.jpg)
(இந்தியாவின் புதிய வரைப்படம்)
இந்த மேப்பில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் உள்ள மிர்புர், முஸாபர்பாத் ஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சீனா வசம் இருக்கிற காஷ்மீர் பகுதிகள் இந்த வரைபடத்தில் இணைக்கப்படவில்லை. காஷ்மீர் மாநிலத்தை பாகிஸ்தானும் இந்தியாவும் தொடர்ச்சியாக உரிமைகொண்டாடி வருகின்றன. ஆனால், பாகிஸ்தான் பக்கம் ஒருபகுதியும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் ஒருபகுதியும் நீண்டகாலமாக இருந்துவருகிறது.
![UNION HOME MINISTRY RELEASED NEW INDIA MAP](http://image.nakkheeran.in/cdn/farfuture/Lg9wG5HeqthsC4-oVOpN4xZtcRgmO5gldKED5TDmmH8/1572765283/sites/default/files/inline-images/india%20map.jpg)
இடையில் சீனா தனது பங்கிற்கு ஒரு பகுதியை கைப்பற்றி வைத்திருக்கிறது. அக்ஷய் சின் என்ற பெயரில் அந்த பகுதியும், பாகிஸ்தானால் சீனாவுக்கு தாரைவார்க்கப்பட்ட ஒரு பகுதியும் சீன வரைபடத்தில் தொடர்ச்சியாக இடம்பெறுகிறது. பாகிஸ்தானின் அதிகாரபூர்வமான வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர் முழுவதும் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. அதுபோல இந்தியா வரைபடத்தில் ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதிவரை இடம்பெற்றிருக்கிறது.
![UNION HOME MINISTRY RELEASED NEW INDIA MAP](http://image.nakkheeran.in/cdn/farfuture/Sc3RIkjDy1nvL_DFnb-eSfNOBKDKWv5R8MFAtDpS698/1572765120/sites/default/files/inline-images/pak%20map.gif)
(பாகிஸ்தானின் வரைப்படம்)
இதுதவிர, இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள அருணாச்சல பிரதேச மாநிலம் முழுவதையும் சீனா உரிமை கொண்டாடுகிறது. அந்த மாநிலத்தை தனது வரைபடத்தோடு இணைத்தே வெளியிடுகிறது சீனா. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மூன்று மாதங்கள் முடிந்த நிலையில் அந்த மாநிலத்தின் புதிய மேப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.
![UNION HOME MINISTRY RELEASED NEW INDIA MAP](http://image.nakkheeran.in/cdn/farfuture/ggWL40hQ3vRGxNrCZHwDdDH8aJxSm_D9NHjKeU3haTY/1572765166/sites/default/files/inline-images/new%20map%20of%20j%2Ck.jpg)
(ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கின் புதிய வரைப்படம்)
இந்த மேப்பில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இன்றுவரை உள்ள மிர்பூர், முஸாபர்பாத் ஆகியவையும் இணைக்கப்பட்டிருக்கிறது. 1947ல் ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 14 மாவட்டங்கள் இருந்தன. கதுவா, ஜம்மு, உதாம்பூர், ரியாஸி, அனந்தநாக், பாரமுல்லா, பூஞ்ச், மிர்பூர், முஸாபர்பாத், லே, லடாக், கில்ஜிட், கில்ஜிட் வஸாரட், சில்ஹாஸ், ட்ரைபல் டெரிட்டரி ஆகியவை இந்த மாவட்டங்கள். இப்போது இந்த மாவட்டங்களை 28 மாவட்டங்களாக மத்திய அரசு பிரித்திருக்கிறது. குப்வாரா, பந்திப்பூர், கண்டர்பால், ஸ்ரீநகர், பட்காம், புல்வாமா, ஷுப்ரியன், குல்காம், ரஜூரி, ராம்பன், கிஷ்டிவார், சம்பா, கார்கில் என்ற 14 மாவட்டங்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.
![UNION HOME MINISTRY RELEASED NEW INDIA MAP](http://image.nakkheeran.in/cdn/farfuture/XNCzORuiSYSxsqqeCKaqR8Y-F1mLn0CXfkohbIqEMps/1572765212/sites/default/files/inline-images/original%20jk.jpg)
(காஷ்மீரை சொந்தம் கொண்டாடும் நாடுகள்)
இந்திய அரசு புதிய மேப்பை வெளியிட்டிருந்தாலும் இந்த மேப்பை ஐ.நா. சபை அங்கீகரிக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். மேலும் இப்போது ஜம்மு காஷ்மீர் அபாயகரமான பகுதியாக மாறியிருக்கிறது எனவும் கூறுகிறார்கள். இனிமேல், பாஜகவை விரும்பாத ஐ.ஏ.எஸ். மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தண்டனைப் பகுதியாக இது மாறும். பாஜகவுக்கு வேண்டாத அதிகாரிகள் இந்த பகுதிக்கு தூக்கியடிக்கப்படலாம் என்று ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இன்னொரு முக்கியமான விஷயம் இந்த மேப்பில் பாகிஸ்தான் மற்றும சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள லடாக்கின் பெரும்பகுதி இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்த புதிய மேப்பை சீனா ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது. இந்த புதிய மேப் காஷ்மீர் பகுதியில் மேலும் தீவிரமான ஆயுதப் போராட்டத்தையே ஊக்குவிக்கும். இந்தியாவுக்கு பதிலடியாக சீனாவும் பாகிஸ்தானும் தங்களுடைய புதிய மேப்பை வெளியிடும் என்றெல்லாம் அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
இதெல்லாம் நடக்காமல், எல்லாம் அமைதியாக முடிந்து மோடி மற்றும் அமித்ஷாவின் நடவடிக்கை பலனளிக்கும் என்று எதிர்பார்ப்போம்.