நீர்நிலைகளையும், மழை நீர் வடிகால் வாய்களையும் பாதுகாக்க வேண்டுமென முதல்வர் மேடைக்கு மேடை பேசி வருகிறார். ஆனால், அவரது அமைச்சரவையில் இருப்பவரின் மகனே வடிகால்வாயை ஆக்கிரமித்து அடாவடியில் ஈடுபட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் மீஞ்சூர் - திருவொற்றியூர் 100 அடி சாலை அருகே, தமிழக தொழில் மற்றும் ஊரகத்துறை அமைச்சர் பெஞ்சமின் மனைவி, மகன் விஜய்பெரிலினுக்கு சொந்தமான இடம் இருக்கிறது. அங்கு பெட்ரோல் பங்கும் செயல்பட்டு வருகிறது.
சாலைக்கும் அமைச்சரின் இடத்திற்கும் இடையே 30 அடியில் ஓடைநீர் கால்வாய் உள்ளது. அந்த கால்வாயை ஆக்கிரமித்து அதன்மீது வணிக வளாகம் கட்ட ஆரம்பித்தார் விஜய்பெர்லின். அமைச்சரின் மகன் என்று முதலில் பொதுமக்கள் இதை எதிர்க்க தயங்கினர். ஆனாலும் இதனால் பின்னால் ஏற்படப்போகும் விபரீதங்களை உணர்ந்து, இதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். சட்டத்திற்கு புறம்பாக கால்வாயை ஆக்கிரமிப்பு செய்தவர்களை விட்டுவிட்டு, போராட்டம் நடத்திய இளைஞர்களை இரவோடு இரவாக வீடுபுகுந்து கைது செய்துள்ளது காவல்துறை.
இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய போராட்டக்காரர்களில் ஒருவரான சி.பி. எம். கட்சி பிரமுகர் கோபால், "நீர்நிலைகளை பாதுகாக்கணும்னு முதல்வர் சொல்றாரு. ஆனா, அதே கட்சி அமைச்சர் மகனே மழைநீர் கால்வாய் மீது வணிக வளாகம் கட்டுகிறார். எதிர்த்துக் கேட்டா ஜெயில்ல போடுறாங்க. வேம்பாக்கத்துல இருந்து எங்கஊர் வழியா கொக்குமேடு ஏரிக்கு முப்பது அடி அகல மழைநீர் கால்வாய் போகுது. அதை ஒட்டியே தடப்பெரும்பாக்கத்துல அமைச்சர் பெஞ்சமின் மனைவி ஷீலா மற்றும் மகன் விஜய்பெர்லின் பெயருல இடம் இருக்கு’’ என்று ஆவணத்தைக் காட்டினார்.
மேலும், "அதுல பெட்ரோல் பங்கும் செயல்பட்டு வருது. இப்போ அதுக்கு பக்கத்துல இந்த மழைநீர் கால்வாய் ஓடுது. அது மேல கட்டிடம் கட்டுறார். அதை பொதுமக்கள் எதிர்த்தாங்க. அப்போ அங்க வந்த பொன்னேரி காவல் ஆய்வாளர் பால்ராஜ் எல்லோரையும் சமாதானப் படுத்தி வேலையை நிறுத்தினார். ஆனா, அடுத்தநாளே கட்டுமான வேலைய துவங்கினாங்க. கட்டுமான வேலையை நிறுத்தச்சொல்லி மீண்டும் மக்கள் போராட்டம் நடத்தினாங்க. அதற்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் (பி.டி.ஓ) அனுமதியோடத்தான் கட்டுமான வேலை நடக்குதுன்னு சொன்னாங்க.
வருவாய்த்துறைக்கு சம்பந்தப்பட்ட இடத்துல அதுவும் நீர்ப்பிடிப்பு பகுதியில யாரும் கட்டிடம் கட்ட அனுமதிக்கமாட்டாங்க. அப்படியிருக்கும்போது இங்கே கட்டுமானம் அமைக்க யார் அனுமதி வழங்கியதுன்னு கேட்டு, வட்டாட்சியர் அலுவலகம் முன்னாடி போராட்டமும் நடத்துனோம். தாசில்தார் மணிகண்டன் காலில் விழுந்தும் மக்கள் போராடினாங்க. அப்படியும் கொஞ்சம்கூட அவர் மனமிரங்கல.
அன்று இரவு ஒன்றரை மணிக்கு, போராட்டம் நடத்திய இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த மதன் மற்றும் பாலாஜியை வீடு புகுந்து போலீசார் கைது செய்து கூட்டிட்டுப் போனாங்க. பொன்னேரி காவல் நிலையத்துக்கு போய் பார்த்தா அவுங்க அங்க இல்ல. மறுநாள் காலை வரைக்கும் எங்க தேடியும் கிடைக்கல. மத்தியானத்துக்கு மேலதான் திருப்பாலைவனம் போலீஸ் ஸ்டேசன்ல இருக்குறதை கண்டுபிடிச்சோம். திரும்பவும் மக்கள் அங்க கூடி போராட்டம் நடத்தியதால மதனையும், பாலாஜியையும் விடுவிச்சாங்க. அமைச்சரோட பவரைக் காட்டி மக்களை மிரட்டிக்கொண்டே வந்தவங்க, தற்போது கட்டுமான வேலையை நிறுத்தியிருக்காங்க'' என்றார்.
பொன்னேரி தாசில்தார் மணிகண்டனிடம் இது குறித்து கேட்டபோது, "நான்தான் அங்கு நடந்த வேலையை நிறுத்தினேன். மற்ற படி இதுபற்றி ஆர்.டி.ஓ. நந்தகுமார் சார்கிட்ட தான் நீங்க பேசணும்''’என்று சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தார்.
பொன்னேரி ஆய்வாளர் பால்ராஜிடம் நாம் பேசியபோது, "தேவையில்லாம கூட்டம் சேர்த்தாங்க. அதனால்தான் கைது செய்தோம்''’என்றார். "போராட் டத்தின்போதே கைது செய்யாமல், ஏன் நள்ளிரவு ஒரு மணிக்கு தீவிரவாதி போல கைது செய்தீர்கள்' என்று கேட்டதும், எதுவும் பேசாமல் தொடர்பை துண்டித்து விட்டார். தொடர் முயற்சிக்கு பின்னர் இதுகுறித்து நம்மிடம் பேசினார் அமைச்சர் பெஞ்சமின். அவர், "அந்த இடம் என் மகன் விஜய்பெர்லினுக்கு சொந்தமானது. முறையான அனுமதி வாங்கி கட்டினோம். ஆனா லோக்கல்ல அ.ம.மு.க. கட்சி பிரமுகர் பாலாஜி என்பவர் இரண்டு லட்சம் பணம் கேட்டு மிரட்டினார். என் மகன் தர மறுத்ததால் போராட் டம் நடத்தி என் பெயரை கெடுக்கப் பார்த்தார்கள். புகாரின் பெயரில் போலீசார் கைது செய் தாங்க. புகாரை வாபஸ் வாங்கியதால அவரை விடுவிச்சாங்க... அவ்வளவு தாங்க''’’என்று முடித்துக்கொண்டார்.
அமைச்சரின் குற்றச்சாட்டு தொடர்பாக பாலாஜியிடம் கேட்டபோது, "இது அப்பட்டமான பொய். அமைச்சர்ங்கிற பவர்ல அவர் எது வேண்டுமானாலும் செய்யலாம். நான் மட்டுமா போராடினேன். ஊர் மக்களே போராடினாங்க. எல்லாத்துக்கும் விரைவில் விடிவுகாலம் வரும்' என்றார் ஆதங்கத்துடன்.