14 அல்லது 15 ஆம் தேதிதான் அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என்று பரவலாக சொல்லப்பட்டது. ஆனால், நேற்று இரவு திடீரென்று இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான காரணங்கள் இப்போது வெளியாகி இருக்கிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவம்பர் 17 ஆம் தேதி ஓய்வுபெறுகிறார். அதற்குள் சில முக்கியமான வழக்குகளில் அவர் தீர்ப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவற்றில் 27 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்ட அயோத்தி வழக்கும் ஒன்று.
ரஞ்சன் கோகோய் ஓய்வு பெறும் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகும். முக்கியமான வழக்குகளின் தீர்ப்புகளை விடுமுறை தினத்தில் வெளியிடுவது இல்லை. ஓய்வுபெறும் நாளில் முக்கியமான முடிவுகளை நீதிமன்றம் எடுப்பதில்லை. எனவே, ஒய்வு பெறுவதற்கு முதல்நாளான சனிக்கிழமையும் விடுமுறை தினம் என்பதால் நவம்பர் 14 அல்லது 15 ஆம் தேதி தீர்ப்பு வெளியாகலாம் என்று கருதப்பட்டது.
இந்நிலையில்தான் யாரும் எதிர்பாராத நிலையில் இன்று சனிக்கிழமை காலையில் தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது, தீர்ப்பைத் தொடர்ந்து நாசகார சக்திகள் ஏதேனும் நாசவேலைகளுக்கு சதித்திட்டம் தீட்டியிருந்தால் இந்த அறிவிப்பு அவர்களை நிலைகுலையச் செய்யும் என்று அரசு கருதுகிறது.
நேற்றிலிருந்தே உத்தரப்பிரதேசம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. தலைவர்கள் அனைவரும் இருதரப்பினரும் இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை பெற வேண்டும். யாருக்கும் வெற்றியோ தோல்வியோ இல்லை என்ற நிலையை பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.