
கடந்த 2017ஆம் ஆண்டு தமிழக அரசியலில் மக்களுக்கு நல்லதாக எதுவும் நடக்காத ஆண்டாக இருந்தாலும், பொழுதுபோக்குக்குக் குறைவில்லாத ஆண்டாகவே இருந்தது. அந்த அளவுக்கு நம் அரசியல்வாதிகள் நமக்கு எண்டெர்டெயின்மெண்ட் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். எக்கச்சக்கமாக நடந்திருந்தாலும், பட்டியலில் முன்னணியில் இருக்கும் சில அட்ராசிட்டீஸ் இங்கே...
சந்திரமுகியாய் மாறிய சசிகலா
ஜெயலலிதா இறந்த பின் சசிகலா, தன்னை ஜெயலலிதாவாக நினைத்து நடந்தார், பேசினார், உடை அணிந்தார், முழுதாக ஜெயலலிதாவாகவே மாறினார். கட்சியினர் தினமும் காலில் விழுந்து கேட்டதால் (?) பொதுச்செயலாளர் பதவியேற்று தன் கன்னிப் பேச்சை நிகழ்த்தியபோது சற்று காக்காக் கறி உண்டது போல கலங்கினார்கள் தமிழ் மக்கள். அம்மையாரைப் போன்று தனக்கும் பட்டம் வேண்டுமென்று அவர் பட்டப் பெயருடன் 'சின்ன' சேர்த்து, 'சின்னம்மா' ஆனார். கட்சி பதவி போதாது, தமிழக சிஎம் பதவியும் வேண்டும் என்றார். ஓபிஎஸும் , ஸ்டாலினும் சட்டசபையில் பார்த்துக்கொண்டும், பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருக்கிறார்கள் என்று டீச்சரிடம் புகார் செய்யும் குழந்தையை போல ப்ரஸ்ஸிடம் புகார் செய்தார். 'கூவத்தூர்' என்ற பெயர் யாராலும் மறக்க முடியாத அளவுக்கு எம்எல்ஏ கள் தன் தொகுதி, குடும்பத்தை மறந்து ஆளுமா டோலுமா பாட்டிற்கு ஆட்டம் போட்டனர். சின்னம்மா ஆணைக்கு இணங்க தமிழக ஆளுங்கட்சி அரசியல் ஆடிக்கொண்டிருந்தது. கடைசியில், சிஎம் கனவும் சின்னாபின்னமாக உடைந்து நீதியின் ஆணைக்கு இணங்க, நான்கு வருட சிறைவாசத்திற்கு தயாரானார். கிளைமாக்ஸ் வந்தபின்பும் சும்மா இல்லாமல் பெண் சிங்கம் ஓங்கி அடித்தாலும் ஓரளவு வெயிட்டுடா என்பதைப் போல ஓங்கி ஜெ. சமாதியில் மூன்று முறை அடித்து சிறைக்குக் கிளம்பினார் சின்னம்மா.
போர்வை சூடிய தீபா

குட்டி அம்மா, புரட்சி மலர், அம்மாவின் அடுத்த வாரிசு என்று திடீர் தொண்டர்களால் அழைக்கப்பட்ட தீபா, அடுத்த முதலமைச்சர் நான் தான் என்று வந்து வந்து ஊடகங்களின் முன் காட்சியளித்தார். இவரின் மாஸ் வைரல் வசனம், 'அதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்'. தோற்றத்தில் ஏதோ ஒரு ஆங்கிளில் ஜெயலலிதா போன்று இவர் இருந்ததால், தன் அத்தையைப் போன்றே உடையணிந்து கொள்வோம் என்று எண்ணி சில காலம் போர்வை சூடி உலா வந்தார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த தீபாவின் புதிய கெட்-அப்பும் வைரலானது. முதலில் எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவை, பின்னர் கணவன் பிரிந்து சென்று தனிக்கட்சி, மீண்டும் சேர்ந்தது, போயஸ் கார்டனில் 'ஏய் எச்சக்கல்ல' என்று அண்ணனுடன் சண்டை, தீபா கணவருக்கும் டிரைவருக்கும் சண்டை என தமிழக மக்களுக்கு இவர்கள் அளித்த பொழுதுபோக்கு அளவிட முடியாதது. தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு முன்பே தனது வேட்பு மனு நிராகரிக்கப்படும் என்று தானே கூறிய முதல் அரசியல்வாதியாக தீபா ஒளிர்ந்தார்.
வந்தது ஞானம்... செய்தார் தியானம்
அமைதி...அமைதி....அமைதியோ அமைதி என்று அதுவரை வாழ்ந்த அண்ணன் ஓபிஎஸ், தன் முதல்வர் பதவிக்கு ஆபத்து வந்தவுடன் அம்மாவைத் தேடிச்சென்றார். அரை மணிநேரம் தியானம் செய்து செய்தியாளர்கள் வந்து சேர நேரம் கொடுத்தார். தியானம் முடித்துக் கொடுத்த பேட்டியில் ஒரு நிமிடம் ஆடிப்போனது தமிழகம். மாணிக்கம் பாட்ஷாவாகிவிட்டார் என்று மகிழ்ந்தவர்களை மீண்டும் ஈபிஎஸ்சுடன் இணைந்து ஏப்ரல் ஃபூல் செய்தார்.
'ஆன்டி இந்தியன்' ஹெச்.ராஜா
'யூ ஆர் அன் ஆன்டி இந்தியன்' என்ற இந்த வசனம் தமிழகம் எங்கும் செம ரீச். பட்டுக்கோட்டைக்கு ஒரு விழாவுக்கு சென்ற பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவிடம் மோடியை விமர்சிக்கும் வகையில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு சற்றும் யோசிக்காமல் நீங்கள் ஒரு தேசத்துரோகி என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டார். அன்றிலிருந்து 'ஆன்டி-இந்தியன்' என்ற வார்த்தை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஒலித்தது. இதுமட்டுமல்ல, சாதாரணமாக நடக்கும் விஷயத்தை மதத்துடன் வைத்து ஒப்பிடுவதில் வல்லவர். சாதாரண மசாலா படமான 'மெர்சல்' படத்தை இந்திய அளவில் பிரபலம் அடைய வைத்ததில் இவரின் பங்கு முக்கியமானது. சாரணர் இயக்கத் தேர்தல் வரை சென்று தன் கொடியை நாட்டிய இவரது அட்ராசிட்டீஸை மறக்க தமிழகம் சில காலம் எடுக்கும்.
சண்டையில் கிழிந்த சட்டை

எதிர்க்கட்சியின் செயல் தலைவர் செயல்பட்ட தருணம் அது. சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசிய வாக்கெடுப்பாக நடத்தப்பட வேண்டுமென திமுக கோரிய பிரச்சனையில் சட்டசபையிலிருந்து கிழிந்த சட்டை விரிந்து பறக்க வெளியே வந்தார் ஸ்டாலின். அடிகொடுத்த கைப்பிள்ளைக்கே இந்த நிலமைனா அடிவாங்குனவன் உயிரோட இருப்பான்னு நினைக்கிற என்று மக்கள் வியந்தனர். கடந்த ஆண்டு 'நமக்கு நாமே' என்று பல வகையாய் ஹிட்டடித்த செயல் தலைவர் இந்த ஆண்டு செய்த தரமான சம்பவம் இது. ஸ்டாலின் ஆவேசமாக நடந்து வர, பின்னால் நின்ற காரில் 'சண்டையில கிழியாத சட்ட எங்க இருக்கு' என்பது போல துரைமுருகன் அமர்ந்திருந்தது போனஸ் எண்டெர்டெயின்மெண்ட்.
தெர்மோகோள் ராஜு
இந்த வருடம் 'பெஸ்ட் டெப்யூ' என்று விருது அளிக்கும் அளவுக்கு பெர்ஃபார்ம் செய்த புதுமுகம் இவர். அவர் செய்த செயல் அப்படி, வைகை அணையில் இருக்கும் நீரை சூரிய வெப்பத்தால் ஆவியாகி வீணாகாமல் இருக்க ஒரு திட்டம் கொண்டு வரவேண்டும் என்று நினைத்தார். அத்தனை பெரிய அணையை தெர்மோகோளை வைத்து மூட நினைத்ததுதான் அனைவரிடமும் 'ஹாஹா' ஸ்மைலி வாங்கியது. அவர் அதை வைத்து போஸ் கொடுப்பதற்குள் அது உடைந்து கரை ஒதுங்கி, ஜப்பான் வரை பிரபலமாகியது. இன்று வரை தமிழகத்தில் எது நடந்தாலும் இவரிடம் கருத்து கேட்பது தவறாமல் நடக்கிறது. தெர்மோகோள் திட்டத்திற்கு 10 லட்சம் மதிப்பிட்டுள்ளனர் என்பதும் மறக்கமுடியாதது.
தாமரை தமிழிசை

ஜி எஸ் டியை பற்றிய முழு விவரம் இன்றுவரை பலருக்கும் தெரியவில்லை. முதலில் விலையேறியது, பின்னர் கொஞ்சம் இறங்கியது என்ற அளவிலேயே பலரும் பதற்றத்தில் இருக்கிறோம். ஹோட்டல்களில் முதலில் 18 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி குறைக்கப்பட்டு 5 சதவீதமாக ஆனது. ஆனால், பல ஹோட்டல்களில் அதிக வரி வாங்கிய நிலையில் சார்ஜ் எடுத்தார் தமிழிசை. ஒரு படையுடன் கிளம்பி இருக்குற ஹோட்டல்கள் பக்கம் போய் இட்லிகளை சாப்பிட்டு பில்லை சோதித்தார். தீபா, விஷால் போன்றோர் இல்லாத நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் அட்ராக்ஷனாக அக்கா தான் திகழ்ந்தார்.
எங்க நடந்தாலும் நான் நிப்பேன்
தேர்தல் என்றாலே எடுடா பைக்கை என்று கிளம்பும் ஆம்பள, சினிமாவிலும் நிஜத்திலும் மக்களுக்கு ஏதேனும் ஒன்று என்றால் முதலில் நிற்க வேண்டுமென்று பரபரத்தார். நடிகர் சங்கச் செயலாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என வந்த தேர்தல்களிலெல்லாம் வென்ற புரட்சித் தளபதி. மக்களுக்கு உதவி செய்ய ஆளே இல்லாத ஆர் கே நகரை பிடிச்சிடலாம் என்று தப்புக் கணக்கு போட்டு பைக்கில் கிளம்பி கடைசியில் பல்ப் வாங்கி வந்தார். நிராகரிப்பு, ஏற்பு, நிராகரிப்பு என இவரை மெர்சலாக்கியது அரசியல் களம். 'இது எங்க ஏரியா, உள்ள வராத' என்று அரசியல்வாதிகள் சொல்ல, சினிமாவுக்கே வந்துவிட்டார். ஆனாலும், இது முடிவில்லை, ஆரம்பம் தான் என்பவரின் அடுத்த அட்ராசிட்டியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது இணைய உலகம்.
கும்பலாத்தான் குளிப்போம்

ஜெயலலிதாவும் சசிகலாவும் குளித்த மகாமக குளியலை விட அடுத்த பேமஸ் ஆன குளியல் இந்த காவேரி புஷ்காரம் குளியல்தான். இதில் தமிழகத்தின் செல்ல அமைச்சர்களுடன், நல்ல முதல்வர் புண்ணியம் தேடி குளிக்கச் சென்றார். 'நீட்' பரபரப்பில் நாடே தவிக்க தங்களை கூல் பண்ணிக்கொண்டது இந்த அமைச்சரவை. அமைச்சர்களின் அட்ராசிட்டிகளுக்கு ஆறேழு பக்கங்கள் தேவையென்பதால் முதல்வரின் முதன்மையான அட்ராசிட்டி மட்டும் இங்கே. ஆனால், நமது அமைச்சர்கள் பேசப் பேச ஜெயலலிதா இவர்களை பேச விடாததன் காரணமறிந்து மக்கள் மனதிற்குள்ளேயே நன்றி தெரிவித்தனர்.
வசந்த் - சந்தோஷ் குமார்
டிசைன் - கௌஷிக்