மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து பல்வேறுக் கட்சிளும் தேர்தல் பிரச்சாரத்தை நடத்திவருகின்றனர். இதற்கிடையில், மக்கள் நேர்மையாக வாக்களிக்கவேண்டும் என்பதை வழியுறுத்தி சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களின் மக்கள் பாதை இயக்கம் நேர்மைத் தேர்தல் என்ற முழக்கத்தை முன்னெடுத்துள்ளது. அதன் துவக்கவிழாவில், இயக்குனர் ராஜு முருகன் தேர்தல் குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
இப்போ இன்னமும் சரவணா ஸ்டோர்ஸ் மாதிரி தி பெஸ்ட் பெஸ்ட் என்று மோடி விளம்பரம் பண்ணலையினு எனக்கு ஆச்சரியமாக இருக்கு. ஏனென்றால் எனக்கு இந்தியாவே சரவணா ஸ்டோர்ஸ் மாதிரிதான் தெரியுது. தேர்தல் ஒரு பெரிய வியாபாரமாக மாறியுள்ளது, அதற்கு பெரிய கார்ப்பரேட் விளம்பரங்களுக்காக வேலைப் பார்க்குது. எதுக்கு விளம்பரம் பண்ணுவோம்? விற்காத பொருளுக்குத்தானே விளம்பரம் பண்ணுவோம். தேர்தலுக்கு யார் விளம்பரம் செய்வா? தேர்தலுக்கு எதுக்கு விளம்பரம்? உன்னுடைய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க எதற்காக விளம்பரம்? உன் வேட்பாளரின் தரமும், நியாயமும், நேர்மையும் உனக்குத் தெரிஞ்சா போதாதா? இங்கே எல்லா பெரிய கட்சிகளுமே நேர்முகத்தேர்வில் தங்களுடைய வேட்பாளரிடம் கேட்கிற கேள்விகள் இரண்டுதான். நேர்முகத் தேர்வே ஒரு அபத்தம், நிறைய சீட் வாரிசுகளுக்குத் தான் போகுது, அது வேற விஷயம். அந்த நேர்முகத் தேர்வில் இரண்டே கேள்விகள் தான், ஒன்று எவ்வளவு செலவு பண்ணுவ? இரண்டாவது என்ன சாதி? இதைத் தாண்டி வேட்பாளர் தேர்வு என்பது கிடையாது. கட்சிக்காகவோ வேட்பாளருக்காகவோ நான் இதைப் பேசவில்லை.
இந்த வேட்பாளர் பட்டியலை எடுத்துப் பார்த்தால், மதுரையில் சு.வெங்கடேசன் தோழர் தேர்தலில் போட்டியிடுகிறார். நான் அவருக்கு ஆதரவாக பேசவில்லை. ஆனாலும், ஒரு எழுத்தாளர், ஒரு இளைஞர், கீழடிக்காக தொடர்ந்துப் போராடுகிற தமிழர். அவரைப் பற்றி நான் பேசவில்லை. சாதாரணமாக வேட்பாளர் பட்டியலை எடுத்துப் பாருங்கள், எத்தனை வேட்பாளர்கள் இப்படி இருக்கிறார்கள். பெரும்பாலானா வேட்பாளர்களை சாதி அடிப்படையிலும், பண அடிப்படையிலும், அதிகார அடிப்படையிலும் கட்சிகள் நிற்கவைகின்றன. மக்களும் அப்படியே பார்த்து ஓட்டுப் போடுகிறார்கள், அதுதான் இங்கு பிரச்சனை. அப்போ, பணத்துக்காக ஓட்டுப் போட்டால் அவர் ஊழல் பண்ணுவார், சாதிய பார்த்து ஓட்டுப் போட்டால் அவர் கலவரம் பண்ணுவார், எந்த அதிகாரத்திற்காக ஓட்டுப் போடுறோமோ அந்த அதிகாரத்தை அவர் துஷ்பிரியோகம் பண்ணுவார். சாதிக்காக, பணத்துக்காக, அந்தஸ்துக்காக ஓட்டுப் போடலையினா இது எதுமே உனக்கெதிரா பாயாது. நேர்மைக்காகவும், தரத்திற்காகவும், அரத்திற்காகவும் ஓட்டுப் போடக்கூடிய ஒரு கல்வியை மக்களுக்குக் கொடுக்கணும்.
இந்தியா மாதிரியான தேசத்தில் எத்தனை மொழிகள், எத்தனை இனங்கள், எத்தனை நிலங்கள், அவ்வளவு பேர் பிரிஞ்சு பிரிஞ்சுக் கிடக்கிறார்கள். அடிப்படை வசதிகள் இல்லாமல், வறுமையில், கல்வியில்லாமல், வேலையில்லாமல் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் தொட்டு தூக்கணும்னா, நம்மைப் போன்றவர்கள் அவர்களுக்கு கல்வியைக் போதிக்கணும். அதைத்தான் செய்யணும்னு நினைக்கிறேன். நான் ஒரு விஷயத்தை உறுதியாக நம்புகிறேன். என் கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கும் அரசாங்கமோ அதிகாரமோ நமக்கு ஒரு மண்ணும் செய்யாது. சமூக செயல்பாட்டாளர்களும், தோழர்களும், சமூக சேவகர்களும் தான் இந்த நாட்டைக் காப்பாற்றப் போகிறார்கள். இவ்வாறு இயக்குனர் ராஜு முருகன் பேசினார்.