Skip to main content

குடும்பத்தோட போய் 'சர்கார்' படம் பார்க்கப்போறோம்! - தங்க தமிழ்ச்செல்வனின் தீபாவளி பிளான்

Published on 05/11/2018 | Edited on 06/11/2018

18 எம்.எல்.ஏக்களும் பதவியிழந்த சூழ்நிலை... இடைத்தேர்தல் இப்போ வருமோ எப்போ வருமோ என்ற டென்ஷன்... தொலைக்காட்சி விவாதங்கள், பத்திரிகை பேட்டிகள் என பரபரப்பாகவே இருக்கும் அ.ம.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனை சில தீபாவளி ஸ்பெஷல் ஜாலி கேள்விகள் கேட்கலாம் என்று தொடர்பு கொண்டோம். இந்த சூழ்நிலையில் இதைக் கேட்டால் கோபத்தில் பட்டாசாக வெடிப்பார் என்று பயந்தால், அவரோ மத்தாப்பாக சிரிக்கிறார். தங்க தமிழ்ச்செல்வனிடம் ஒரு ஜாலி பேட்டி...

 

thanga thamil selvan



உங்கள் கட்சியின் 18 எம்.எல்.ஏக்களும் பதவியிழந்திருக்கிறார்கள், இடைத்தேர்தல் வரவிருக்கிறது. இந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியில் இந்த தீபாவளியை எப்படி கொண்டாட திட்டமிட்டிருக்கிறீர்கள்?

நானும், என் குடும்பமும் தீபாவளியை பெரும்பாலும் விமர்சையாகக் கொண்டாடுவது இல்லை. மனைவி காலையில் எழுப்புவாங்க, காலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து புத்தாடை அணிந்து குடும்பத்துடன் செலவிடும் ஒரு விடுமுறை நாளாகவே பெரும்பாலும் தீபாவளி இருக்கும். அதுவும் தேர்தலில் போட்டியிட்டு வென்ற எம்.எல்.ஏ பதவி பறிபோய் இருக்கும் இந்த நேரத்தில் குடும்பத்துடன் இருந்து சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான்.(சிரிக்கிறார்)

சென்னையில்தான் இருக்கேன். குடும்பத்தில் எல்லோரும் இங்கதான் தீபாவளிக்கு இருக்கோம்.
பொங்கல் என்றால்தான் எங்க வீட்டில் சிறப்பாக இருக்கும். ஊர்ல தோட்டம், மாடுகள் எல்லாம் இருப்பதால அங்க போயிடுவோம். குடும்பத்தோட, தோட்டத்துல வேலை செய்றவங்க எல்லோருக்கும் புதுத்துணி எடுத்து ரொம்ப சிறப்பா கொண்டாடுவோம். 

தீபாவளி ஷாப்பிங்குக்காக குடும்பத்தோடு கடைகளுக்குப் போவது, தீபாவளி அன்று படத்துக்குப் போவது போன்ற வழக்கங்கள் இருக்கா?

தீபாவளிக்குத் துணி எடுக்கக் கூட நான் போக மாட்டேன். என் மனைவிதான் கடைகளுக்குச் செல்வார். என் உடைகளையும் அவரே தேர்வு செய்வார். பொதுவாக படங்களுக்குச் செல்லும் பழக்கம் இல்லை. ஆனால் இந்த முறை குடும்பத்தோடு 'சர்கார்' படத்துக்குச்  செல்லும் திட்டம் உள்ளது. விஜய் அப்படி என்னதான் சொல்லுவாருன்னு பாப்போமே... அரசியல் படம்னு சொல்றாங்க. இந்த ஆட்சி பற்றியெல்லாம் இருக்குன்னு சொல்றாங்க. பாப்போம் என்ன பேசியிருக்கார்னு. முன்னாடி தலைவர் எம்.ஜி.ஆர் படங்களை விரும்பிப் பார்ப்பேன். அதைத் தவிர 'பூவே பூச்சூடவா' படத்தை அஞ்சு, ஆறு தடவை தியேட்டரில் போய் பார்த்தேன். நதியாவின் நடிப்பு, பாசம், பாடல்கள், இப்படி அந்தப் படம் ரொம்பப் பிடிக்கும்.

 

thanga tamilselvan with jeyalalitha



ஜெயலலிதா இருந்த பொழுது தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் பொழுது அவரை சந்தித்து வாழ்த்து சொல்லியிருக்கீங்களா?

தீபாவளி, பொங்கல் அன்னைக்கு சந்திச்சதில்ல. அம்மா இருந்த பொழுது தீபாவளி, பொங்கல் சமயங்களில் அவரும் எங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் சொல்வார். நாங்களும் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு முன்பு அவரை சந்தித்து வாழ்த்துகள் சொல்லுவோம். இப்போ சின்னம்மா சிறையில் இருப்பதால பண்டிகைகள் எதையும் பெருசா கொண்டாடுறது இல்ல.

முதன்முதலாக ஜெயலலிதாவை எப்போது சந்தித்தீர்கள்?

96’ல  சந்திச்சேன். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பதவி வழங்குனாங்க. அதுக்குப் பிறகு 2000த்துல சந்திச்சேன், மாநில மாணவரணி செயலாளர் பதவி வாங்குனேன். 2001இல் கூப்பிட்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்புத் தந்தாங்க. போட்டியிட்டு ஜெயிச்சேன். அப்புறம் ராஜினாமா பண்ண சொன்னாங்க, பண்ணேன். பிறகு எம்.பி ஆக்குனாங்க, 2 தடவ எம்.எல்.ஏ ஆக்குனாங்க.

ஜெயலலிதா மனதில் நீங்கள் நம்பிக்கையையும், நற்பெயரையும் பெற்றது எப்படி?

ரெண்டாவது முறை ஆண்டிப்பட்டி தொகுதில அம்மா பிரச்சாரம் பண்ண வந்தப்ப தொகுதியில் யாரும் ஒரு குறை கூட சொல்லல. இதனால அம்மாக்கு என்மேல நம்பிக்கை வந்துச்சு. தொகுதியில் ரொம்ப எளிமையா இருப்பேன். பெரும்பாலும் மக்களுடன் ஒன்றி இருப்பேன். அந்தத் தேர்தலில் எளிதா ஜெயிக்க முடிஞ்சது. அதனால அம்மாக்கு என் மேல பாசம் உண்டு. 

 

thanga tamil selvan



பேட்டிகளில் ரொம்ப, ஆவேசமா, கோபமா பேசுறீங்க. நிஜ வாழ்க்கையில் எப்படி?

எல்லாரும் எங்களையே துருவித் துருவி கேள்வி கேக்குறீங்க, பேட்டி எடுக்குறீங்க. யாராவது அமைச்சர்களை, ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களை இப்படி கேக்குறீங்களா? அதான் அப்படி. ஆனா நிஜ வாழ்க்கையில நல்லாதான் இருப்பேன். அப்பதான இவ்ளோ பெரிய இடத்துக்கு வர முடியும்!

தினகரன் கூட எப்படி நெருக்கம் ஏற்பட்டது? தனிப்பட்ட முறையில் உங்கள் உறவு எப்படி?

1999ல அவரு எம்.பி ஆனார். வந்து தேனியில தங்குனார், அப்ப நானும், ஓ.பி.எஸ்ஸும் நெருக்கம் ஆனோம். ஓ.பி.எஸ் கொஞ்சம் பணிவ அதிகமா காட்டி முதலமைச்சர் வரைக்கும் வந்துட்டாரு, நான் கொஞ்சம் நிமிர்ந்தேன், வர முடியல.தினகரன் ஆண்டிபட்டிக்கு வரும்போது வீட்டுக்கு வருவாரு, சாப்பிடுவாரு. நானும் சென்னையில் அவர் வீட்டுக்குப் போவேன், சாப்பிடச் சொல்வார், சாப்பிடுவேன். குடும்ப அளவுல எங்களுக்குள் நல்ல உறவு இருக்கு.

தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதிச்சு இருக்காங்களே, அதைப் பற்றி உங்க கருத்து என்ன?

இதெல்லாம் தேவை இல்லாத தீர்ப்பு. 3 லட்சம் குடும்பங்கள் இதை நம்பி இருக்கு. எப்பவோ ஒரு தடவ வெடிக்குறதுதான? இந்தத்  தீர்ப்புக்கு மாநில அரசு மேல்முறையீடு வேற பண்ணுது, எந்த நேரத்துல வெடிக்குறதுனு.

இடைத்தேர்தல் வருமா? வந்தால் உங்க நிலைப்பாடு என்ன?

இடைத்தேர்தல் வந்தால் கண்டிப்பாக எதிர்கொள்வோம். கண்டிப்பா ஜெயிப்போம். ஆனால், எனக்குத் தெரிஞ்சு இப்ப இருக்கும் நிலைமையில இடைத்தேர்தல் உடனே வராது. பாராளுமன்ற தேர்தலோடுதான் வரும்.

'8 தொகுதிகளில் மட்டுமல்ல, 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்' என ஓ.பி.எஸ் கூறியுள்ளது பற்றி?

ஆர்.கே நகர்ல 32 அமைச்சர்கள் வந்து பல்டி அடிச்சு தோத்துத்தான போனாங்க? இப்ப அந்தர் பல்டி அடிச்சுத்தான் போவாங்க. 32 பேரும் இப்போ இருபது தொகுதிக்குப் பிரிஞ்சு போகணுமே... 32 இல்ல தொகுதிக்கு 300 பொறுப்பாளர்கள் போட்டு, ஓட்டுக்குப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தாலும் ஜெயிக்க
முடியாது.

அவ்வாறு பணப்பட்டுவாடா நடந்தால் நீங்கள் பிடித்துக் கொடுப்பீர்களா?

தேர்தல் ஆணையம், காவல்துறை, நீதிமன்றம் எல்லாத்தையும் இவுங்க கையில் வச்சு ஆட்டிப்படைச்சுகிட்டு இருக்காங்க. பிடிச்சுக்  கொடுத்தா மட்டும் என்ன கேஸா போட போறாங்க? ஏற்கனவே ஆர்.கே.நகர்ல வண்டி வண்டியா புடிச்சுக் கொடுத்ததுக்கே இன்னும் நடவடிக்கை எடுக்கல. பணம் கொடுப்பாங்க, ஆனால் மக்கள் அவங்களுக்கு ஓட்டு போட மாட்டாங்க.

ஜாலியாக ஆரம்பித்த பேட்டியில் அரசியலும் கலந்துவிட்டது... சரி, ஜாலியாக முடிப்போமென்று ''சர்கார்' படத்தில் விஜய் பேசும் அரசியல் சரியாக இருந்தால் அதை ஆதரிப்பீர்களா?' என்று கேட்டோம். வெடித்துச் சிரித்தவர், "படம் பாத்துட்டு சொல்றேங்க" என்றார்.

 

 

 

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தர்மத்துப்பட்டியில் டி.டி.விக்கு வந்த சோதனை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The trial came to TTV in Dharmathuppatti

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள்,  அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள தர்மத்துப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரன் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.