சமீபமாக காவிரிக்காக நடக்கும் பெரும்பாலான போராட்டங்களில் முன்னிலையில் நின்று போராடுபவர் அமீர். இது அவருக்கு புதிதல்ல. தமிழர்களுக்கு எப்போதெல்லாம் பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் முன்னிலையில் நின்று குரல் கொடுப்பவர்தான் அவர். இயக்குனர் அமீருடன் ஒரு நேர்காணல்...
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் தாக்கத்தால், ஐபிஎல் மாற்றிவைக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தின் சர்ச்சைக்குரிய விஷயமாக ஆளுநரின் நடவடிக்கை பார்க்கப்படுகிறது. அதில் உங்களுடைய பார்வை என்ன ?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே தமிழகத்துக்கு என்று ஒரு நிரந்தர ஆளுநர் இல்லாமல் அது சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியது. அதற்கு பின் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் உள்ள பாஜகவைச் சேர்ந்தவரான தற்போதைய ஆளுநர் பன்வாரிலால் நியமிக்கப்பட்டார். இந்த ஆளுநருக்கு பின்தான் தமிழகத்தில் இரட்டை தலைமை இருப்பது போன்று, அவர் தனியாக ஆய்வுகள் எல்லாம் நடத்தினார். அப்போது இருந்தே இந்த சர்ச்சைகள் தொடங்கிவிட்டது.
அவர் "தன் அதிகாரங்களுக்குள் உட்பட்டு இருப்பதைதான் நான் செய்கிறேன். அதை மீறி நான் எதுவும் செய்வதில்லை " என்று அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்கிறாரே?
எதை அவர் அதிகாரத்திற்கு உட்ப்பட்டது என்று சொல்கிறார் என்பதை பார்க்கவேண்டும். இதற்கு முன்னர் இருந்த முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் கலைஞர் இருந்த பொழுது இப்படி யாரும் பேசியதல்ல. எங்கு தலைமை அதிகாரம் குறைவாக இருக்கிறதோ அங்கு தான் இந்த பாஜகக்காரர்கள் இவ்வாறு செய்கிறார்கள். அப்படித்தான் புதுச்சேரியிலும் நடக்கிறது. பாஜகவால் நியமிக்கப்பட்டவர்கள்தான் இப்படியெல்லாம் செய்கிறார்கள். பன்வாரிலால் சூரப்பா நியமனம் உள்ளிட்டு அவர் தொடர் சர்ச்சைகளில்தான் இருக்கிறார். இது அனைத்துமே தெரிந்துதான் நடக்கிறது. ஆனால், அதை கேட்கத்தான் தமிழக மக்களும், அமைச்சர்களும் திராணி அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயமாக கருதுகிறேன். கண்ணுக்குக்கு முன்னால் ஒரு அநீதி நடக்கிறது, ஒரு வரம்புமீறல் நடக்கிறது. ஆனால், அதை கேட்க முடியாமல் இருக்கிறது என்று நினைக்கும்போது அது வருத்தம் அளிக்கிறது.
தமிழக அரசு இந்த பிரச்சனையை சிபிசிஐடி க்கு மாற்றியிருக்கிறதே ?
சந்தோசம், ஒன்றுமில்லை ஓய்வுபெற்ற சந்தானம் ஐஏஎஸ் தலைமையில் ஒரு கமிஷன் அமைத்திருக்கிறார்கள். அவரது ட்வீட்களை எல்லாம் பாருங்கள். அவருடைய ட்வீட்கள் அனைத்தும் பாஜகவை ஆதரித்தே இருக்கிறது. அப்பொழுதே தெரிந்துவிடுகிறது இந்த கமிஷனின் முடிவு என்னவாக வரும் என்று. இந்தியாவில் பல விசாரணை கமிஷனை பார்த்திருக்கிறோம், அதன் முடிவுகள் என்னவென்று நமக்கு தெரியும். இதன் ஆரம்பத்திலேயே இதன் முடிவு என்ன என்று தெரிகிறதே. அரசியலில் அவ்வாறு தானே பார்க்கமுடிகிறது. தனக்கு வேண்டிய ஒருவரை நியமித்தால், அதில் என்ன வரும். நான் கேட்கிறேன், பேரறிவாளன் குற்றவாளி என்று வாக்குமூலம் பொய்யாக வாங்கிய காவலாளி, இன்று நான் அதை தவறாக வாங்கிவிட்டேன் என்று ஒப்புக்கொள்கிறார். இருந்த போதிலும் அவரது வழக்கில் ஏதேனும் மாற்றம் வந்துவிட்டதா? ஒரு உண்மை ஒப்புக்கொண்ட பின்னும்கூட மாற்றம் வரவில்லை. இந்த விசாரணையில் எங்கு உண்மை வரப்போகிறது. இதேபோலத்தான் சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி என்று ஒருவரை காவலர்கள் கைது செய்கிறார்கள். என்னடா இது வழக்கு திசை திரும்புகிறதே என்று தோணுகிறது. ஒரு சினிமா பிரபலம் ட்வீட் செய்கிறார், அந்த வழக்கில் திடீரென ஒரு கிராமத்து இளைஞனை கைது செய்கிறார்கள். அவன் பிடிக்கப்படும் போதே தற்கொலை செய்ய முயன்றான் என்று சொல்லும் காவலர்கள், ஏன் அவருக்கு உரிய பாதுகாப்பை சிறையில் கொடுக்கவில்லை. நீதிமன்றத்தில் தொண்ணுறு நாட்கள் கழித்து அவர் பேசியிருக்கும் நிலையில் அவர் தற்கொலை செய்துவிட்டார் என்று செய்தி வருகிறது. இந்த விசாரணை கமிஷனின் மூலம் நீதி கிடைத்துவிடும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை, கிடைத்துவிட்டால் சந்தோசம். பரவாயில்லை, பாஜக தங்களின் கட்சி மீதும், ஆளுங்கட்சியின் மீதும் நடவடிக்கை எடுத்துவிட்டது என்றால் அதை வரவேற்பேன்.
ஜெயலலிதா இருக்கும்போதும் போராட்டக்காரர்கள் ஒடுக்கப்பட்டார்கள், கலைஞர் காலத்திலும் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் நீங்களுமே கைது செய்யப்பட்டு இருக்கிறீர்கள். ஏன் மோடி அவ்வாறு போராட்டத்தை எதிர்த்தால் மட்டும் வேறுமாதிரி சொல்கிறீர்கள் ?
எல்லா ஆட்சிக்காலத்திலும் போராட்டக்காரர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அதுதான் சிஸ்டம். இங்கு சிஸ்டம் என்று சொல்லப்படுவது இதைத்தான். காவல்துறையும், அரசாங்கவேலை பார்ப்பவர்களும் அரசாங்கத்துக்கு கட்டுப்பட்டும் ஆதரவளித்து தான் இருப்பார்கள். இதில் ஒன்று அல்லது இரண்டு பேர்தான் விதிவிலக்கு. அவர்களும் டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டே வேலையை பார்த்து வருவார்கள். இதுதான் கடந்த முப்பது வருட கால அரசியல். அந்த கருத்தை இதில் சொல்லவில்லை. ஏன் அதிமுக ஆட்சியை பாஜகவின் பினாமி ஆட்சி என்று சொல்கிறோம் என்றால், அதை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். எதை கேட்டாலும் மத்திய அரசு பார்த்துக்கொள்ளும் என்கிறார்கள். அவர்களுடன் ஒற்றுமையாக இருந்தால்தான் தமிழகத்துக்கு சலுகைகள் எல்லாம் கிடைக்கும் அதனால் தான் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்கின்றனர். ஆனால் என்னவிதமான சலுகைகள் பெற்று இருக்கிறார்கள் என்பதை தெரிவிக்க மறுக்கிறார்கள். நாம் பொதுவாக குற்றச்சாட்டுகளை வைக்கவில்லை, இது அனைத்தும் அவர்களாகவே கொடுத்த வாக்குமூலம்தான். முதல் முறையாக ஒரு துறை சார்ந்தவரின் மீது இப்படியொரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது. நிர்மலா தேவியை இன்னும் பத்திரிகையாளர் சந்திப்பு கொடுக்க அனுமதிக்கவில்லை, அதற்குள் ஆளுநர் அவசர அவசரமாக ஆளுநர் மாளிகையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துகிறார். நான் ஆளுநரை குற்றவாளி என்று சொல்லவில்லை, ஆனால் இது அனைத்தும் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
தன் மீது இருக்கும் குற்றச்சாட்டுக்கு ஒரு வெளிப்படையான விளக்கமாக எடுத்துக்கொள்ளலாம் அல்லவா ?
யார் குற்றச்சாட்டு வைத்தார்கள், காவலாளிகளா ? இல்லையே. சமூக வலைத்தளங்களில் பார்க்கும் மீம்ஸ்களுக்கு எல்லாம் விளக்கம் கொடுக்கப்பட வேண்டுமானால், பிரதமர் மோடி முதல் எல்லோரும் கொடுத்தாக வேண்டும். இதை எந்த கட்சியாலும் செய்ய முடியாது. உடனடியாக ஒரு ஆளுநர் அந்த சர்ச்சையின் உண்மை தன்மையை குறைக்கும் விதமாக பத்திரிகையாளர் சந்திப்புகள் வைத்தால், அப்படியொரு ஐயப்பாடு எழாதா ? மேலும், மேலும் இது சந்தேகங்களை வலுப்படுத்துகிறது. பெரும்பான்மையான அதிகாரங்கள் ஒரு கட்சியிடம் இருந்தால், இது போன்ற பிரச்சனைககளை எல்லாம் சந்தித்துதான் ஆக வேண்டும்.
ஐபிஎல் போட்டிகளை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று நடந்த பிரமாண்ட போராட்டம் நல்ல முடிவுகளை கொடுத்துள்ளது. அவர்கள் வேறு இடத்திற்கு மாற்றியுள்ளனர். ஐபிஎல் போட்டியை மாற்றுவது மட்டும் தான் உங்களது இலக்கா இல்லை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உங்களது இலக்கா ?
இது எல்லாம் சும்மா சொல்கிறார்கள். எங்களுக்கு வேலை இல்லை, அதனால்தான் போராட வருகிறோம் என்றுறெல்லாம் கூட சொல்கிறார்கள். நான் அப்படி சொல்பவர்களை பார்த்து உங்களுக்கு டீ கிளாஸ் கழுவக்கூட வேலையில்லை, அதனால் தான் அரசியலில் இருக்கிறீர்கள் என்று சொல்லலாம். அவர்களுக்கு என் சம்பளம் என்ன என்று தெரியுமா? என்னுடன் வந்த பிரபலங்களின் சம்பளம் என்ன என்று தெரியுமா? இது ஒரு சப்பையான, கேவலமான, மூன்றாம் தர வாதங்கள், விமர்சனங்கள். இதற்கு முன்னர் பலமுறை சந்தித்த அரசியல்வாதிகளை தற்போது ஏன் மோடி சந்திக்க மறுக்கிறார். இதற்கு முன் தமிழக நலன் கருதி சந்தித்ததாக கூறுபவர்கள். காவிரி மேலாண்மை வாரியம் என்பது தமிழகத்தின் நலன் கிடையாதா? காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பததுதான் எங்களது நோக்கம், இந்த ஐபிஎல் போட்டியை நாங்கள் தடை செய்யக்கூட சொல்லவில்லை நாங்கள் வேறு இடத்திற்குதான் மாற்ற சொன்னோம். ஆனால், அந்த அணியின் சிஇஓ எங்களின் உணர்வுகளை சோதித்து பார்க்கும் வகையில் பதிலளித்தார். இது தமிழக மக்களின் குரல் என்பதாலையே இந்த போராட்டம் வெற்றியடைந்தது. நாங்கள் உணர்ச்சிவசப்பட்டுதான் இப்படி செய்கிறோம் என்று சொல்கிறார்களே. அப்படி என்ன தவறாக போராட்டம் செய்தோம், ஐபிஎல் என்பது விளையாட்டு அதை டிவியில்கூட பார்த்துக்கொள்ளலாம். ஒரு இழவு விழுந்த வீட்டுக்குப்பக்கத்து வீட்டில் நிகழ்ச்சி நடத்தினால் அது எப்படி இருக்கும். அப்படிப்பட்ட ஒன்று தான் இது. இதன் மூலமாக அனைத்து மக்களுக்கும் காவிரி மேலாண்மை வாரியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம். மேலும் அன்று அசம்பாவிதங்கள் நடைபெற்றதாக சொல்கின்றனர். முதலில் காவலர்கள்தான் அங்கு தடியடி நடத்தினார்கள். அசம்பாவிதம் எதுவும் அங்கு நடக்கவே இல்லை. வெறும் எட்டுநூறு நபர்களுக்காகவா இந்த மத்திய பின்புலமும் இராணுவ பின்புலமும் கொண்டவர்கள் மாற்றம் செய்யப்படுகிறார்கள். கைது செய்யப்பட்டவர்கள் வெறும் எட்டுநூறு பேர் தான், ஆனால் இதற்காக உணர்வாக இருந்தவர்கள் எத்தனை பேர். இந்த போராட்டங்கள் முடிந்து இரண்டு நாட்களுக்கு பின்தான் மோடியும் வந்தார். பல எதிர்ப்புகள் இருந்துள்ளது. "கோ பேக் மோடி" என்ற ஹாஷ்டாக் உலகம் முழுவதும் டிரண்ட் ஆனதே, அதற்கு நாங்களா காரணம். மக்கள் அனைவரும் நினைத்தனர், அதை செய்தனர். அவ்வளவுதான். இது அனைத்தும் உணர்வின் வெளிப்பாடு. இது மக்களின் வெற்றி, இந்த வெற்றியை கொண்டாடவிடாமல் இந்த ஆட்சியளர்களும், ஊடகவியாளர்களும் செயல்படுகிறார்கள். மக்கள் என்பது நாங்கள் மாட்டும் தானா அரசியல்வாதிகள் முதல் ஊடகவியாளர்கள் வரை அனைவரும் மக்கள் தானே.
முத்தலாக் போன்ற பல பிரச்சனைகளில் மோடியை எதிர்த்து இருக்கிறீர்கள். அதனால் தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உங்கள் குரல் ஒலிக்க காரணமாக இருக்கிறதா?
நான் முதலில் என்னைப்பற்றி சொல்கிறேன். நான் எனக்கு கிடைத்த வெளிச்சத்தை வைத்து இந்த மக்களுக்கு ஏதேனும் செய்ய நினைக்கிறன். எனக்கு சாதியும் கிடையாது, மதமும் கிடையாது அதில் நான் தெளிவாக இருக்கின்றேன். என்னை "பாரத் மாத்தா கி ஜே" என்று சொல்ல சொன்னாலும் நான் சொல்லுவேன். அதில் என்ன இருக்கிறது. அப்படி சொல்வதானால் என்ன குறைந்து விட்டேன். தேசிய கீதம் ஒலித்தால் உடனடியாக எழுந்து நிற்பவன். நான் எதிர்ப்பதற்கு மத்திய அரசின் நிலைப்பாடுதான் காரணம். முத்தலாக் விஷயத்தில் நான் ஏன் எதிர்த்தேன் என்றால், ஒரு பெண் கொடுத்த வழக்குக்கு உடனே, உடனே எல்லாம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், முத்தலாக் என்ற ஒன்று வேண்டும் என்று இலட்சக்கணக்கான பெண்கள் போராடினர், அது அவர்கள் கண்களுக்கு தெரியவில்லையா? ஒரு பெண் பல இஸ்லாமிய பெண்களின் பிரமுகராக இருந்தாரா இல்லை, பாஜகவின் பிரமுகராக இருந்தாரா என்பதுதான் இங்கு கேள்வியே. இந்த இடத்தில் ராகுல் காந்தி இருந்தால் கூட இதைத்தான் செய்வோம். ஒருவேளை பெரும்பாலான இஸ்லாமிய பெண்கள் முத்தலாக் முறையை எதிர்த்தால் அதை நான் ஒப்புக்கொள்வேன். ஆனால் இங்கு அப்படி நடைபெறவில்லையே. காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனையில்கூட உச்சநீதிமன்ற தீர்ப்பைக்கூட அமைக்கமுடியாத ஒரு அரசாங்கமாக இருக்கிறதே என்றுதான் எங்களுக்கு கோபமாக இருக்கிறது. கேட்கவே நாதியற்றவர்களாக தமிழக விவசாயிகள் இருக்கிறார்கள். இந்திய பாராளுமன்ற வளாகத்தில் நடத்தப்படும் போராட்டத்தின் குரல், உள்ளே இருப்பவர்களுக்கு கேட்கவில்லையே.