Skip to main content

மாநகராட்சி வார்டுக்கு ரூ. 3 கோடி, நகராட்சி வார்டுக்கு ரூ. 2 கோடி.. கணக்குப்போடும் திமுக அமைச்சர்கள்! 

Published on 16/02/2022 | Edited on 16/02/2022

 

DMK Inter party politics issue in local body election

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தில் தலைவர்களின் பரப்புரை களைகட்டுகிறது. வேட்பாளர்களின் வாக்குச் சேகரிப்பு பணி தீவிரமாக உள்ளது. பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தி.மு.க.வின் மா.செ.க்களிடம் நாம் பேசியபோது, "எட்டு முனைப் போட்டி என்றாலும் எங்களைப் பொறுத்தவரை தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையேதான் போட்டி. பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் 60 சதவீதம்தான் வேட்பாளர்களை களமிறக்கியிருக்கின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி 80 சதவீத இடங்களில் போட்டியிடுவதாக தெரிகிறது. அதனால், தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும்தான் அனைத்து இடங்களிலும் போட்டி'' என்கிறார்கள்.

 

தொடர்ந்து நம்மிடம் பேசிய அவர்கள், "தி.மு.க.வின் 8 மாத ஆட்சியில் நடந்துள்ள சாதனைகளையும் வேட்பாளருக்குரிய தகுதிகளையும், கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேடுகளால் உள்ளாட்சி அமைப்புகள் குட்டிச்சுவராகிவிட்டன என்பதையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரியுங்கள் என கட்சித் தலைமை அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். காரணம், வேட்பாளரின் தகுதிகளைக் குறிப்பிடும் போது அவர் மீதுள்ள கிரிமினல் பின்னணிகளை ஏரியாவாசிகளே வாசிக்கிறார்கள். கிரிமினல் பின்னணி உள்ளவர்களுக்கும், உறவினர்களுக்கும் சீட் ஒதுக்கக்கூடாது என தலைமை உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதனை மா.செ.க்கள் மதிக்கவில்லை.

 

தவிர, கட்சி நிர்வாகிகளின் மனைவி, மகள், மருமகள், மகன், மைத்துனர் என வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதையும் ஏரியா மக்களே வெளிப்படுத்துகிறார்கள். வேட்பாளர்களின் தகுதியைப் பற்றி பேசினால் இப்படி எதிரான விசயங்கள் மக்களிடம் இருக்கிறது. ஆட்சியின் 8 மாதகால சாதனைகளை சொல்கிறபோது, "மாதம் 1000 ரூபாய் பெண்களுக்கு தர்றேன்னு சொன்னீங்களே கொடுத்தீங்களா? நகைக் கடன் தள்ளுபடி செய்வோம்னீங்க, நகை எங்களுக்கு கிடைச்சிடுச்சா? என பல விசயங்களை நேரடியா கேட்கிறாங்க” என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

 

தேர்தல் களத்தில் இத்தகைய சிக்கல்களை தி.மு.க. நிர்வாகிகள் எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது. இதனை மா.செ.க்களிடம் சொன்னால், ’ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும். போக போகச் சரியாகி விடும். கொடுத்த வேலையைப் பாரு என நிர்வாகிகளிடம் கடுப்படிக்கின்றனர். இதனால் இதனையெல்லாம் தலைமையிடம் எப்படிச் சொல்வது? என்கிற தயக்கம் அவர்களிடம் இருக்கிறது.

 

இந்த நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் புகார்கள் அறிவாலயத்தில் குவிந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து நாம் விசாரித்தபோது, "போட்டியிடும் இறுதி வாக்காளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டதற்கு பிறகு, தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக போட்டி வேட்பாளராக யாரேனும் களமிறங்கியிருந்தால் அவர்கள் பற்றிய பட்டியலை உடனே அறிவாலயத்துக்கு அனுப்பி வைக்கவும் என மா.செ.க்களுக்கு உத்தரவிட்டது கட்சித் தலைமை. இதனையறிந்த கூட்டணிக் கட்சி தலைமைகள், இந்த அறிவுறுத்தல் தி.மு.க.வுக்கு மட்டும்தானா? கூட்டணி கட்சிகளுக்கு இல்லையா? எனக் கேட்பதும் அறிவாலயத்தில் பதிவாகிறது.

 

தி.மு.க.வில் சீட் கிடைக்காத பலரும் சுயேட்சையாக களமிறங்கியிருப்பதைக் கண்டறிந்து கட்சி தலைமைக்கு மா.செ.க்கள் தெரியப்படுத்தினர். தலைமையின் அறிவுறுத்தல்படி போட்டி வேட்பாளர்களை வாபஸ் பெற வைத்தனர். ஆனாலும், சில மாவட்டங்களில் வாபஸ் பெறப்படவில்லைன்னு புகார் வந்தபடி இருக்கிறது.

 

தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து தி.மு.க.வினரே சுயேச்சையாகப் போட்டியிடுபவர்களை எப்படியாவது சமாதானம் செய்து வாபஸ் பெற வைத்துவிடுகிறோம். ஆனால், கூட்டணிக் கட்சியினர் சுயேச்சையாக களமிறங்குவதைதான் தடுக்க முடியவில்லை. இதனை கூட்டணிக் கட்சியின் தலைமையிடம் சொன்னால், எங்க வேட்பாளரை எதிர்த்து தி.மு.க.வினர் போட்டியிடுகிறார்களே, அவர்களை வாபஸ் பெறச் சொல்லுங்கள்; நாங்களும் சொல்கிறோம் என கெத்து காட்டுகிறார்கள். இந்த விவகாரமும் தி.மு.க.வுக்கு தலைவலியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

 

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சியிலுள்ள 18 வார்டுகளில் 32,000 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் வன்னியர்கள் 16,500 பேரும், முதலியார்கள் 8,000 பேரும், தாழ்த்தப்பட்டோர் 2,500 பேரும், மீதி பல்வேறு சமூகத்தினரும் இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில், வன்னியர்களுக்கு 7 சீட், முதலியார்களுக்கு 7 சீட் கொடுத்துள்ளார் ஒன்றிய தி.மு.க. செயலாளரும் முதலியார் சமூகத்தவருமான தமிழ்மணி. வன்னியர்களுக்கு 10 சீட் தரப்பட்டிருக்க வேண்டும். முதலியாருக்கு ஒதுக்கப்பட்ட 7 சீட்டுகளிலும் கட்சியினரைவிட தனது மகள், தனது மைத்துனர், தனது அண்ணன் மகன் என 3 சீட்டுகளை தனது குடும்பத்துக்காக ஒதுக்கிக்கொண்டார்.

 

மற்ற 4 சீட்டில் அவரது சமூகத்தவரான பேரூர் தி.மு.க. செயலாளரும் முதலியாருமான யுவராஜுக்கு ஒரு சீட், அவரது அண்ணன் சுந்தரமூர்த்திக்கு ஒரு சீட் தந்துள்ளார் தமிழ்மணி. மிச்சமிருந்த இரண்டையும் தூரத்து உறவினர்களுக்கே தந்திருக்கிறார். தவிர, காங்கிரசுக்காக ஒரு சீட் ஒதுக்கிவிட்டு காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து எத்திராஜ் முதலியார் என்பவரை சுயேச்சையாகக் களமிறக்க வைத்துள்ளார் தமிழ்மணி.

 

தமிழ்மணியை தொடர்புகொண்டு கேட்டபோது, "குறிப்பிட்ட 7 வார்டுகளிலும் முதலியார்கள்தான் அதிகம். அதனால் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. வேறு சமூகத்தினர் இல்லையே, என்ன செய்ய? அதேபோல தி.மு.க.விலுள்ள முதலியார்கள் யாரும் சீட் கேட்காததால் என் குடும்பத்தினருக்கே சீட் தரப்பட்டது. வன்னியர்களை கட்சி ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நான் புறக்கணிக்கவில்லை. எம்.எல்.ஏ.வை பத்தி சொல்வதற்கு ஒன்றுமில்லை'' என்று முடித்துக்கொண்டார் தமிழ்மணி.

 

திருக்கழுக்குன்றம் ஒன்றியம் திருப்போரூர் தொகுதியில் அடங்கியிருக்கிறது. தொகுதியின் எம்.எல்.ஏ.வாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எஸ்.எஸ்.பாலாஜி இருக்கிறார். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இவர் அனைத்து தரப்பு மக்களுக்கும் துணையாக இருப்பவர். ஒன்றியத்தில் நடக்கும் எந்த அரசு விழாவுக்கும் பாலாஜியை அழைக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு கட்டளையிட்டுள்ளார் தமிழ்மணி. தனது சாதி அபிமான அரசியலை அவர் முன்னிறுத்துவதால் தேர்தலில் பல சிக்கல்களை தி.மு.க. எதிர்கொண்டிருக்கிறது என்கிறார்கள் உடன்பிறப்புகளே. இதே போன்ற பல குற்றச்சாட்டுகள் தமிழகம் முழுவதிலுமிருந்து வரு கின்றன” என்கிறார்கள் அறிவாலயத்துக்கு நெருக்கமான தி.மு.க. நிர்வாகிகள்.

 

இதுஒருபுறமிருக்க, தி.மு.க.வின் வாக்கு வங்கியில் கணிசமாக இருப்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாக்குகள் தான். இவர்களின் முக்கிய கோரிக்கையான புதிய பென்சன் திட்டத்தை சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிப்படி ரத்து செய்வதில் விரைவான முன்னெடுப்பை தி.மு.க. அரசு காட்டாததால், அரசுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள். இதனால், தபால் வாக்குகளை பதிவு செய்வதில் இவர்களிடம் ஆர்வம் இல்லாத போக்கு நிலவுகிறது. ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், தபால் வாக்குகளுக்கான விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள் என அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தியும் அதனை வாங்குவதில் அக்கறை காட்டவில்லை அரசு ஊழியர்கள். இவர்களின் அதிருப்தி தி.மு.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.

 

சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம், பொங்கல் பரிசு குளறுபடிகள், பிரச்சாரத்தில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., அண்ணாமலை ஆகியோர் முன்வைக்கும் விசயங்கள், அரசு ஊழியர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் அதிருப்தி, உள்கட்சி உள்ளடிகள் என தி.மு.க.வுக்கு எதிராக களை கட்டுவதால் வாக்குகளை பர்ச்சேஸ் செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர் தி.மு.க. மா.செ.க்கள்.

 

தேர்தல்காலச் செலவுகளை அமைச்சர்களும் மா.செ.க்களும் கவனித்துக் கொள்ள வேண்டும் என கட்சித் தலைமை உத்தரவிட்டிருப்பதால், ஓட்டுக்கு 1000 தருவதற்கு பட்ஜெட் போடப்பட்டுள்ளது. அந்த வகையில், மாநகராட்சியிலுள்ள ஒவ்வொரு வார்டுக்கும் தலா 3 கோடி ரூபாய், நகராட்சி வார்டுகளுக்கு தலா 2 கோடி ரூபாய், பேரூராட்சி வார்டுகளுக்கு தலா 75 லட்ச ரூபாய் செலவாகும் என்று கூட்டிக் கழித்து கணக்குப் போட்டுள்ளனர் தி.மு.க. அமைச்சர்கள். இதனை எதிர்கொள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களும் பண பலத்தோடு களமிறங்க கரன்சி கட்டுகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.