மனுநீதி நூலுக்கு எதிராக தமிழகம் முழுவதும் சர்ச்சை எழுந்த நிலையில் இதுதொடர்பான பேராட்டத்தில் கலந்துகொண்ட திருமாவளவன் அந்த சர்ச்சைகள் தொடர்பாக பேசினார். இதுதொடர்பாக அவர் பேசியாதாவது,
"கடந்த 10 நாட்களில் நாம் மூன்று போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். முதலில் நம் மீது அவதூறு பரப்ப ஆரம்பித்தவுடன் மனுநூலை தடை செய்ய வேண்டும் என்று கூறி வள்ளுவர் கோட்டத்தில் முதலாவது ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். அடுத்து ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். இன்றைக்கு சமூகத்தில் மத கலவரத்தை தூண்டி பிரச்சனை செய்யலாம் என்று நினைப்பவர்களை கைது செய்ய வேண்டி ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறோம். எல்லோரும் தேர்தலுக்காக தயாராகிக்கொண்டு இருக்கும் நேரத்தில் நாம் மாற்றத்துக்காக போராடி கொண்டு இருக்கிறோம். புரட்சிகர மாற்றத்துக்காக தயாராகிக்கொண்டு இருக்கிறோம். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று ஒரு திரைப்படத்தில் வசனம் வரும். நாங்கள் இதற்குத்தான் ஆசைப்பட்டோம். பொதுவெளியில் இப்படி பேச வேண்டும், விவாதிக்க வேண்டும் என்று பெரிதும் விரும்பினோம். இன்றைக்கு அது சாத்தியமாகி உள்ளது.
இயற்கையே எல்லாவற்றுக்கும் நமக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. நம் கூட்டங்களுக்கு மழை வரும் என்று எதிர் பார்ப்பவர்களுக்கு கூட இயற்கை அந்த வாய்ப்பை வழங்குவது கிடையாது. அண்ணாநகரில் பெய்யும், அடையாறில் பெய்யும், ஆனால் நாம் போராட்டம் நடத்தும் வள்ளுவர் கோட்டத்தில் பெய்யாது. அது நம்முடைய ராசியாக தொடர்ந்து இருந்து வருகின்றது. அதே போன்று பல நிகழ்ச்சிகளை என்னால் இங்கு கூற முடியும். தந்தை பெரியார் மனுநீதியை எதிர்த்தபோது இப்போது இருப்பதை போல அப்போது சமூக ஊடகங்கள் இல்லை. புரட்சியாளர் அம்பேத்கார் இந்த நூலை எரித்த போதும் சமூக வலைதளங்கள் இல்லை. ஆனால் இன்றைக்கு சிறுத்தைகள் இதை பற்றி பேசும் போது சமூக ஊடகம் உருவாகி இருக்கின்றது. மனுநீதியை பற்றி திருமாவளவன் பேசுகிறார் பார் என்று இன்றைக்கு அவன் உலகம் முழுவதும் நம்முடைய கருத்தை கொண்டு சேர்த்துவிட்டான். நான் போகிற போக்கில் பேசியதை இவர்கள் உலகம் முழுவதும் பரப்பிவிட்டு உலகம் முழுவதும் உள்ளவர்கள் மனுநீதி என்றால் என்ன என்பதை இன்றைக்கு கூகுளில் தேடி பொதுமக்கள் தெரிந்து கொள்கிறார்கள். இதனால் கோபப்பட்டு நம்மை அவர்கள் சீண்டுகிறார்கள். இப்போது அவர்கள் எல்லாம் சென்னை மொழியில் சொல்ல வேண்டுமானால் ஜெகா வாங்குகிறார்கள். இது மனுநீதியே கிடையாது என்கிறார்கள். மற்ற சிலர் இது வெள்ளைகாரன் மொழிபெயர்த்த நூல் என்கிறார்கள்.
இன்னும் சிலர் அதை திராவிட கழகத்தினர் தவறாக எழுதிய நூல் என்கிறார்கள். முதலில் என்னை கொச்சைப்படுத்த பார்த்தார்கள். மனுதர்மத்தில் அப்படி இருக்கிறது என்று நாம் சொல்வதற்கு அவர்களால் இல்லை என்று பதில் சொல்ல முடியவில்லை. உடனே பின்வாங்கி அந்த மனுதர்மம் ஒரிஜினல் வெர்சன் இல்லை என்று கூறுகிறார்கள். நாங்கள் எது உண்மையானது, பொய்யானது என்று விவாதிக்க விரும்பவில்லை. எதெல்லாம் தவறு என்று சொல்கிறீர்களோ அது அத்தனையும் தடை செய்ய வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். யார் எழுதினால் என்ன அதனை தடை செய்ய வேண்டும் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். இன்று இந்த நூல் குறித்து உலகம் முழுவதும் விவாதிக்கப்படுகின்றது. அதைத்தான் நாங்களும் விரும்புகிறோம். இதைத்தான் நாமும் எதிர்பார்த்தோம். வரலாற்றில் முன்பே இந்த நூலுக்கு எதிர்ப்பு இருந்திருக்கிறது. புத்தரே இதற்கு எதிராக தோன்றியவர்தான். சிலர் இங்கு வந்து கத்துகிறார்கள். ராஜா என்று பெயர் வைத்துக்கொண்டாலே சிலர் ராஜா என்று நினைத்துக்கொள்கிறார்கள். அவருக்கு, நேத்து வந்த நடிகைக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் நமக்கு கொடுக்கவில்லையே என்ற ஆதங்கம் அவ்வாறு பேச வைக்கிறது. நீங்கள் எப்படி கத்தினாலும் நியாயத்துக்கான எங்களில் போராட்டம் எத்தனை ராஜாக்கள் வந்தாலும் தொடரும் என்பதை கூறிக்கொள்கிறேன்" என்றார்.