அ.தி.மு.க முதலமைச்சர் வேட்பாளர் யார் எனக் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இடையே காரசாரமாக விவாதம் நடந்தது. சுமார் 5 மணி நேரம் நடந்த கூட்டத்திற்குப் பின்னர் அ.தி.மு.க முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து வரும் அக்டோபர் 7ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கே.பி.முனுசாமி செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார். இருவருமே முதலமைச்சர் வேட்பாளராக விரும்புவதால் அ.தி.மு.க அமைச்சர்கள் மாறி மாறி இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இருவருமே தனித்தனியே ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி ஆதரவாளர்களை திரட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் ஓ.பி.எஸ். தனது டுவிட்டர் பக்கத்தில், ''தமிழக மக்கள் மற்றும் அ.இ.அ.தி.மு.க கழகத் தொண்டர்களின் நலனைக் கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!'' எனக் குறிப்பிட்டது மேலும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் அக்.,7ல் அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகுமா? தள்ளிப்போகுமா? என பரபரப்பான விவாதங்கள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து அரசியல் விமர்சகர் பொங்கலூர் மணிகண்டன் கூறுகையில், இது அவர்களுடைய உட்கட்சிப் பிரச்சனையாக இருந்தாலும் பொதுவெளியில் மோதிக்கொள்வதால் அரசு நிர்வாகம் சீர்குலைந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் இவர்கள் மக்கள் பிரச்சனைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.
அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இல்லை. அதனை ஓ.பன்னீர்செல்வம் விரும்பவும் இல்லை. இதேபோல் எடப்பாடி பழனிசாமியும், முதல்வர் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் என்று அறிவிப்பதை விரும்பவில்லை. ஓ.பன்னீர்செல்வம் முன்பு தர்மயுத்தம் நடத்தும்போது அவரோடு இருந்தவர்கள் தற்போது எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதை வெளிப்படையாக பார்க்க முடிகிறது.
தர்மயுத்தம் நடத்திய காலத்தில் ஆதரவாக இருந்தவர்களில் பாண்டியராஜன் தனது முயற்சியால் அமைச்சரானார். இதேபோல் கே.பி.முனுசாமியும் தனது முயற்சியால் ராஜ்யசபா உறுப்பினரானார். மற்றவர்களை கண்டுகொள்ளாத ஓ.பி.எஸ். தனது மகனை மட்டும் நாடாளுமன்ற உறுப்பினராக்கியது அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஒ.பன்னீர்செல்வம் கட்சியினருடன் ஆலோசனை, ட்வீட் போடுவதெல்லாம் ஒரு பரபரப்புக்குத்தானேயொழிய, 7ஆம் தேதி தனது ஆதரவார்களுக்கு கட்சிப் பதவி, கட்சியில் முக்கியத்துவம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டு மூத்த தலைவர்கள் என்ன சொல்கிறார்களோ அதனை அவர் கேட்டுக்கொள்வார் எனக் கூறினார்.
முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கூறுகையில், வரும் 7ஆம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாவது சந்தேகம்தான். ஓ.பி.எஸ். கேட்பது வழிகாட்டுதல் குழு. வழிகாட்டுதல் குழு போட வேண்டும் என்பது ஓ.பி.எஸ். சுயநலம். அந்தக் குழு போடக்கூடாது என்பது இ.பி.எஸ். சுயநலம். அந்தக் குழு போடப்பட்டால் தனது ஆதரவாளர்கள் இல்லை என்று இருதரப்பும் சொல்லுவார்கள். பா.ஜ.க தலையிட்டால்தான் இந்தப் பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். பா.ஜ.க எப்போது இந்தப் பிரச்சனை முடிய வேண்டும் என்று நினைக்கிறதோ, அப்போதுதான் இந்தப் பிரச்சனை முடியும். அதுவரை இப்படித்தான் இருக்கும். ஓ.பி.எஸ் கட்சியினருடன் ஆலோசனை, ட்வீட் போடுவதெல்லாம் பரபரப்பை ஏற்படுத்துவதற்குத்தான் என்றார்.
ம.நீ.ம. முரளி அப்பாஸ் கூறுகையில், இவர்களிடம் செயற்கை ஒற்றுமை ஏற்படும். இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை முடிவுக்கு வந்ததுபோல ஒரு தோற்றத்தை உருவாக்குவார்கள். அவர்கள் ஒற்றுமையாக இருப்பதற்கான வாய்ப்பே கிடையாது. அ.தி.மு.க இதுவரை ஒற்றுமையாக இருந்தது என்று சொல்லுவதற்கு காரணம் நான்கு வருட ஆட்சிதான். இப்போது யார் பெரியவர் என்ற பிரச்சனை வந்துள்ளது. இதில் பா.ஜ.க பஞ்சாயத்துதான் செய்யும். எப்போதும் தலைவர்களிடம் ஒரு பவர் இருக்க வேண்டும். அப்போதுதான் கட்சியைக் கட்டுக்குள் வைக்க முடியும். அப்படிப்பட்ட பவர் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை. திறமையாக நான்கு வருட ஆட்சியை நடத்தினார் என்கிறார்கள். அப்படியில்லை. நான்கு வருட ஆட்சி, அது கொடுத்த வருமானம்தான் இவர்களைக் காப்பாற்றி நகர்த்தியது. இந்த தேர்தலில் அவர்களுக்கு பலவீனமாக இருக்கப்போவது அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சனைதான் என்றார்.