நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் திமுக எம்.எல்.ஏ-வாக இருந்த வே.தங்கபாண்டியனின் மகள் தமிழச்சி தங்கபாண்டியனும், அதிமுக-வில் தற்போது மீன்வள துறை அமைச்சராக இருக்கும் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தனும் தென்சென்னை தொகுதியில் போட்டியிடுகின்றனர். இரு கட்சிகளிலும் வாரிசுகளின் ஆதிக்கம் நிறைந்துள்ளது என்ற விமர்சனங்கள் எழுகின்ற நிலையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் நமக்கு பதிலளித்துள்ளார்.
தென்சென்னையைப் பொருத்தவரைக்கும் இரண்டு பெரிய கட்சிகளின் வாரிசுகள் மோதிக்கொள்கிறார்கள். இரண்டு கட்சிகள் மீதும் வாரிசு அரசியல் என்ற முத்திரை இருக்கிறது, உங்கள்மீதும் அது இருக்கிறது.
வாரிசுகள் திறமையற்றவர்களாக இருந்து, அல்லது நேற்றைக்கு கட்சிக்கு வந்து இன்றைக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டிருந்தால் இந்த குற்றச்சாட்டை வைக்கலாம். ஆனால், என் அப்பா 1949-லிருந்து திமுக உறுப்பினர் தான், நானும் பிறந்ததிலிருந்து திமுக-வில் இருக்கிறேன். கட்சி நடவடிக்கைகளில், மாநாடுகளில், கொள்கைகளில் குடும்பமாக பங்கெடுத்து வந்துள்ளோம். நேரடியான தீவிர அரசியல் செயல்பாட்டிற்குத் தலைவர் ஸ்டாலின் ஒரு வாய்ப்புக் கொடுத்தார். 2007 டிசம்பரில், திருநெல்வேலி இளைஞரணி மாநில மாநாட்டில் கொடியேற்றுகின்ற வாய்ப்பு அது. எனது அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டுதான் மைய திமுக அரசியலில் நுழைகிறேன். அதன்பிறகு கூட்டங்களில் பேசுவது, வீரவணக்க நாள் விழாக்களில் பேசுவது, கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் செயலாளர், பிறகு துணைத் தலைவர் என பொறுப்புக்களில் வந்துதான் பதவிக்கு வருகிறோம். திமுக-வில் அதுதான் வழக்கம்.
இப்போது, வாரிசு அரசியலா என்று கேட்கிறீர்களே, மிசா காலகட்டத்திலும், சட்ட நகல் எரிப்புப் போராட்டங்களின் போதும் வாரிசுகளாகிய நாங்கள் துன்பப்படவில்லையா? தலைவர் கலைஞர் கைது செய்யபட்டபோது நடுரோட்டில் தலைவர் ஸ்டாலினும், கனிமொழியும் உட்காந்திருக்கவில்லையா? மிசா காலத்தில் தலைவர் ஸ்டாலின் கைது செய்யபட்டபோது சமீபத்தில்தான் அவருக்கு திருமணம் முடிந்திருந்தது. இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இந்த குற்றசாட்டை வைக்கும் முன்பு. துன்பப்பட்ட நேரங்களில், திமுக-வின் இன்னாருக்கு வாரிசுகளாக இருக்கிற உங்களுக்கேன் இந்த துன்பம் வந்தது என்று பத்திரிக்கைகளோ பொதுமக்களோ ஏன் கேட்கவில்லை?
சமூக நீதி, பெண்ணுரிமை பேசுகிற திமுக-வின் 20 வேட்பாளர்களில் இரண்டுபேர் மட்டுமே பெண்கள், அவர்களும் வாரிசுகள் என்ற விமர்சனம் எழுகிறதே?
இதில் சமூக நீதிக்கும் பெண்ணுரிமைக்கும் என்ன பங்கம் வந்துவிட்டது? தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக் கூட்டணிக் கட்சிகள், வேட்பாளர்கள் என பல விஷயங்களைக் கருத்தில் கொண்டு தலைவர் முடிவு செய்ய வேண்டியது. அப்படி முடிவு செய்யும்போது நாங்கள் வாய்ப்பு கேட்கிறோம். கவிஞர் கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராக திறம்பட செயல்பட்டுள்ளார், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதிலும், திருநங்கைகளின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடி வருகிறார். இட ஒதுக்கீட்டிற்காக மாநிலங்களவையில் “என்ன இது அநியாயமாக இருக்கிறது”என்று அவர் கேட்ட குரலை யாரும் மறந்துவிட முடியாது. அதுபோல கட்சியில் எனது செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்ததால் தான் தலைவர் எங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறார். இப்படி செயல்பாடுகளை வைத்துதான் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதையும் நீங்கள் 2 பெண்கள் அவர்களும் வாரிசுகள் என்று குறுகளாக பார்க்கக் கூடாது.
ஒரு எழுத்தாளராகவும், கவிஞராகவும் திமுக-வை விமர்சிப்பவர்களுடனும் நட்பு இருக்கிறது. அது ஏதாவது நெருடலா இருக்கிறதா?
நட்பு வேறு, கட்சியும், கட்சி கொள்கைகளும் வேறு. அந்த நாகரீகத்தை கற்றுக் கொடுத்ததே திமுக தானே. அறிஞர் அண்ணா வெற்றி பெற்றபோது முதலில் போய் சந்தீத்தது காமராஜரைத் தான், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் ஒருமுறை கலைஞர் வெளிநாடு சென்றுள்ளார், அங்கு இந்திய அரசைப் பற்றி கேட்டபோது இந்திய அரசை குறித்து இங்கு நான் பேசவிரும்பவில்லை, அதை என் நாட்டுக்குச் சென்று பேசுவேன் என்று சொல்லியிருக்கிறார், பெரியாருக்கும் ராஜாஜிக்கும் இடையே இருந்த நட்பு உலகறிந்ததே. இப்பவும் நாங்கள் மோதிக்கொண்டாலும், கருத்து ரீதியில் விவாதித்தாலும் நேரில் சந்தித்தால் கை குலுக்குவோம், வணக்கம் செய்வோம். நட்பு வேறு, கட்சி வேறு. திமுக-வை பொருத்தவரையில் மிக ஜனநாயகமான கட்சி, எந்த விதமான நெருடலும் இதுவரைக்கும் இருந்ததில்லை, இனிமேலும் இருக்காது.
தலைவர் ஸ்டாலின் அவர்கள் வெள்ள நிவாரண நிதியை முதல்வரிடம் நேரில் சென்று கொடுத்தார். முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் முதல் வரிசையில் இருக்கை கொடுக்கப்படாத போதும் நாகரீகமாக அவருக்கு கொடுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்துவிட்டுதான் வந்தார். ஜெயலலிதா மறைந்தபோது நேரில் சென்று அஞ்சலி செலுத்தினேன், அவருகாக இரங்கல் செய்தி ஒன்றையும் பதிவிட்டேன். இதெல்லாம் திமுக-வின் பாரம்பரியமாக நாங்கள் பின்பற்றிவருபவை. எனவே, தொடர்ந்து நட்போடு இருப்போம். அதற்கும் கட்சி செயல்பாடுகளுக்கும் சம்மந்தம் இல்லை.