தமிழகத்தில் கரோனா தொற்று பரவலின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருவதற்கு அரசாங்கத்தின் மெத்தனப் போக்கும் மிக முக்கியமானதாக இருக்கிறது எனக் குற்றம்சாட்டுகிறார்கள் பிரபல மருத்துவமனைகளிலுள்ள தொற்றுயியல் மருத்துவர்கள்.
இந்நிலையில, தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் இயங்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய 12 குழுக்களுடன் ஆலோசித்து, ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை இறக்குமதிக்கு அனுமதித்தார் எடப்பாடி. கரோனா தொற்று தாக்கியிருக்கிறதா என்பதை அறிவதற்கு, துரிதமாகப் பரிசோதனை செய்யும் ரேபிட் டெஸ்ட் கிட்டை சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய ஆர்டர் கொடுக்கப்பட்டிருப்பதையும் ஏப்ரல் 9-ந்தேதி அவைகள் தமிழகத்திற்கு வந்துவிடும் என்பதையும் அவரே அறிவித்தார்.
அறிவித்தபடி, 13-ந் தேதிவரை வரவில்லை. மாறாக, நாம் கொடுத்த ஆர்டர் அமெரிக்காவுக்குப் போய் விட்டது எனச் சமாளித்தார் தலைமைச் செயலாளர் சண்முகம். இதனால், கரோனா பரிசோதனையில் என்னதான் நடக்கிறது? மக்களின் உயிரோடு தமிழக அரசு விளையாடுகிறதா? என்ற பதற்றம் பரவியது.
சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர் வேலாயுதத்திடம், ரேபிட் டெஸ்ட் கிட் குறித்து விவாதித்தபோது, "கரோனா வைரஸ் கண்களுக்குப் புலப்படாத ஒரு எதிரி. அதனை வீழ்த்துவதற்கு மருந்துகள் ஏதும் இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை என்கிற நிலையில், அதற்கான பரிசோதனை ஆய்வென்பது மற்ற மாநிலங்களை ஒப்பிடுகிறபோது தமிழகத்தில் மிக மிகக் குறைவு.
இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டவர் என முதல் கேஸ் கேரளாவில் பதிவாகிறது. அப்போதே வேகமாக இயங்கியது கேரள அரசு. குறிப்பாக, துரிதமாக டெஸ்ட் செய்வதற்கான மருத்துவ வழிமுறைகளை சர்வதேச நாடுகளின் மூலம் பெற்று போர்க்கால நடவடிக்கைகளை கையாண்டது. அந்த வகையில், ஒரு நாளைக்கு குறைந்தது 500 பரிசோதனைகள் என 15 ஆயிரம் பேருக்கு இதுவரை பரிசோதனைகளை செய்து முடித்திருக்கிறது. இதன் மூலம் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் கரோனா தொற்று பரவாமல் தடுத்திருக்கிறார்கள். துரிதமான சோதனைகளும் துரிதமான முடிவுகளும் கிடைத்ததால் தொற்று பரவாமல் துரிதமாக தடுக்க முடிந்திருக்கிறது.
ஆனால், தமிழகத்தில் பரிசோதனைகள் மெத்தனமாக இருந்ததால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து மக்களைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. தற்போதுவரை பி.சி.ஆர். முறையில் ஆண்ட்டிபாடி டெஸ்டுகளைத்தான் செய்து வருகிறது தமிழக சுகாதாரத்துறை. இந்த டெஸ்டுகளின் முடிவுகள் தெரிய பல மணி நேரமாகும். துரிதமான ரிசல்டுகளுக்கு இது உரியது அல்ல. கரோனா போன்ற கொடிய வைரஸ்கள் தொண்டை மற்றும் மூக்கு சளிகளைப் பரிசோதனை செய்வதன் மூலம் விரைந்து அறிய முடியும். குறிப்பாக, காது மூக்கு தொண்டை நிபுணர்கள், எந்த ஒரு வைரஸ் தாக்கியிருந்தாலும் ஸ்வாப் டெஸ்ட் மூலம் சளியைப் பரிசோதித்து வைரஸ் உள்ளதா என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடுவர்.
கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் மாதிரி சமீபத்தில்தான், துரித பரிசோதனை செய்யும் ரேபிட் டெஸ்ட் கிட்ஸ்களுக்கு ஆர்டர் தந்திருக்கிறார்கள். தற்போதுவரை அந்த கிட்ஸ்கள் வரவில்லை. கிட்ஸ்களைப் பெறுவதில் முன்னுக்குப்பின் முரணாக அரசு தெரிவிக்கும் கருத்துகள் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதற்கிடையே, மருத்துவ உபகரணங்களை மாநில அரசுகள் நேரடியாகக் கொள்முதல் செய்யக்கூடாது என நடுவன் அரசு போட்டுள்ள உத்தரவும் சந்தேகத்தை அதிகப்படுத்துக்கிறது. ஒரு வகையில் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாகவும் இருக்கிறது. இந்தப் போக்கு ஆரோக்கியமானதல்ல'' என்கிறார் மிக அழுத்தமாக..
கரோனா விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வரும் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகத்திடம் நாம் பேசியபோது, ‘பொதுவாக, வைரஸ் தொற்றுகளைக் கண்டறிவதில் தமிழக சுகாதாரத்துறை மிகவும் பின் தங்கியிருக்கிறது. உலகமே கரோனாவால் அல்லாடிக் கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு முடிவுகள் எடுப்பதிலும் தமிழக அரசு தாமதம்தான். துரித பரிசோதனைக் கருவிகளை (ரேபிட் டெஸ்ட் கிட்ஸ்) தமிழக அரசு வாங்குவதைத் தெரிவிக்கும் வகையில், கடந்த 6-ந்தேதி பேசிய முதல்வர் எடப்பாடி, தேவையான அளவுக்கு மருத்துவ உபகரணங்கள் நம்மிடம் இருக்கிறது. துரித பரிசோதனைகளுக்காக 1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை சீனாவிலிருந்து வாங்க ஆர்டர் தரப்பட்டு விட்டது. 9-ந்தேதி நமக்கு கிடைத்து விடும். இந்த கருவி மூலம் 30 நிமிடங்களில் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் எனச் சொன்னார். ஆனால், கிட்ஸ் வரவில்லை.
அதேசமயம், 9-ந்தேதி மீண்டும் பேசிய முதல்வர், 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்ஸ்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளோம். முதல்கட்டமாக, 50,000 கிட்ஸ்கள் இன்று இரவுக்குள் வந்து விடும் என்றார் முதல்வர். ஆனால், வரவில்லை. வராததால், நமது ஆர்டரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துவிட்டது சீனா எனக் கடந்த 11-ந்தேதி காரணம் சொல்கிறார் தலைமைச் செயலாளர். ஒரு முக்கியப் பிரச்சனையில் சர்வதேச கொள்முதல் ஆர்டரை போடும் அரசு, சம்மந்தப்பட்ட ஆர்டர் உரிய நேரத்தில் வராமல் போனதற்கு நிர்வாகத்தின் தலைமையில் இருக்கும் அதிகாரி சொல்லும் காரணம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.
தமிழகத்தின் ஆர்டர் அமெரிக்காவுக்கு திருப்பப்பட்டிருந்தால் 9-ந்தேதி இரவுக்குள் வந்துவிடும் என 9-ந்தேதி மதியம் முதல்வர் உறுதியாகச் சொன்னது எப்படி? அவர் சொன்னதற்குப் பிறகுதான் அமெரிக்காவுக்கு சீனா அனுப்பியதா? தமிழக அரசின் ஆர்டரை சீனா, அமெரிக்காவுக்கு அனுப்பியது உண்மையெனில், சீனாவுக்கு அழுத்தம் கொடுக்க மத்திய அரசை எடப்பாடி அணுகி, பிரதமர் மோடியிடம் கடுமையாக வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதற்கான சிறு துரும்பைக்கூட எடப்பாடி அரசு அசைக்கவில்லை.
மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் ஆட்சியாளர்கள் தமிழகத்தில் இல்லைங்கிறது தமிழத்தின் சாபக்கேடு. மக்களின் உயிரோடு சம்பந்தப்பட்ட கரோனா விவகாரத்தில் தமிழக அரசுக்குப் போதிய அக்கறை இல்லைங்கிறதுதான் அவர்களது நடவடிக்கை காட்டுகிறது. முதுகெலும்பில்லாத ஆட்சியாளர்களால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு துயரம் அதிகரித்தது வருவதுதான் மிச்சம்'' என்கிறார் கோபமாக.
டெல்லியிலுள்ள மத்திய சுகாதார அமைச்சகத்தோடு தொடர்புடைய தமிழக அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "சீனாவிடம் கொடுக்கப்பட்ட ஆர்டர்களில் தமிழக அரசிடம் தெளிவில்லை. முதல் 1 லட்சம் எனச் சொன்ன முதல்வர் அடுத்த இரண்டே நாளில் 4 லட்சம் ஆர்டர் கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார். எதற்காக, ஏன் கொள்முதல் ஆர்டர் அதிகரித்ததுங்கிறதுக்கான காரணம் எதுவும் சொல்லவில்லை. கரோனா பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவதிலும் அவர்களுக்கான டெஸ்டுகளிலும் ஆரம்பத்திலிருந்தே தவறான அணுகுமுறைகளையும் புள்ளிவிபரங்களையும் தந்தபடிதான் இருக்கிறதே தவிர முறையான மருத்துவ நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கவில்லை என மத்திய உளவுத்துறையினர் டெல்லிக்குத் தகவல்களைப் பாஸ் செய்தனர். மேலும், மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்வதில் மார்ச் இரண்டாவது வாரத்திலிருந்தே நிறைய வில்லங்கம்.
ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் மூன்று மடிப்பு கொண்ட ஒரு மாஸ்க்கின் விலை 3 ரூபாய்தான். ஆனால், தமிழகத்தில் 15 ரூபாய். மாஸ்க் தயாரிக்கும் தனியாரிடமிருந்து சுகாதாரத் துறை 17 ரூபாய்க்கு வாங்கியுள்ளது. எதற்காக அதிக விலைக்கு அரசே வாங்க வேண்டும்? இதனையெல்லாம், மோப்பம் பிடித்து டெல்லிக்கு பாஸ் செய்தது உளவுத்துறை. அதனால்தான், மருத்துவ உபகரணங்களுக்காக மட்டுமே 1000 கோடி தேவை என்பது உள்பட 12 ஆயிரம் கோடி நிதி உதவி கேட்டும் தமிழக அரசுக்கு வெறும் 500 கோடி மட்டுமே ஒதுக்கினார் பிரதமர் மோடி.
இந்தச் சூழலில்தான், ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் கொள்முதல் விவகாரத்திலும் வில்லங்கம் நடந்ததை அறிந்து, மருத்துவ உபகரணங்களை மாநில அரசு இனி நேரடியாகக் கொள்முதல் செய்யக் கூடாது. மத்திய அரசே கொள்முதல் செய்து தரும் என ஏப்ரல் 2-ந்தேதியிட்ட ஒரு அவசர உத்தரவைக் கடந்த 9-ந்தேதி ரிலீஸ் செய்தது மத்திய சுகாதாரத் துறை. ஆக, கரோனா விவகாரம் தமிழகத்தில் விளையாட்டாக இருக்கிறது'' என்கிறார்கள்.