நேற்று மதியம் 12 மணியளவில் சென்னை தி. நகரிலுள்ள தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில், பொதுக்குழுவில் ஆலோசிக்காமல் விஷால் தன்னிச்சையாக முடிவெடுப்பதாக கூறி அழகப்பன், ரித்திஷ், எஸ்.வி. சேகர், சுரேஷ் காமாட்ஷி ஆகியோர் அடங்கிய ஒரு குழு திடீரென தயாரிப்பாளர் சங்கத்திற்குள் வந்து போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து விஷால் தரப்பை சேர்ந்த கதிரேசன் சமரசம் செய்ய முயற்சித்தார். இதில் சமாதானமடையாத அவர்கள் கதிரேசன் விளக்கம் திருப்தியளிக்கவில்லை எனக்கூறி தயாரிப்பாளர் சங்க கட்டிடத்திற்கு பூட்டு போட்டனர். மேலும் அவர்கள் முதல்வரை சந்தித்து முறையிடப் போவதாகவும், தமிழ் ராக்கர்ஸ்-ஐ பிடிப்பதாகக் கூறிய விஷால் அதில் ஒரு பார்ட்னராக இருக்கிறார் என்றும் கூறிய அவர்கள், கடந்த நிர்வாகத்தில் சேமித்து வைக்கப்பட்ட 7 கோடி வைப்புநிதி என்ன ஆனது என்றும் கேள்வி எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து இன்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால். போடப்பட்டுள்ள பூட்டை அகற்றும்படி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அதை மறுத்தனர். நான் பூட்டை உடைக்காமல் போகமாட்டேன் எனக்கூறிய விஷால் பூட்டை நீங்களே உடையுங்கள் எனவும் தெரிவித்தார். காவல்துறையினர் அதற்கான அரசாங்க நடைமுறை உள்ளது எனக்கூற வாக்குவாதம் முற்றியது. விஷால் தொடர்ந்து தனது தரப்பு நியாத்தைக் கூறிக்கொண்டே இருந்தார். காவல்துறையினரும் எதிர் வாதத்தை முன் வைத்தனர். அப்போது விஷால் யாரோ போட்ட பூட்டிற்கு ஏன் இத்தனை பேர் காவல் இருக்கிறீர்கள். இந்த பூட்டு அரசு உத்தரவுபடி போடப்பட்ட பூட்டு இல்லை, இதற்கு முறையான அனுமதியில்லை. அப்படியிருக்கும் போது ஏன் இத்தனை பேர் பாதுகாப்பிற்கு இருக்கிறீர்கள். நாங்கள் பாதுகாப்பு கேட்கும்போதுகூட இத்தனை பேர் வரவில்லையே, பின் எதற்கு இத்தனை பேர் எனவும் கேட்டார்.
ஆனால் காவல்துறையினர் இவை அனைத்திற்கும் மறுப்பு தெரிவித்துக்கொண்டே இருந்தனர். சிறிது நேரத்தில் உதவி ஆய்வாளர் அங்கு வந்தார். பின் விஷாலை கைதுசெய்து தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் உதவி ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்திவந்தார். தற்போது பதிவுத்துறை அதிகாரிகள் அந்த பூட்டை திறந்துள்ளனர்.
இதற்குமுன் ஒழுங்குமுறை குழுவின் நடவடிக்கைகள் சரியில்லை என்றும், அவர்கள் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனர் என்றும் அவ்வப்போது சிலர் தங்களது அதிருப்தியை தெரிவித்து வந்தனர். விடுமுறை தினங்களில் தேர்தலுக்கு பின்னான சில மாதங்களிலேயே பிரச்சனைகள் தொடங்கிவிட்டன. அவ்வப்போது நடந்துவந்த தயாரிப்பாளர் சங்க கூட்டங்களிலும் கூச்சல், குழப்பங்கள் ஏற்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.