வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல், ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அந்த வகையில், தி.மு.க. அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது. அதில், திமுக கூட்டணி கட்சியில் இருக்கக்கூடிய மதிமுக கட்சிக்கு திருச்சி பாராளுமன்ற தொகுதியை ஒதுக்கியுள்ளது. மதிமுக கட்சி சார்பாக மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ போட்டியிடுகிறார். துரை வைகோவின் பிரச்சாரத்தின் போது, நமது நக்கீரனுக்கு அவர் அளித்த பேட்டியினை காண்போம்...
துரை வைகோ திருச்சிக்காரர் இல்லை. அதனால் இவருக்கு போய் ஓட்டு போட வேண்டுமா என்று எதிர்க்கட்சிக்காரர்கள் விமர்சனம் வைக்கிறார்களே?
“நான் தமிழ்நாட்டைச் சார்ந்தவன். தமிழ்நாட்டு பிரச்சனைகள், தமிழ்நாட்டு உரிமைக்காக என் கட்சித் தலைவர் வைகோ மற்றும் மதிமுக இயக்கம் உழைத்திருக்கிறார்கள். எங்களுக்கு ஒரு தொகுதி கொடுக்கிறார்கள். எனக்கு சொந்த ஊர் தென்காசி. அது ஒரு தனித்தொகுதி. சட்டப்படி அந்த தொகுதியில் நான் நிற்க முடியாது. திருச்சி தொகுதி ஒருவேளை கொடுக்காமல் இருந்து விருதுநகர் தொகுதி கொடுத்திருந்தால் விருதுநகரில் நின்றிருப்பேன்
மக்கள் சேவையாற்ற வேண்டுமென்றால், எந்த ஊர், எந்த மாநிலம் என்றெல்லாம் தேவையில்லை. பெரிய ஆளுமையான அன்னை தெரசா ஐரோப்பியாவில் இருந்து இந்தியாவிற்கு சேவை செய்ய வந்தவர். அதே நேரத்தில் உள்ளூர்காரர்கள் எல்லாம் இங்கு நல்லது செய்து விட்டார்களா? தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களின் தகுதியின் அடிப்படையில் தான் வாக்களிக்க வேண்டும் என்றும், அவர்களின் சாதியைப் பார்த்தோ மதத்தைப் பார்த்தோ வாக்களிக்கக் கூடாது என்று தான் மக்களிடம் கூறி வருகிறேன். எதிரணியினர் வேறு எதுவும் குற்றச்சாட்டு வைக்க முடியாத காரணத்தினால் இதை வைக்கிறார்கள்”.
ஒரு களத்தில் இருக்கக்கூடிய எதிரணியினர், நான் இந்த ஊரைச் சார்ந்தவன் என்றும் இந்த சமூகத்தைச் சார்ந்தவன் என்றும் வாக்கு கேட்பார்கள் அல்லவா?
“அதனால்தான் சொல்கிறேன், ஜாதி மதம் இவற்றையெல்லாம் கடந்து நல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று, வேட்பாளர் படித்திருக்கிறார்களா? அவரது குற்றப் பின்னணி என்ன?, இவர்கள் வந்தால் நமக்கு நல்லது செய்வார்களா? என்பதை ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும்”.
எதிரணியில் இருக்கக்கூடிய அ.தி.மு.க வேட்பாளர் சின்னம் ஏற்கெனவே மக்கள் மனதில் பதியக்கூடிய சின்னம். இது அவர்களுக்கு நல்வாய்ப்பாக அமையாதா?
“களத்தில் என்னை எதிர்க்கிற எதிரணி வேட்பாளர் யார்? அவரது தொழில் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் மக்களுக்கு நன்றாகத் தெரியும். மக்கள் முன்ன மாதிரி இல்லை. அதனால் மக்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள் என்று முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்”.
அதிமுக தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் விஜயபாஸ்கர், அதிமுக சார்பாக யார் அதிக வாக்குகள் பெறுகிறார்களோ அவர்களுக்கு ஐந்து பவுன் தங்க நகை பரிசு அறிவித்திருக்கிறாரே?
“அ.தி.மு.கவைப் பொறுத்தவரை நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க, எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் அடுத்த தலைவர் என்று மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய நிர்பந்தத்தில் அ.தி.மு.க தலைவர்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் தி.மு.க.வுக்கு அடுத்து பெரிய கட்சி நாங்கள் தான் என்று கூறி வருகிறார்கள். மேலும், இந்தத் தேர்தலை அவர்கள் வெற்றி பெறுவதற்காக போட்டியிடவில்லை, இரண்டாம் இடத்தை பிடிப்பதற்காகத்தான் போட்டியிடுகிறார்கள். இது அவர்களுடைய விரக்தியை காண்பிக்கிறது. அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு கிடையாது. பா.ஜ.க.வை விட அதிக வாக்கு எண்ணிக்கை பெற வேண்டும் என்றும், பா.ஜ.கவை மூன்றாம் இடத்துக்கு தள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அ.தி.மு.க இருக்கிறது. அதனால் அவர் அறிவித்ததை நான் பெரிதாக பொருட்படுத்தவில்லை”.
வெற்றி பெறுவோம் என்று அ.தி.மு.க வேட்பாளர் கருப்பையா சொல்கிறாரே?
“100 வாக்குகள் பெறப்போகும் வேட்பாளர் கூட நான் தான் வெற்றி பெறுவேன், எனக்கு வாக்களியுங்கள் என்று தான் கூறி வருகிறார். அதே போல் தான், எதிரணியில் இருக்கக்கூடிய அ.தி.மு.க வேட்பாளரும், விஜயபாஸ்கரும் கூறி வருகிறார்கள். அதே நேரத்தில், பிரச்சாரத்தின் போது ஒரு இடத்தில் கூட, எதிரணியில் இருக்கக்கூடிய வேட்பாளர் பற்றி நான் பேசியது கிடையாது. நான் மக்களுக்கு என்ன செய்யப் போகிறேன்? என்று கூறி தான் வாக்கு கேட்டு வருகிறேன். அதே போல், மக்களும் என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு நல்ல வரவேற்பு அளிக்கிறார்கள்” என்று கூறினார்.