‘கருப்பர் கூட்டம்’ எனும் யூ-ட்யூப் சேனல் தமிழ்க் கடவுள் எனப்படும் முருகரை அவமதித்ததாக கூறி தமிழக பாஜக சார்பில் வேல் யாத்திரை நடத்தப்பட்டது. இதற்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை. ஆனாலும் அது வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்த வேல் யாத்திரை 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அக்கட்சியினர் கருத்து தெரிவித்து வந்தனர். அதேவேளையில் திமுக சார்பில் அக்கட்சி தொண்டர்கள் சமூகவலைதளங்களில் ‘திமுக தலைவரும் காணாமல்போன திருச்செந்தூர் முருகர் கோவிலின் வேலுக்காக வேல் யாத்திரை நடத்தியவர்தான்’ என பிரச்சாரத்தை தொடங்கினர். உண்மையில் அவர் வேல் காணவில்லை என்றுதான் யாத்திரை நடத்தினாரா? எம்.ஜி.ஆர். ஆட்சியில் நடத்திய அந்த யாத்திரை எதற்கு?
இந்திராவுடன் இணைந்து 1977 சட்டமன்றத் தேர்தலை சந்தித்து, அரியணை ஏறியிருந்த எம்.ஜி.ஆரின் ஆட்சியை, 1980ஆம் ஆண்டு கலைத்தார் இந்திரா. அதனைத் தொடர்ந்து, தன் ஆட்சியைக் கலைத்த இந்திராவை ஓரம் கட்டிவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சிகளையும் மற்ற ஏனைய கட்சிகளையும் தனது அணியில் இணைத்து 1980 தேர்தலை சந்தித்து வெற்றிபெற்றார் எம்.ஜி.ஆர். தேர்தலில் வென்ற எம்.ஜி.ஆர்.க்கு அந்த ஆட்சிக்காலம் பல இக்கட்டான சூழ்நிலைகளை ஏற்படுத்தியது. வெற்றிபெற்ற சில காலத்திற்குள் எரிசாராய ஊழல் குறித்து ஒரு பெரும் சர்ச்சை வெடித்தது. தமிழகத்திலிருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கு முறைகேடாக எரிசாராயம் கொண்டு செல்லப்பட்டது. இதில் தமிழக அரசு பெரும் முறைகேடுகளையும் ஊழலையும் செய்துள்ளது என எதிர்க்கட்சியான திமுக விமர்சனம் செய்ய துவங்கியது.
செய்தித்தாள்களும், எம்.ஜி.ஆர். ஆட்சியில் நடந்துகொண்டிருந்த எரிசாராய ஊழலைக் கேள்விகளால் எரித்துக்கொண்டிருந்தன. பல தரப்புகளிலிருந்தும் ஊழல் தொடர்பான புகார் தீ பரவிக்கொண்டிருக்க அதனை அணைக்க எம்.ஜி.ஆர், ஓய்வுபெற்ற நீதிபதி கைலாசம் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தார். அதற்கான ஆணையையும் வெளியிட்டார் எம்.ஜி.ஆர். ஒரு பெரும் ஊழலை சிறிய ஆணையத்தின் மூலம் முடிக்கப் பார்க்கிறது அரசு என திமுகவினர் அந்த அரசாணையைக் கொளுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அதேவேளையில், இரண்டு மாநிலம் சம்மந்தப்பட்ட ஊழல் என்பதால் மத்திய அரசு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என திமுக, தனது கூட்டணி கட்சியும் மத்திய ஆளும் கட்சியுமான காங்கிரஸுக்கு கடிதம் எழுதியது. அதனை ஏற்ற இந்திரா அரசு, ஒரிசா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.கே.ரே தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்தது.
எரிசாரய ஊழல் புகார்கள் அடங்குவதற்குள் புதிய பிரச்சனை ஒன்று எழுந்தது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை பரிசோதனை அதிகாரியாக இருந்த சுப்பிரமணிய பிள்ளை, நவம்பர் மாதம் 26ஆம் தேதி தனது அறையில் மர்மமான முறையில் இறந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என எம்.ஜி.ஆரின் அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர் மரணத்தில் மர்மம் இருக்கிறது, நீதி விசாரணை தேவை என திமுக அழுத்தம் தந்தது. விளைவு, நீதிபதி சி.ஜெ.ஆர்.பால் தலைமையில் ஒரு விசாரணை கமிஷனை அமைத்தார் முதல்வர் எம்.ஜி.ஆர்.. அந்த விசாரணை கமிஷனும் முறையாக விசாரித்து அதன் அறிக்கையை தமிழக அரசிடம் ஒப்படைத்தது. அதனை அரசு வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் மீண்டும் அழுத்தம் தந்தன. ஆனாலும், எம்.ஜி.ஆர். அதனை வெளியிடவில்லை. ஆனால், கலைஞர் அவ்வறிக்கையின் நகல்களை வெளியிட்டு, அது கொலைதான் என தெரிவித்தார். அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் பொதுவெளியில் வெளியிட்டதும் அதிர்ச்சியில் உறைந்தார் எம்.ஜி.ஆர். அதனைத் தொடர்ந்து கலைஞருக்கு நெருக்கமான, அதேவேளையில் அறிக்கையை அவரிடத்தில் கொடுக்க உதவியவர்களை அரசு கைது செய்தது.
"கொலையாளிகள் மீது 1982 பிப். 15க்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் பிப். 15 அன்றே மதுரையிலிருந்து திருச்செந்தூர் வரை நீதி கேட்டு நெடும்பயணம் மேற்கொள்வேன்" என கலைஞர் அறிவித்தார். அதன்படி நடவடிக்கை எடுக்காததனால், பிப். 15ம் தேதி நீதி கேட்டு நெடும்பயணம் என மதுரையில் துவங்கி திருச்செந்தூர் வரையிலான 200 கி.மீ தூரத்திற்கு நடந்தார். அதே நேரம், திருச்செந்தூர் கோவிலுக்கு தொழிலதிபர் ஒருவர் கொடுத்த வேலும் காணவில்லை என்பதால், அதனைக் கேட்டும் நடந்தார் கலைஞர். எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இப்படி எம்.ஜி.ஆர். மீது, அவரது ஆட்சி மீது, அரசு மீது விமர்சனங்களும் சர்ச்சைகளும் தொடர்ந்து வெடித்துகொண்டுவந்த நேரம், அதிமுகவில் ஒருவரின் பேச்சைக் கேட்க கூட்டம் மானாவரியாக கூடிவந்தது; அதன் முன்பாக எம்.ஜி.ஆர். தொடர்ந்து நடத்திய சத்துணவு திட்டத்தின் உயர்மட்ட குழுவிலும் அவர் இடம்பிடித்திருந்தார்; அவரது வளர்ச்சியால் கட்சிக்குள்ளேயே சில சலசலப்புகள் எழுந்தபோதிலும் கொள்கை பரப்புச் செயலாளராக கட்சியின் முக்கிய முகமாக மாறியிருந்தார்; அவர்தான் ஜெயலலிதா.
ஜெயலலிதா அதிமுகவை தனது பேச்சால் வலிமையடைய வைத்துக்கொண்டிருக்க, ஈழத்தமிழர்களுக்காக எம்.ஜி.ஆர். விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தார் என பரவலாக பேச்சுகள் எழுந்தன. இதன்மூலம் மக்களின் அனுதாபங்களை அதிமுக ஒருபுறம் சுவீகரித்துக்கொண்டிருந்தது. ஆட்சிக் காலமும் முடிவடையும் தருவாயை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. 1984ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துவக்கத்தில் எம்.ஜி.ஆர்.க்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், மேல் சிகிச்சை தேவைப்பட்டதால் அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டார் எம்.ஜி.ஆர். அவருக்கு அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. அதேவேளையில் இந்திரா காந்தி தனது காப்பாளர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுக்க பதற்றம் சூழ்கொண்டிருக்க, அவருக்கு அடுத்து இந்திரா காங்கிரஸின் பொதுச்செயலாளர் ராஜீவ் காந்தி பிரதமர் பதவியை ஏற்றார். ஆனால், அவர் தேர்தலில் போட்டியிட்டு மக்களை சந்தித்து வெற்றிபெற்று பிரதமராக வேண்டும் என்று எண்ணினார். அதனால், 1984ஆம் ஆண்டு தனது அமைச்சரவையைக் கலைத்து நாடாளுமன்றத் தேர்தலை அறிவித்தார்.
கடந்த ஆட்சி காலத்தைவிட இந்த ஆட்சிக் காலத்தில் அதிக விமர்சனத்தையும் இரண்டு பெரும் கமிஷன் புகார்களையும் எதிர்கொண்ட அதிமுக, உட்கட்சி மோதல்களாலும் ஆட்டம் காண துவங்கியிருந்தது. அதனால் இதுதான் சமயம், நாமும் இங்கு ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தால், ஜெயலலிதா சேர்க்கும் கூட்டம், ஈழத்தமிழர் பிரச்சனையில் எம்.ஜி.ஆரின் உதவி, எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் அனுமதி என அனுதாப ஓட்டில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என எண்ணிய அதிமுக அதன் அமைச்சரவையைக் கலைத்தது. 1980 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட இந்திரா காங்கிரஸை, 1984 தேர்தலில் தனக்கு இணக்கமாக இணைத்திருந்தது அதிமுக.
பிரச்சார மேடைகளில் ஒருபுறம் ஜெயலலிதா கூட்டங்களைக் கவர, மறுபுறம் எம்.ஜி.ஆர். அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படங்களும், இந்திரா மரணமடைந்த வீடியோவும் மக்களையும், மக்கள் கண்ணீரையும் வாக்குகளாக மாற்றிக்கொண்டிருந்தன. எம்.ஜி.ஆர். அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுகொண்டே தேர்தலில் நின்று வெற்றி பெற்றுவிட்டார். வெற்றிபெற்ற எம்.ஜி.ஆர் பல போராட்டங்களுக்குப் பிறகே அதிகாரப் பொறுப்பை ஏற்றார். இந்த ஆட்சிக்காலம் முழுவதும் உடல் உபாதைகளுடனேயே பணியாற்றி வந்த எம்.ஜி.ஆர், 1987 டிசம்பர் 24 அன்று உயிரிழந்தார்.
அதன்பின்தான் எம்.ஜி.ஆரின் அதிமுக உடைந்து ஜெ அணி, ஜா அணி என இரண்டாகப் பிரிந்தது. ஜெ அணி, ஜா அணி என்ன செய்தது? எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் இருந்தபோது கிடைத்த அனுதாபம் ஏன் அவர் மறைந்து பிறகு அதிமுகவிற்கு கிடைக்கவில்லை?
தேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி..! | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4