உலகின் தொன்மையான மொழிகளில் மூத்த மொழி எதுவென்றால் அது தமிழ் மொழிதான். செம்மொழி என அங்கீகாரம் பெற்ற தமிழ் மொழி இன்றைய டிஜிட்டல் உலகிலும் நிலைத்து நிற்கிறது. இருந்தாலும், அண்மைய காலமாக தமிழுக்கு ஏனோ பல்வேறு விதமான சோதனைகள் வந்து கொண்டே இருக்கிறது.
அந்த சோதனை 1937களில் நடைபெற்ற ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்போல தமிழுக்காக மீண்டும் ஒரு மொழிப் போரை தமிழர்கள் தொடுத்தாக வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுவிடுமோ என்ற சந்தேகமும் எழ காரணமாக இருக்கிறது.
'பேரண்டத்திலேயே மிக உயரமான சிலை' என நர்மதை நதி கரையோரத்தில் ஒற்றுமைக்காக நிறுவப்பட்டு, பிரேண்டிங் செய்யப்பட்டு வரும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையில் 'ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி' என தமிழ் மொழியில் எழுத்து பிழையோடு பொறிக்கப்பட்டிருந்தது. அதற்கு அப்போதே தமிழ் நெட்டிசன்கள் இணைய களத்தில் கேள்வி எழுப்பியிருந்த சூழலில் அந்த விவகாரம் அப்படியே மூடி மறைக்கப்பட்டது.
தற்போது, அதே மாதிரியான எழுத்து பிழை ஒன்று நாட்டு மக்களின் ஆரோக்கிய நலன் சார்ந்த அரசின் விழிப்புணர்வு விளம்பரம் ஒன்றில் வருகிறது. திரையரங்குகளில் திரைப்படம் ஆரம்பமாவதற்கு முன்னரும், இடைவெளியின்போதும் புகை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஒளிபரப்பப்படும் இரண்டு நிமிட விளம்பர வீடியோதான் அது.
நாம் எல்லோரும் அடிக்கடி பார்த்து பரிட்சயமான அந்த விளம்பரத்தில் எழுத்து பிழை என்றால் நம்ப முடிகிறதா? அந்த விளம்பரத்தின் முடிவில் புகை பழக்கத்தை 'கை விடுங்கள்' என்ற வாக்கியம் இடம் பெறுகிறது. ஆனால் அது 'காய் விடுங்கள்' என எழுத்து பிழையோடு வருகிறது. அதை முதல்முறையாக படித்தபோது 'தமிழுக்கு ஏன் இந்த அவல நிலை?' என்ற அதிர்ச்சிகரமான கேள்வி எழ... அது சம்மந்தமாக தமிழ் ஆர்வலர்களிடம் பேசினோம்.
"மொழி என்பது திட்டமிடப்பட்டது கிடையாது. எந்த ஒரு வாக்கியமாக இருந்தாலும் ஒன்றுக்கு இரண்டு முறை படித்து எழுத்துப்பிழைகளை சரி செய்தாக வேண்டும். இது, என்ன ஒரு சின்ன விளம்பரம் தானே? இதற்கு ஏன் படித்து எழுத்துப்பிழைகளை சரிசெய்ய வேண்டுமென்று நினைப்பதுதான் பெரிய பெரிய எழுத்துப் பிழைகள் ஏற்படவும் மிகமுக்கிய காரணம். சாதாரண விழிப்புணர்வு விளம்பரம் என அரசு ஊழியர்களும், அரசாங்கமும் அலட்சியமாக செயல்பட்டு வருவதாக நான் நினைக்கிறேன்.
மாநில மொழி ஒன்றில் விளம்பரம் வெளியிட அரசாங்கம் விரும்பினால் அந்த மொழியில் முறையாக படித்து புலமை பெற்ற அறிஞர்களின் பங்கையும் கொண்டிருக்க வேண்டும். அதை தவிர்த்துவிட்டு பொத்தாம்பொதுவாக அனைத்திற்கும் தொழில்நுட்பத்தை நாடியதன் விளைவுதான் இது.
உதாரணமாக, உரிய ஆவணங்களை கொடுத்து வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வங்கிக்கணக்கு, சொத்துப்பத்திரம், ஆதார் அட்டை என எதை விண்ணப்பித்தாலும் அதில் ஏதாவது பிழையிருந்தால் அதை திருத்தம் செய்ய மீண்டும் நாம்தான் போராட வேண்டியுள்ளது. இதுபோல, கண்ணுக்கு தெரியாமல் எத்தனையோ எழுத்துப் பிழைகளை செய்வதென்னவோ அரசுதான். ஆனால், மக்கள் குற்றவாளிகளாக்கப்படுகிறார்கள்.
அரசாங்கமே இதில் தலையிட்டு முறையான மொழி வல்லுநர்களையும் பிழைதிருத்துனர்களையும் பணியமர்த்துவதுதான் இதற்கான தீர்வு. இது, தனியொருவரின் தவறு கிடையாது. ஒட்டுமொத்த அரசாங்கத்தின் தவறு.
மறுபக்கம் பார்த்தால் தமிழ் பிழைத்திருத்துனர்களுக்கும் பற்றாக்குறை இருப்பதால்தான் இதுமாதிரியான எழுத்துப் பிழைகள் ஏற்படுகின்றன என்பதை நாம் எல்லோருமே பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும்.
ஏட்டுக் கல்வியிலிருந்தே இலக்கணத்தை முறையாக கற்றிருந்தால் இதுமாதிரியான, பிழைகள் ஏற்படாது. அண்டை மாநிலங்களை போல தமிழ் மொழியை பள்ளிகளில் கட்டாய மொழி பாடமாக்க வேண்டும்” என்கிறார் தனியார் மின்னணு வெளியீட்டு நிறுவனத்தில் மொழி வல்லுனராக பணியாற்றி வரும் தீனதயாளன்.
புதுச்சேரியில் இயங்கி வரும் தாகூர் அரசு கலைக்கல்லூரியின் தமிழ் துறை தலைவர் இளங்கோ நம்மிடம்,“இணையத்தில் அண்மை காலமாக தமிழ் மொழியின் பயன்பாடு என்பது பன்மடங்கு அதிகரித்துள்ளது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்கூட ஒரு படத்தில் உள்ள தமிழ் மொழியை அப்ளிகேஷன் துணையோடு ஒலிக்க செய்து தெரிந்து கொள்ளும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.
கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் துணையோடு நாம் பேசுவதை தட்டச்சு செய்யும் வசதிகள்கூட வந்துவிட்டன. இருந்தாலும் இணைய உதவியோடு மொழியாக்கம் செய்யும்போது அதில் இன்னும் சீர்மை வரவில்லை என எண்ணுகிறேன். ஆங்கிலத்திற்கும், தமிழுக்கும் இடையே இருக்கும் இலக்கண அமைப்பின் வேறுபாடுகூட காரணமாக இருக்கலாம். வெகு சீக்கரமே இந்த சிக்கல் சரியாக்கப்பட்டுவிடும். தொழில்நுட்பத்தை முறையாக கையாளாமல் அறியாமையோடு கையாண்டதுதான் இதற்கு பிரச்சனை. பெரும்பாலான தமிழ் விளம்பரங்கள் இப்போதெல்லாம் நேரடியாக ஆங்கிலத்திலிருந்து அப்படியே மொழியாக்கம் செய்யப்படுத்தவதுதான் இதற்கு காரணம்.
தொழில்நுட்பம் தமிழுக்கு கை கொடுத்தாலும் தமிழ்மொழி சார்ந்த புலமை இல்லாதவர்கள் இந்த பணியை செய்ததால் எழுத்துப் பிழை ஏற்பட்டிருக்கலாம். தமிழ் மட்டுமல்லாது பெரும்பாலான மாநில மொழிகளில் எழுத்து பிழை சிக்கல் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இதற்கெல்லாம், காரணம் ஹிந்தி மொழியை வளர்க்க வேண்டுமென்ற மொழி அரசியல் ஆர்வம்தான். அதைவிடுத்து, மத்திய அரசாங்கம் தேசிய மொழிகள் அனைத்தையும் ஒரேவிதமான முக்கியத்துவம் கொடுத்து சமமான மொழி வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும்” என்றார்.
இவர்களைப் போலவே நாம் பேசிய பெரும்பாலான தமிழ் மொழி ஆர்வலர்கள் ‘தாய் தமிழ் மொழியை பள்ளிகளை கட்டாயம் மொழி பாடமாக மாற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையை ஒருமித்த குரலில் அரசாங்கத்தின் காதுகளில் விழும்படி உரக்க சொல்லியிருந்தனர்.
எது எப்படியிருந்தாலும் எழுத்து பிழையோடு ஒளிபரப்பாகும் அந்த விழிப்புணர்வு விளம்பரத்தில் உடனடியாக மத்திய அரசாங்கம் மாற்றியாக வேண்டும்.
சிவரஞ்சனி