இரட்டை இலை சின்னம் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஒதுக்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
நக்கீரன் இணையதளத்திடம் பேசிய அதிமுக எம்எல்ஏ செம்மலை, டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்பார்த்த தீர்ப்புதான். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையிலான இந்த இயக்கம்தான் உண்மையான அதிமுக என்று டெல்லி உயர்நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை நிருபித்திருக்கிறது.
ஏற்கனவே இந்த வழக்கில் இந்த இரு தலைவர்கள் தலைமையிலான கழகம்தான் உண்மையான அதிமுக தேர்தல் ஆணையம் கூறியது. அதிமுக உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 90 சதவீதத்திற்கு மேல் இந்த இயக்கத்தில் இருப்பதன் அடிப்படையில்தான் தேர்தல் ஆணையம் எங்களுடைய தலைமைக்கு இரட்டை இலையை ஒதுக்கியது.
அதனை எதிர்த்து டிடிவி தினகரன், எந்தவித முகாந்திரமும் இல்லாமல், எந்தவித அடிப்படையும் ஆதாரமும் இல்லாமல் வேண்டுமென்றே இந்த வழக்கை இழுத்தடிப்பதற்காக டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார். அங்கும் எங்களுக்கு நல்ல தீர்ப்பு வந்திருக்கிறது.
எங்களிடம் இருந்து அதிருப்தியாளர்களாக அங்கு சென்றவர்களை ஏமாற்றவதற்காக அதிமுகவையும், இரட்டை இலையையும் கைப்பற்றப்போகிறேன் என்று இதுவரை தினகரன் ஏமாற்றிக்கொண்டிருந்தார். இன்னமும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அவருடைய அணியைச் சேர்ந்தவர்கள் போட்டியிட்டால் அவர்களுக்கு குக்கர் சின்னம் வேண்டுமென்று கோரிக்கை வைத்தார். அதுவும் நிச்சயமாக தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்படும். தேர்தல் ஆணையமோ அல்லது தேர்தல் அதிகாரியோ ஒரு வேட்பாளருக்கு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றால், அந்த வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட கட்சியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் அல்லது குறைந்தப்பட்சம் பதிவு செய்யப்பட்டிருந்த கட்சியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஆனால் தினகரன் பதிவு செய்யால் அமமுக என்று பெயர் வைத்திருக்கிறார். எனவே தேர்தலில் அவருடைய அணியைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் குச்சர் சின்னம் கிடைக்க வாய்ப்பு இல்லை.
தினகரன் அவருடைய அணியில் இருப்பவர்களை இன்னும் எத்தனைக்காலத்திற்கு ஏமாற்றிக்கொண்டிருப்பார் என்று கேள்விக்குறியாக இருக்கிறது. இன்னும் அவரை நம்பி வீண்போக வேண்டாம் என்று அந்த தரப்பில் உள்ள உண்மையான தொண்டர்களுக்கு என்னுடைய வேண்டுகோள். ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து தினகரன் துரோகம் இழைத்து வருகிறார். காரணம், இவருக்கும் இந்த இயக்கத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இயக்கத்தில் ஒரு சாதாரண உறுப்பினராக அல்லது தலைமை வழங்கும் பொறுப்பை ஏற்று அதனை பயன்படுத்தி திருப்தியாக இருந்திருக்கலாம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கட்டிக்காத்த இயக்கத்தை தலைமை தாங்க வேண்டும் என்ற எண்ணம், பேராசை இவருக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் வாக்குகளை தினகரன் பிரிப்பார் என்று கூறுகிறார்களே?
எங்களுடைய வாக்குகளை அவர் பிரிப்பார் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அதைத்தான் நான் சொல்கிறேன், இது ஜெயலலிதாவுக்கு செய்கிற மாபெரும் துரோகம். ஜெயலலிதா வழிநடத்திய இயக்கம் எங்கள் கையில் இருக்கிறது. இந்த இயக்கம் தோற்க வேண்டும் என்று அவர் செயல்பட்டு வாக்குகளை பிரிப்பாரேயானால் ஜெயலலிதாவுக்கு அவர் செய்கிற மிகப்பெரும் துரோகம்தான். இந்த துரோகத்தை தொடர்ந்து செய்து வருகிறார் தினகரன். ஜெயலலிதாவின் ஆன்மா நிச்சயமாக தினகரனை மன்னிக்காது, ஏதாவது ஒரு வகையில் தண்டிக்கும். இவ்வாறு கூறினார்.